புதன், 13 ஜூன், 2012

மர்ம சந்நியாசி – 4 சந்நியாசியும் மருத்துவரும் நீதிபதியின் தனிஅறைக்கு அழைத்துவரப்பட்டனர்.


கிரிக்கெட் விளையாடத் தெரியுமா? ஸ்டம்ப்ஸ் என்றால் என்ன? LBW என்றால் என்ன? Crease என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? அம்பயர் என்பவர் யார்? டென்னிஸ் விளையாட்டில் டியூஸ் என்றால் என்ன? வாண்டேஜ்-இன் என்றால் என்ன? பில்லியர்ட்ஸ் விளையாட்டு என்றால் என்ன? கால்பந்து விளையாட்டில் cue half-back மற்றும் centre forward  என்றால் என்ன?
அடுத்ததாக மேற்கத்திய ஆடைகளைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. மிலிட்டரி காலர் என்றால் என்ன? Lounge suit என்றால் என்ன? Chesterfield cloth என்றால் என்ன?
அடுத்ததாக சாப்பாட்டு மேஜையில் வைக்கப்படும் பொருள்களைப் பற்றி சவுத்ரி கேட்கலானார். Salt cellar, cruet stand, tumbler, napkin cloth என்று எதையும் விட்டு வைக்கவில்லை. புகைப்படக்கருவி, கேமரா, ஃபோக்கஸ், லென்ஸ்…….. பற்றியும் கேட்கப்பட்டன. Crushed food என்றால் என்ன என்று கேட்கப்பட்டபோது, சன்னியாசி சாவகாசமாக அது குதிரைகளுக்கு வழங்கப்படும் தீனி என்றார்.

அடுத்து வேட்டை. Muzzle end, breach end, magpie, cat’s eye, bulls eye, cordite, choke, bore, Martini Henri. ஆனால் இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் வரவில்லை. வழக்கறிஞர் சவுத்ரி ஒரு விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டார். வேட்டையாடுபவர்களுக்குத் துப்பாக்கியை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்திருந்தால் போதும், அதைப் பற்றிய விளக்கங்கள் அவருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல் சவுத்ரி, நீதிமன்றத்தில் நிரூபிக்க நினைத்தது மேஜோ குமார் ஆங்கிலயேர்களைப் போல அவர்களது முறையில் உணவு உட்கொள்வார் என்று. அதை நிரூபிக்கும் பொருட்டு 1908ம் ஆண்டு கிச்சனர் துரை ராஜ்பாரிக்கு வந்தபோது, அவருடம் சேர்ந்து மூன்று ராஜகுமார்களும் விருந்துண்டனர் என்று பிபாவதியின் சார்பில் சாட்சியம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சாட்சியம் பொய் என்று நிரூபணம் ஆனது. காரணம் கிச்சனர் துரை ராஜ்பாரிக்கு வந்தபோது, அவருடன் உணவு உட்கொண்டவர்கள் மூத்த குமாரும் இளைய குமாரும் தான். மேஜோ குமார், கிச்சனர் துரை வேட்டையாடுவதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கானகத்துக்குச் சென்றுவிட்டார்.
மேஜோ குமார் யாருக்கும் அடங்காத சுதந்திரப் பறவையாக வாழ்க்கையை சந்தோஷமாக கழித்தானே தவிர, அவனுக்கு ஆங்கில மோகம் கொஞ்சமும் இல்லை.
மேஜோ குமார் நன்கு படித்தவனாகவும் உலகஅறிவு உள்ளவனாகவும் இருந்திருந்தால், அத்தகைய கேள்விகளை எழுப்பியிருக்கலாம்.  மேஜோ குமார் பள்ளிக்கூடத்துக்கே செல்லாதவன். அதிகபட்சம் தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தெரியும், அவ்வளவுதான். அப்படி இருக்கையில் சந்நியாசியிடம் அது போன்ற கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் சொல்லவில்லை என்று சொல்வது ஏற்புடையதாகாது.
சவுத்ரி மேலும் ஒரு தவறைச் செய்தார். சந்நியாசியிடம் அவருடைய முந்தைய வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை மட்டும் கேட்டுவிட்டு, மற்ற விஷயங்களை விசாரிக்காமல் விட்டுவிட்டார்.  யாராவது முன்கூட்டியே அவருக்கு இதுபற்றி சொல்லிகொடுத்திருக்கலாம் என்பது அவர் கணிப்பு. ஆனால் அதற்காக அந்த விஷயங்களில் கேள்வி கேட்காமல் விடுவதும் சரியல்ல. ஒருவருக்கு மற்றவரின் வாழ்க்கை குறிப்புகள் எவ்வளவுதான் சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரால் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்கமுடியாது. எப்போது எங்கே குறுக்கு விசாரணை மேற்கொள்வார்கள் என்பதும் தெரியாதல்லவா?
குறுக்கு விசாரணையில் சவுத்ரி கேட்ட கேள்விகளுக்கு சந்நியாசி அளித்த பதில்களைத் தொகுத்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலனானது. மேஜோ குமார் ஆங்கிலேயர்கள் போல் ஆடை உடுத்தவில்லை, ஆங்கிலேயர்கள் போல் உணவு அருந்தவில்லை, ஆங்கிலேயர்கள் போல் விருந்துக்குச் செல்லவில்லை, ஆங்கிலேயர்கள் விளையாடிய விளையாட்டுகளை விளையாடவில்லை. மொத்தத்தில், சவுத்ரி சந்நியாசிடம் செய்த குறுக்கு விசாரணை சன்னியாசிக்கு சாதகமாகவே மாறியது.
உங்களுக்குத் தபலா வாசிக்க தெரியுமா, பாடத் தெரியுமா? என்றெல்லாம்கூட கேட்டார். வங்காள பாட்டிலிருந்து ஒரு சில வரிகளையும் பாடச்சொன்னார். அதற்கு சந்நியாசி முடியாது என்று பதிலளித்து விட்டார்.
ஆச்சர்யம்! ராஜ்பாரி அரண்மனையில் எப்பொழுதும் இரவில் பாட்டு, நடனம் என்று அனைத்து விதமான கச்சேரிகளும் நடைபெறும். மேலும், ஜோதிர்மாயி தன்னுடைய விசாரணையின் போது, தனது தம்பி குளிக்கும்போது ஓரிரண்டு வரிகள் வங்காளத்தில் பாடுவார் என்று சொல்லியிருந்தார். வங்காள தேசத்தில் பாட்டுப் பாடாதவர்களே இருக்கமுடியாது. இசை அவர்களுடைய வாழ்க்கையோடு ஒன்றியது. சந்நியாசி ஹிந்துஸ்தானியாகவே இருந்தாலும், 13 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளத்தில் இருந்தவர். அப்படியிருக்க, அவருக்கு பாடல் வரிகள் தெரியவில்லை என்றால், அவர் போலியாகத்தான் இருக்க வேண்டும். இது சவுத்ரியின் வாதம்.
ஆனால் நீதிபதி, இந்த வாதத்தை ஏற்கவில்லை. அதற்கு அவர் தன் தீர்ப்பில் வெளியிட்ட காரணங்கள் பின்வருமாறு :
‘பாடுபவர்கள் எல்லோருமே மேடைப் பாடகர்கள் அல்லர். வெகுஜன மக்கள், படிப்பறிவில்லாதவர்கள் சாதாரணமாக பொது இடங்களில் பாடுவதில்லை. நிறைய வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவர்களைப் பாடவைக்கமுடியும். அதுவும் கூட உறுதியல்ல. ஒரு விவசாயியோ அல்லது படிப்பறிவில்லாதவனோ அனைவருக்கும் மத்தியில் நீதிமன்றத்தில் பாடு என்றால் பாடமாட்டான். அவர்களுடைய கூச்ச சுபாவம் அவர்களைப் பாடவிடாமல் தடுக்கும். படிப்பறிவு பெற்றவர்கள் கதை தனி. அவர்களுக்கு மற்றவர்கள் போல் அவ்வளவு கூச்ச சுபாவம் இருக்காது. அவர்ளுடைய படிப்பறிவு அவர்களது வெட்கத்தைப் போக்கிவிடும். ராகம் தெரியவில்லை என்றாலும் தைரியமாகப் பாடுவார்கள். ஆனால் மற்றவர்கள் விஷயம் அப்படி இல்லை. சில பாடல் வரிகள் அர்த்தமற்றதாக முட்டாள்தனமாக இருக்கும், அல்லது காதலைப் பற்றி இருக்கும். இம்மாதிரி பாடல்களை யாரும் நீதிமன்றம் போன்ற பொது இடங்களில் பாடமாட்டார்கள். அப்படி பாடுவது சரியாக இருக்காது என்று அவர்கள் எண்ணலாம். மேஜோ குமாரின் பின்னணியிலும், அவனுடைய குணாதிசயங்களின் அடிப்படையிலும்தான் இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கவேண்டும். இந்தப் பின்னூட்டத்தில் பார்க்கும்பொழுது, சன்னியாசி நீதிமன்றத்தில் பாட மறுத்தது ஒன்றும் வியப்பில்லை’.
மேஜோ குமார் உருவாக்கிய வனவிலங்குப் பூங்காவில் அவருக்குப் பிடித்த விலங்கைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. சந்நியாசியும் அதற்கு வெள்ளை நரி என்று பதிலளித்தார். ஆனால் சவுத்ரி அது உண்மையில்லை என்று வாதிட்டார். ஆனால் சவுத்ரியின் (பிபாவதியின்) போதாத காலம், அவர் தரப்பு சாட்சி ஒருவர் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் மேஜோ குமாருக்கு பிடித்த விலங்கு வெள்ளை நரி என்பதை மட்டும் சொல்லாமல், மேஜோ ராஜா அந்த விலங்குக்கு தன் கையாலேயே உணவு பரிமாறுவார் என்று வேறு சொல்லித் தொலைத்துவிட்டார்.
இன்னொரு சாட்சி சொன்ன சாட்சியமும் பிபாவதியின் வழக்கிற்கு எதிராகப் போனது. மேஜோ குமார் யானை மேல் ஏறும் போது வித்தியாசமாக ஏறுவார். மேஜோ குமார் முதலில் யானையின் துதிக்கையில் தன் காலை வைத்து பின்னர் யானையின் காதை இழுத்துப்பிடித்து ஒரேயடியாக யானையின் மேல் ஏறி உட்காருவார். இம்மாதிரி யானையின் மீது ஏறுவதற்கு தனிப்பட்ட பயிற்சியும் திறமையும் தேவை. சவுத்ரியின் வாதம் என்னவென்றால், யானை மீது ஏறுவதற்கு அரண்மனையில் பிரத்தியேக ஏணிகள் இருக்கும்போது ஏன் இப்படியெல்லாம் ஏறிக் கஷ்டப்படுவானேன் என்பதுதான். ஆனால் பிபாவதியின் சாட்சிகளில் ஒருவர், மேஜோ குமார் யானையின் மீது ஏறும்பொழுது ஏணிகளைப் பயன்படுத்தமாட்டார், மாறாக அதனுடைய துதிக்கையில் கால்வைத்து வித்தியாசமாக ஏறுவார் என்று போட்டு உடைத்தார். மேஜோ குமார் சாரட் குதிரை வண்டியை ஓட்டும்போது, கடிவாளத்தை வலது கையில்தான் பிடிப்பான். இதைத்தான் சந்நியாசியும் கூறினார். ஆனால் சவுத்ரி, குதிரைவண்டி ஓட்டுகிறவர்கள் அனைவருமே கடிவாளத்தை தங்களுடைய இடது கையில்தான் பிடித்திருப்பார்கள் என்று வாதிட்டார். ஆனால் கூண்டில் ஏறி சாட்சி சொன்ன அனேகமானவர்கள், மேஜோ குமார் எவ்வளவு வேகமாக குதிரைவண்டியை ஓட்டினாலும் கடிவாளத்தை தன்னுடைய வலது கையில்தான் பிடித்திருப்பார் என்று சாட்சியம் அளித்தனர்.
மேஜோ குமார் பல பேருக்கு எழுதியதாகப் பல கடிதங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார், பிபாவதியின் வழக்கறிஞர் சவுத்ரி. அவருடைய வாதம், மேஜோ குமாருக்கு எழுதப்படிக்கத் தெரியும் என்பது. அந்தக் கடிதங்களையெல்லாம் சந்நியாசி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். விசித்திரமாக, எல்லாக் கடிதங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் இடம்பெற்றிருந்தன. அதாவது அனைத்துக் கடிதங்களுமே, அரண்மனைக்கு வந்துபோன ஆங்கில துரைகளுக்கு எழுதப்பட்டனவாகவே இருந்தன. அக்கடிதங்களில் இடம்பெற்ற விவரங்களும் ஒரே மாதிரியானவையாக இருந்தன. நீதிபதி இக்கடிதங்கள் எல்லாம் மோசடி என்று கூறிவிட்டார்.
மேஜோ குமாரின் வாழ்க்கை வரலாறு, அவன் எப்படிப்பட்டவன், அவன் செய்தது, செய்யாதது என அனைத்து விவகாரங்களும் அலசி ஆராயப்பட்டன.
தன்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சந்நியாசி சரியாக பதிலளித்தார். அவரைக் குறுக்கு விசாரணை செய்ததில், பிபாவதிக்கு சாதகமாக ஒன்றும் தேரவில்லை. இப்படியே போனால் பிபாவதி வழக்கு தவிடுபொடியாகிவிடும் என்று உணர்ந்த அவருடைய வழக்கறிஞர் சவுத்ரி, வழக்கை வேறு விதத்தில் கையாண்டார். சந்நியாசிக்கும் மேஜோ குமாருக்கும் உள்ள வேற்றுமையை நிரூபிப்பதில் கவனத்தை செலுத்தினார். ஆனால்அவரால் நிரூபிக்க முடியவில்லை.
ராஜ்பாரியில் வெகுகாலம் மேலாளராக இருந்த ராய் காளி பிரஸன்ன கோஷ் என்பவர் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டார். பிரஸன்ன கோஷுக்கு மேஜோ குமாரைப் பிறந்ததிலிருந்தே தெரியும். பிரஸன்ன கோஷ் சொன்ன விவரங்கள் : மேஜோ குமார் நல்ல நிறம். அவர் கண்களும், முடியும் பழுப்பு நிறத்தில் இருக்கும். சுமாரான உயரம். நல்ல உடல்வாகு.
மேஜோ குமார் ஸ்காட்டிஷ் நிறுவனத்தில் எடுத்த பாலிசியும் தொடர்புடைய ஆவணங்களும் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டன. பாலிசி எடுக்கும்போது ஒரு ஆங்கிலேய மருத்துவர், மேஜோ குமாரை முழு உடல் பரிசோதனை செய்திருந்தார். பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்ற விவரங்களும் சாட்சிகள் சொன்ன விவரங்களும் சந்நியாசியோடு ஒத்துப்போயின.
இதுபோக மேஜோ குமாருடைய 8 பழைய புகைப்படங்களும் சந்நியாசியின் 16 புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டன. இரு தரப்பிலிருந்தும் தலா இரண்டு பிரபல புகைப்படக்காரர்கள் சாட்சியம் அளித்தனர். பிபாவதி தரப்பின் சாட்சியங்களில் ஒருவர் பெர்சி பிரவுன். இவர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற ராயல் கலைக்கல்லூரியில் பயின்றவர். பின்னர் கல்லத்தா கலைக் கல்லூரியின் முதல்வராக 18 வருடங்கள் பணியாற்றினார். அவர் இரு தரப்பு புகைப்படங்களையும் பார்த்துவிட்டு அதில் வேற்றுமைதான் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்தார். அதே கருத்தைதான் கல்கத்தாவில் உள்ள பிரபல புகைப்பட நிறுவனமான போர்ன் அன்ட் ஷப்பர்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரான மசில் வைட்டும் தெரிவித்தார்.
சந்நியாசியின் சார்பில் இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். முதலாமவர், எட்னா லாரன்ஸ் என்ற கல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல புகைப்பட நிறுவனத்தை சேர்ந்த விண்டர்டன். பெர்லின், முனிச், டிரஸ்டென், பாரிஸ், லண்டன் ஆகிய நகரங்களில் புகைப்படத் துறையில் பயிற்சி பெற்றவர். இவர் மேஜோ குமாரின் புகைப்படத்திலும் சந்நியாசியின் புகைபடத்திலும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்று தெரிவித்தார். அவர் முக்கியமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்.  சந்நியாசியின் புகைப்படத்தில் காது வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறது. அதே வித்தியாசம் மேஜோ குமாருடைய புகைப்படத்திலும் தெரிகிறது. இரண்டு புகைப்படங்களிலும் மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றோடொன்று ஒட்டியிருக்கவில்லை. இரண்டு புகைப்படங்களிலும் கண் இமைக்கு கீழே சதை வளர்ச்சியிருக்கிறது. மேலும் இடது கையில் உள்ள நடு விரலும், ஆள் காட்டி விரலும் ஒரே அளவில் இருக்கின்றன.
சந்நியாசியின் இன்னோரு சாட்சியான பேராசிரியர் கங்குலி, ஓவியக் கலையில் தேர்ச்சி பெற்ற பிரசத்தி பெற்ற ஓவியர். இவர் நிறைய மகாராஜாக்களையும் ஆங்கில கவர்னர்களையும் தத்ரூபமாக ஓவீயம் தீட்டியிருந்தார். அந்த காலத்திலேயே ஒரு முழுநீள ஓவியம் தீட்டுவதற்கு சுமார் 7000 ரூபாய் சம்பளமாக வாங்குவார். அவர் அரசு கலைக் கல்லூரியில் துணை மேலாளராகப் பணியாற்றியவர். பிபாவதியின் சாட்சியான பெர்சி பிரவுனின் நெருங்கிய நண்பரும்கூட. ஒவியத்தின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவராதலால், கங்குலியால் தன்னிடம் காண்பிக்கபட்ட புகைப்படங்களில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை தெளிவாகச் சொல்ல முடிந்தது. அவர் தன்னுடைய பயிற்சியையும் அனுபவத்தையும் வைத்து இரு தரப்பிலிருந்தும் காண்பிக்கப்பட்ட புகைப்படங்களும் ஒரே ஆளுடையது என்ற கருத்தைத் தெரிவித்தார்.  தன் அனுபவத்தில் இதுவரைக்கும் இப்படி ஒரு காது அமைப்பு கொண்ட ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறினார்.
நீதிபதி கங்குலியின் சாட்சியத்தை, உண்மையானதாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது என்று ஏற்றுக்கொண்டார்.
அடுத்து சந்நியாசியின் மார்பு. பிபாவதி சாட்சிக் கூண்டில் ஏறி தன்னுடைய கணவரான மேஜோ குமாருக்கு மார்பில் முடியே இருக்காது என்று சாட்சியம் அளித்தார். ஆனால் மேஜோ குமாரின் சகோதரியோ தன்னுடைய தம்பியின் மார்பில் நிறைய முடிகள் காணப்படும் என்றார். மேஜோ குமாருக்கு மஸாஜ் செய்தவர்கள், வேலையாள்கள், மல் யுத்தம் செய்தவர்கள் என்று ஆறு சாட்சிகளும் இதையே உறுதிபடுத்தினார்கள். மேஜோ குமார் மல் யுத்தத்துக்கு வருவதற்கு முன்னர் தன்னுடைய மார்பை சவரம் செய்து கொண்டுதான் வருவார் என்றார்கள். இது பாவல் ராஜ்ஜியத்தில் ஒரு பழக்கமாக உள்ளது என்று நீதிபதியும் தன் தீர்ப்பில் வெளியிட்டிருக்கிறார்.
அடுத்து மேஜோ குமாரின் பாத அளவு. மேஜோ குமார் சுமாரான உயரம்தான். அவருக்கு எப்பொழுதும் காலணிகள் மற்றும் ஷு தயார் செய்து தருபவர் கல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல சீன ஷு தயாரிப்பாளர். அவர் நீதிமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார்.  மேஜோ குமாரின் ஷு அளவு 6 என்றும், சந்நியாசியின் ஷு அளவும் அதேதான் என்றும் அவர் உறுதியளித்தார்.
சந்நியாசியின் இடது கணுக்காலில் ஒரு தழும்பு இருந்தது. மேஜோ குமார் குதிரை லாயத்தைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஒரு குதிரை வண்டி அவரது காலில் ஏறியது. அப்போது ஏற்பட்ட தழும்பு அது. இதை உறுதிசெய்து வாதிட்டார் சந்நியாசியின் வழக்கறிஞர் சாட்டர்ஜி. ஆனால் பிபாவதியின் வழக்கறிஞர் இதைப் பொய்கதை என்று நிராகரித்தார். இந்த விபத்து மோஜோ குமாரின் தம்பியான சோட்டு குமாரின் திருமணத்துக்கு 6 நாள்கள் முன்பு ஏற்பட்டது. அந்தத் திருமண விழாவிலும்கூட, முடவர்கள் பயன்படுத்தும் உதைகாலையே மோஜோ குமார் பயன்படுத்தினார் என்று பல சாட்சிகள் தெரிவித்தனர். இன்ஷுரன்ஸ் கம்பெனியில் இருந்து வரவழைக்கப்பட்ட மேஜோ குமாரின் மருத்துவ அறிக்கையிலும், இந்த வடு பற்றிய குறிப்பு இருந்தது.
தன்னுடைய பாதங்களின் மேல் பகுதிகளில் தோல் தடிமனாகி செதில் செதிலாக இருப்பதைச் சந்நியாசி நீதிமன்றத்தில்  காண்பித்தார். மேஜோ குமாருக்கும் இப்படி இருக்கும் என்று கூறினார். இந்தக் கூற்று உண்மைதானா என்று விசாரிக்க ராஜ்பாரி அரண்மனையின் ஆஸ்தான மருத்துவரான டாக்டர் அஷுதோஷ் தாஸ் குப்தா வரவழைக்கப்பட்டார். டாக்டரும் எல்லோருடைய கால்களிலும் இம்மாதிரி இருக்காது. இது ஒருவகையான மரபணுவால் ஏற்பட்ட பிரத்தியேக வடிவம். பொதுவாக பாவல் ஜமீன் குடும்பத்தினர் அனைவரின் கால்களிலுமே இப்படித்தான் இருக்கும் என்றார். சோட்டு குமாரின் காலும் இப்படித்தான் இருந்தது. மேஜோ குமாரின் இரண்டு சகோதரிகளுக்கும் அவர்களது மகன் மற்றும் மகள்களின் கால்களிலும் இந்த வித்தியாச அமைப்பு இருந்தது என்று வாக்குமூலம் அளித்தார்.
அடுத்து, மூக்கு. சந்நியாசியின் மூக்கு சற்று வீக்கத்துடன் கருட மூக்கு போல காட்சியளித்தது. தனக்கு சிப்பிலிஸ் நோய் கண்டதால் மூக்கு இப்படி உருவம் பெற்றது என்றார் அவர். மேஜோ குமாரின் மூக்கும் இப்படித்தான் இருந்தது என்றார். இதை நிரூபிக்க அல்லது பொய்யாக்க இரு தரப்பிலிருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
பிரதிவாதி சார்பில் லெப்டினண்ட் கர்னல் டென்ஹாம் வைட் சாட்சியம் அளித்தார். இவர் கல்கத்தா பிரஸிடன்சி மருத்துவமனையின் ரெஸிடன்ட் சர்ஜன். மேலும் இவர் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் ரண சிகிச்சையில் பேராசிரியராக இருந்தார். பிரதிவாதி சார்பில் சாட்சியளித்த இன்னொருவர் மேஜர் தாமஸ், இவர் மான்செஸ்டர் மருத்துவமனையில் (Venereal Hospital) பணிபுரிந்துவிட்டு, இந்தியாவில் மருத்துவத் துறையில் சேர்ந்தவர். வினியரியல் என்பது பாலியல் தொடர்பான நோய்.
சன்னியாசியின் தரப்பில் சாட்சியம் அளித்தவர் லெப்டினண்ட் கர்னல் கே.கே சாட்டர்ஜி. இவர் லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.  மருத்துவத்துறையில் குறிப்பிடும்படி பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதிலும் “வெப்ப மண்டலத்தில் சிப்பிலிஸ்” என்ற இவரது புத்தகம் மிகவும் பிரபலம்.
மூன்று டாக்டர்களும், நீதிபதி முன்னிலையிலும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையிலும் சந்நியாசியின் உடலைப் பரிசோதனை செய்தனர். இந்த விவகாரத்தில் மேற்சொன்ன டாக்டர்களைத் தவிர மேலும் நான்கு டாக்டர்களும் விசாரிக்கப்பட்டனர்.
சிப்பிலிஸ் ஒரு தொற்று வியாதி. பிறப்புறுப்பின் மூலமாக இந்த வியாதி தொற்றிக்கொள்ளும். சிப்பிலிஸ் தொற்றிக்கொண்டவுடன் உடல் முழுவதும் புண் தோன்ற ஆரம்பிக்கும். பின்னர் மர்ம உறுப்புகளும் நினநீர் சுரப்பிகளும் தடிமனாகி வீக்கம் காணும். இது முதல் படி. அடுத்த கட்டமாக நோய்கிருமி ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். இது இராண்டாவது படி. அடுத்து மூன்றாவது படியாக உடல் முழுவதும் கொப்பளங்கள் வெடிக்க ஆரம்பிக்கும், கொப்பளங்கள் பெரிதாகி அந்த இடமே கட்டிப்பட்டு ரணமாகிவிடும். பார்ப்பதற்கே சகிக்க முடியாது.
இந்த ரணக்கட்டி தோலுக்கடியில், கல்லீரலில், எலும்பில் அல்லது மற்ற உடல் உறுப்புகளில் தோன்றும். இந்த இடத்தில் தான் இது தோன்றும் என்றில்லை. அந்த ரணக்கட்டியை மருந்து கொடுத்து சரி செய்தாலும், அந்த இடத்தில் அழியாது வடு தோன்றும்.
இப்பொழுது மருத்துவர்கள், சன்னியாசியின் உடலில் காணப்படும் வடுக்கள் எல்லாம் சிப்பிலிஸ் நோய் தாக்கத்தினால்தான் ஏற்பட்டனவா என்று முடிவுசெய்யவேண்டும். அதுவும் குறிப்பாக அந்த கருட மூக்கின் தோற்றம் எதனால் ஏற்பட்டது என்று நீதிமன்றத்தில் சொல்லியாகவேண்டும்.
நிபுண சாட்சிகளாக வந்த அந்த மூன்று மருத்துவர்களும் சந்நியாசியின் மூக்கின் எலும்பில் தேவையற்ற வளர்ச்சி காணப்படுவதை உறுதிசெய்தனர். ஆனால் எதனால் அவ்வாறு வளர்ந்திருக்கிறது என்று டென்ஹாம் வைட்டும் மேஜர் தாமஸும் சொல்லவில்லை. எங்காவது அடிபட்டு கூட மூக்கின் எலும்பு வீக்கம் அடைந்திருக்கலாம் அல்லது சிப்பிலிஸ் நோயினால் கூட இது ஏற்பட்டிருக்கலாம் என்றனர். ஆனால் கர்னல் சாட்டர்ஜி, இந்த வீக்கம் கண்டிப்பாக சிப்பிலிஸ் நோயினால்தான் ஏற்பட்டிருக்கும் என்று திட்டவட்டமாக கூறினார். அதற்கு ஆதாரமாக “தாமஸ் அன் மையில்ஸ்” என்ற ‘மேனுவல் ஆப் சர்ஜரி’ புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டினார்.
நீதிபதி அனைத்து மருத்துவர்களையும் தன்னுடைய தனிப்பட்ட அறைக்கு வரச்சொன்னார். சந்நியாசி நீதிபதியின் அறைக்கு கூட்டி வரப்பட்டார். கூடவே வழக்கறிஞர்களும் சென்றனர். சந்நியாசி ஒரு மேஜை மீது படுக்கவைக்கப்பட்டார். டாக்டர் டென்ஹாம் வைட், சந்நியாசியின் பிஜத்தை மூன்று முறை அழுத்தினார். மற்றவர்களாக இருந்தால் ஒரு அழுத்தத்திற்கே வலி தாங்கமுடியாமல் அழுது இருப்பார்கள். ஆனால் சந்நியாசி ஒன்றும் நடக்காதது போல் இருந்தார். சிப்பிலிஸ் கண்டவர்களின் முக்கிய அறிகுறியே பிஜத்தில் அழுத்தம் ஏற்பட்டால் வலி ஒன்றும் இருக்காது என்பதுதான்.
மேலும், நாக்கில் ஏற்பட்ட வெடிப்பு, அவர் கால் விரல்களுக்கு இடையில் காணப்படும் ரண வடு (மருத்துவப் பெயர் Rhagades), அழுத்தத்துடனும் சத்தத்துடனும் அவர் வெளியிடும் மூச்சுக்காற்று ஆகியவை சிப்பிலிஸ் நோய் கண்டவர்களுக்குத்தான் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் விளக்கினார் கர்னல் சாட்டர்ஜி.
மேஜோ குமாரின் ஆண்குறியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மச்சம் இருந்தது. ஆனால், இதை யார் உறுதிபடுத்துவார்கள்? அதற்காக ஒருவர் வந்தார். அவர் வந்ததும், எப்போதும் இருந்ததை விட நீதிமன்றம் கூடுதல் சலசலப்புக்கு ஆளானது. நீதிமன்றத்தில் அந்த விவகாரத்தைக் குறித்து சாட்சி சொல்ல வந்தது வேறு யாரும் இல்லை, நமக்கு முன்னரே அறிமுகமான நடன மங்கை மற்றும் மேஜோ குமாருக்கு இன்னம் பிறவான அந்த எலோகேஷி தான். இப்போது அவளுக்கு சுமார் 35 வயது இருக்கும். சாட்சிக் கூண்டில் எலோகேஷி ஏறினாள். அவளிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவளும் ஆமாம் அது உண்மைதான் என்றாள். எலோகேஷியின் சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மேஜோ குமாரை வளர்த்த வேலைக்காரர்களும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் சொன்னார்கள். ஆமாம் மச்சம் உண்மைதான்.
சந்நியாசியிடம் அந்த மச்சம் இருக்கிறதா? நீதிபதி அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள வேண்டுமே! சந்நியாசியும் மருத்துவரும் நீதிபதியின் தனிஅறைக்கு அழைத்துவரப்பட்டனர். ஆம்,  குறிப்பிட்ட இடத்தில் மச்சம் இருந்தது. நீதிபதி மேஜோ குமாரின் மச்சத்தை பரிசோதித்துவிட்டு, மீண்டும் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். ஆம், மச்சம் காணப்பட்டது என்று அவர் அறிவித்ததுதான் தாமதம். அங்கிருந்தவர்களெல்லாம் ஹோவென்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
அடுத்தநாள் செய்தித்தாள்களில், நீதிமன்றத்தில் நடந்த சுவாரஸ்யமான செய்திகள் விரிவாக இடம்பெற்றிருந்தன. வரவேற்பு காரணமாக, வழக்கத்தைவிட கூடுதல் பிரதிகள் அச்சிடவேண்டியிருந்தது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: