ஞாயிறு, 10 ஜூன், 2012

மைலேஜ் மன்னன் TATA NANO


வடிவமைப்பு, தரம் என அனைத்திலும் நானோ கார் குறித்து பல அதிருப்திகள் இருந்தாலும் அதற்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிக மைலேஜ், எளிதான பார்க்கிங், வசதிகள் என நானோ கார் பிற கார்களுடன் போட்டி போடுகிறது. சரி, நானோ கார் குறித்து நாம் சொல்வதைவிட அதன் உரிமையாளர் சொன்னால் சரியாக இருக்குமல்லவா?
ஆம், பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரும், நமது வாசகருமான ரவிக்குமார் தனது நானோ கார் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். எல்எக்ஸ் டாப் வேரியன்ட் நானோ காரை வைத்துள்ளேன். பெரும்பாலும் பெங்களூரில்தான் அலுவலகப் பணிகள் என்பதால் அன்றாட பயன்பாட்டுக்கு நானோ காரை பயன்படுத்துகிறேன்.

போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு நானோ கார் பெஸ்ட். பார்க்கிங் பிரச்னையும் இருப்பதில்லை. சிறிய இடத்திலேயே திருப்பவும் முடியும் என்பதால் பிற கார்களை ஓட்டுவதை விட நானோ ஓட்டும்போது டென்ஷன் ப்ரீ. குறுகிய சாலைகளில் கூட எளிதாக செல்லலாம்.
மேலும், நானோ காரில் நெடுந்தூர பயணங்களும் சென்றிருக்கிறேன். நெடுஞ்சாலையில் செல்லும்போது லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் செல்கிறது. நகர்ப்புறங்களில் 18 கிமீ மைலேஜ் தருகிறது. ஒரே நாளில் 300 கிமீ கூட சென்றுள்ளேன். ஆனால், எந்தவொரு பிரச்னையும் இல்லை. சஸ்பென்ஷன், ஏசி சிறப்பாக இருக்கிறது.
சமீபத்தில் மங்களூர் சென்று வந்தேன். முழுக்க முழுக்க ஏசி ஆன் செய்துவிட்டு சென்றபோது லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் கொடுத்தது. எகிறி வரும் பெட்ரோல் விலைக்கு நானோ கார் சிறந்ததாக கருதுகிறேன். எனவே, கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிகுந்த காராகவே நானோவை பார்க்கிறேன்," என்று முடித்தார் ரவிக்குமார்

கருத்துகள் இல்லை: