சனி, 16 ஜூன், 2012

ஜனாதிபதி ரேஸில் அப்துல் கலாம் தோல்வியடைய சான்ஸ்

Viruvirupu புது டில்லியை மையம் கொண்டு கலக்கிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரேஸ், காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என்று அறிவிக்கும் அளவில் வந்து நிற்கிறது. இதில் ஆழ்ந்த சிக்கலில் ஆழ்ந்திருப்பவர்கள் இருவர். ஒருவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை தமது வேட்பாளர் என அறிவித்த மமதா பானர்ஜி. மற்றையவர் அவரால் அறிவிக்கப்பட்ட, சாட்சாத், அப்துல் கலாம்.
ஆக்டிவ் அரசியலில் மற்றுமொருமுறை சிக்கி திண்டாடியிருக்கிறார் அப்துல் கலாம் என்ற இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானி. தி.மு.க. தலைவர் கருணாநிதி, “கலாம் என்றால், கலகம் என்றொரு அர்த்தம்” என்று எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை, “கலாம் என்றால், பரிதாபம்” என்று மாறிவிட்டது அவரது நிலைமை.

அவுக இந்த மாதிரி குத்திட்டாக!
மமதா மற்றும் சிலரின் முயற்சிகளில், தமக்கு ஒரு சான்ஸ் இருப்பதாக அவர் நம்பினார் என்றே எடுத்துக் கொள்ளலாம். எப்படியென்றால், “நீங்கள் ஜனாதிபதி வேட்பாளரா?” என்ற கேள்விக்கு, “இல்லை” என்ற ஒற்றைப் பதிலுடன் அவர் விலகிச் சென்றிருக்க முடியும்.
ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

“ஜனாதிபதியாக, நாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்” என்று இரு தினங்களுக்கு முன் சொன்னார் அவர். “சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன்” என்று நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்தார். “அவரின் (கலாமின்) சம்மதத்துடன்தான் அவரது பெயரை அறிவிக்கிறேன்” என்று மமதா சொன்னதையும் அவர் மறுக்கவில்லை.
ஆனால் டெல்லி காட்சிகள் நேற்று மாலை தலைகீழாக மாறிப்போய் விட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், மமதாவைத் தவிர அனைவரும் அந்தப் பக்கமாக ஓடிப்போய் கொடி தூக்குகின்றனர். கடந்த 2002-ம் ஆண்டு கலாம் ஜனாதிபதியாவதற்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாதி கட்சிகூட, பிரணாப்பை ஆதரிக்கப் போவதாக அறிவித்துவிட்டது.
பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க., தோல்வியடைய சான்ஸ் உள்ள வேட்பாளரை ஆதரிக்க தயங்குவதாக தெரிகிறது. “இது தேசிய விவகாரம். நாட்டின் கௌரவம்” என்ற வார்த்தைப் பிரயோகங்களுடன், அவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க ஒரு சான்ஸ் பிரகாசமாக உள்ளது.
மமதாவின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு, அல்லது, மற்றையவர்களின் ஆதரவை போகப்போக திரட்டலாம் என்ற ‘இனிப்பு’ ஆலோசனையை வைத்துக் கொண்டு கலாம் போட்டியில் இறங்கினால், கருணாநிதியின் வாய்க்கு தான் சர்க்கரை போட வேண்டியிருக்கும்

கருத்துகள் இல்லை: