வெள்ளி, 15 ஜூன், 2012

நித்தியின் ஆண்டு வருமானம் 90 கோடிஅம்பானியின் ஆண்டு சம்பளம் 15 கோடி

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

நித்திஆண்டுக்கு யின் வருமானம்
சென்னை: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், 2009ம் ஆண்டின், சம்பளம் 15 கோடி ரூபாய். அதே ஆண்டு, "கிளு கிளு' சாமியார் நித்யானந்தாவின் வருமானம், 90 கோடி ரூபாய்!
சிலை விற்பனை: நித்யானந்தாவின் நெருங்கிய சீடரான ராஜேஷ் கிருஷ்ணன் என்ற நித்ய சேவகானந்தா என்பவரின் பெயரில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், டியூரேட் நகரில், "நித்யானந்தா டெம்பிள் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த 2007ல், துவக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு சாமி சிலைகள், கவரிங் நகைகள், ருத்ராட்ச மாலைகள், விதவிதமான காவி மற்றும் பல வண்ண ஆடைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, அமெரிக்காவில் வசித்து வரும் பக்தி மிக்க இந்தியர்கள், நித்யானந்தா சீடர்கள் மற்றும் வெளிநாட்டவரிடம் விற்பனை செய்து வந்தது. இதில், அனைத்து பொருட்களும் பல மடங்கு லாபத்திற்கு விற்கப்பட்டன. உதாரணத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிலை, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும். இதன் மூலம், 2009ல், அவர் 12 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார்.


யோகா கறவை: உள்நிலை விழிப்புணர்வு (இன்னர் அவேக்கனிங்) என்ற, இருபத்தோரு நாள் தியான பயிற்சி நடத்தியதன் மூலம், 8.10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளார். அமெரிக்காவில் நடக்கும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும், இந்திய ரூபாய் மதிப்பின்படி, மூன்று லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தி உள்ளனர். அடுத்தபடியாக, ஆனந்த வாழ்க்கைக் கலை (லைப் பிளிஸ் இன்ஜினியரிங்) என்ற, தியான நிகழ்ச்சி நடத்தியதன் மூலம், 7.20 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. இந்த பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு நபரும், நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவை தவிர, "ஆனந்த ஸ்புரணா புரோகிராம்' மற்றும் "நித்யானந்த ஸ்புரணா புரோகிராம்' ஆகிய தியான நிகழ்ச்சிகள், பாத பூஜை, குருபூர்ணிமா நிகழ்ச்சிகள், சில பொருட்கள் விற்பனை இவற்றின் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் நித்தி. இவ்வாறு, ஒட்டு மொத்தமாக, 2009ம் ஆண்டில் மட்டும், 87 கோடியே, 99 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து உள்ளார். இது வெறும், ஒரு ஆண்டிற்கான சம்பாத்தியம் தான்! கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்கள், இந்த கணக்கைத்தான் கூறுகின்றன. இது தவிரவும் வேறு வருமானம் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
நித்தியின் தனிப்பட்ட வங்கி கணக்கில் 32 கோடி ரூபாய்! வெளிநாடுகளில், நித்யானந்தா பல்வேறு வழிகளில் சம்பாதித்த, 32 கோடி ரூபாய் பணத்தை, தனிப்பட்ட வங்கி கணக்கு ஒன்றில் சேகரித்து வைத்திருந்தார். இது குறித்த ஆவணங்கள், "தினமலர்' நாளிதழுக்கு கிடைத்துள்ளன.



தியான நிகழ்ச்சிகள்: நித்யானந்தா, தனது தியான பீடத்தின் சார்பில், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான தியான பீடக் கிளைகளைத் திறந்து அவற்றின் மூலம் பல்வேறு தியான நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு, ஒவ்வொரு நபரிடம் இருந்தும், ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணமாக வ‹லிக்கப் பட்டது. அந்த பணம், இந்தியாவில் உள்ள ஒரு வங்கி கணக்கில் சேகரிக்கப்பட்டன. அந்த கணக்கு அவர் பெயரிலேயே, அவரது தனிப்பட்ட கணக்காக இயக்கப்பட்டது. "தினமலர்' நாளிதழுக்கு கிடைத்த ஆவணங்கள், ஒரு வங்கி கணக்கை சார்ந்தவை மட்டுமே. அவரிடம், இதுபோன்று வேறு கணக்குகள் இருந்தனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
கிடைத்த விவரங்களின் படி:
* கணக்கு குறித்த தகவல்கள் கடந்த 2006 முதல் 2010 வரையிலானவை.
* கணக்கு, தனியார் வங்கி ஒன்றில், நித்யானந்தாவின் பெயரில், அவரது தனிப்பட்ட கணக்காக இயங்கியது.
* குறிப்பிட்ட காலத்தில், அதில் 32 கோடி ரூபாய் வரை இருந்தது.
* அனைத்து வரவுகளும், டாலர்/யூரோ போன்ற அன்னிய செலாவணியில் வந்து உள்ளன.

* 90 சதவீத வரவுகள், பத்தாயிரம் டாலருக்கும் குறைவாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க வருவாய்த் துறையின் விசாரணை குடைச்சலை தடுத்துள்ளார் நித்தி.

* பெரும்பாலான வரவுகள், கொத்துக் கொத்தாக, குறிப்பிட்ட நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில், குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் அவரது சீடர்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம், "செக்' ஆக வாங்கி ஒரே நாளில் கணக்கில் செலுத்தி உள்ளனர். இவ்வகையில், 2006, ஏப்ரல் 26ம் தேதி முதல், 2010, ஏப்ரல் 5ம் தேதி வரை, மொத்தம் 32 கோடியே, 10 லட்சத்து, 92 ஆயிரத்து 735 ரூபாய் வரவாகி உள்ளது. இதில், 2010, மார்ச் 2ம் தேதி, நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக, செய்தி வெளியானதற்குப் பின்னும் கூட; மார்ச் துவங்கி, ஏப்ரல் 5ம் தேதி வரை, 1.24 லட்சம் டாலர் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிடதியில் 11: பிடதி ஆஸ்ரமத்தின் பெயரில், நித்யானந்தாவுக்கு, மொத்தம் 11 வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றில், "ஜாயின்ட் அக்கவுன்ட்டாக' அவரது தம்பியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவுக்கு, பிடதியில் மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிக் கணக்குகள் உள்ளன. நித்யானந்தா தியான பீடம், தியான பீட அறக்கட்டளை, நித்யானந்தா பவுண்டேஷன், நித்யானந்தேஸ்வர தேவஸ்தானம் ஆகியவற்றின் பெயரில், இந்த வங்கி கணக்குகள் உள்ளன. இவற்றை செயல்படுத்தும் நபர்களாக, அந்த கணக்குகளில், நித்யானந்தாவின் பெயரும், நித்ய ஈஸ்வரானந்தா என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளன. நித்ய ஈஸ்வரானந்தா என்பவர், "நித்தி'யின் தம்பி. இந்த வங்கி கணக்குகள் 2003-2007ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை: