செவ்வாய், 12 ஜூன், 2012

வீரபாண்டியார் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கடும் கோபம்? Share

வீரபாண்டியார் மீது மே(லி)டத்துக்கு ஏன் ஏற்பட்டது கடும் கோபம்?< சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த தடவை அவர் கைது செய்யப்பட்டபோது கொடுக்கப்பட்ட ட்ரீட்மென்டைவிட, இம்முறை போலீஸ் மிகக் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிகிறது.
சேலம் அங்கம்மாள் காலனியில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சுமார் 30 பேர் மீது பள்ளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பதிவு தொடர்பாக கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், இப்போது வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. மே(லி)டம் அவர்மீது கோபமாக இருப்பதாக, கடந்த வாரமே போலீஸ் வட்டாரங்களில் பேச்சு அடிபடத் துவங்கியிருந்தது. ஆச்சர்யம் என்னவென்றால், எதற்காக இந்த திடீர் கோபம் என்பது உளவுத்துறையில் உள்ள பலருக்கே புரியவில்லை.

வீரபாண்டியார் சமீப காலமாக சர்ச்சையில் சிக்கிக் கொண்ட விவகாரம் அனைத்துமே, அவரது உட்கட்சி விவகாரங்கள். ஆளும் கட்சிக்கு அதால் எந்த இடையூறும் கிடையாது. இம்முறை கைது செய்யப்பட்ட வீரபாண்டியார் சேலம் சிறைக்கும், சென்னை புழல் சிறைக்கும், வேலூர் சிறைக்குமாக அலைக்கழிக்கப்படும் அளவுக்கு, மேலிடத்துக்கு அப்படியென்ன கோபம் என்பதே பலருக்கும் ஏற்பட்டுள்ள குழப்பம்.
வீரபாண்டியாரை கைது செய்தபோது, அவரை மதியம் 1 மணிக்கு வேனில் ஏற்றிய போலீஸ், மறு நாள் அதிகாலை வரை வேனில் வைத்து அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்படும் அளவுக்கு உள்ளது அவரது நிலைமை.
இந்தக் கடும் நடவடிக்கைகளின் பின்னணியில் வெளியே வராத வேறு ஏதோ ஒரு விஷயம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந் நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார். “என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனது வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.
சேலம் அங்கம்மாள் காலனி குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், வீரபாண்டியாருக்கு எதிராக ஆதாரங்கள் ஸ்ட்ராங்காக இல்லாவிட்டால் (இல்லை என்றுதான் நாம் கேள்விப்பட்டோம்) வேறு ஏதாவது வழக்குகளும் பாயலாம் என்பதே இன்றுள்ள நிலைமை.

கருத்துகள் இல்லை: