வியாழன், 7 ஜூன், 2012

சாதாரண பிரஜைகள் ஏறிய அதே கூண்டில், சிதம்பரமும் ஏறணுமா?

Viuvirupu “தேர்தல் முறைகேடு செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குக்காக நான் கூண்டிலேற மாட்டேன்” என்று கூறி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. இதையடுத்து மாண்புமிகு அமைச்சர் ப.சிதம்பரமும், மற்றைய சாதா இந்தியர்கள் ஏறும் அதே கூண்டில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தாம் வெற்றி பெற்றது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் தம்மை கூண்டில் ஏற்றி விசாரிக்கக் கூடாது என்றே அமைச்சர் ப.சிதம்பரம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர், ராஜகண்ணப்பன். அந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, கடைசி சுற்றுவரை சிதம்பரத்தின் வெற்றி, சீசோ போல மேலும் கீழுமான ஆடிக்கொண்டிருந்தது.
அந்த இழுபறியில், எப்படியோ கடைசி நிமிடத்தில் அவர் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் சிதம்பரம் விஷயத்தில் சிதம்பர ரகசியமாக ஏதோ நடந்திருக்கிறது என்ற புகாருடன், ராஜகண்ணப்பன் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழமையான இந்திய கோர்ட் சிஷ்டத்தில் தொடரப்பட்ட அந்த வழக்கு, அது பாட்டுக்கு தனக்குரிய வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
வேகமான இந்த வழக்கில்தான் கூண்டிலேற முடியாதென்று விவேகமாக மனு தாக்கல் செய்திருந்தார் அமைச்சர் சிதம்பரம்.
மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் பெரிய சிக்கல் ஏதும் கிடையாது. இதென்ன கடவுளின் தீர்ப்பா? உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்புதானே…
உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் சிதம்பரம் அப்பீல் செய்ய முடியும். சாதாரண பிரஜைகள் ஏறும் அதே கூண்டில் மாண்புமிகு சிதம்பரம் அவர்களும் ஏறுவதிலிருந்து ஏன் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தமது வாதங்களை அப்பீலில் அவர் முன்வைக்க முடியும்.
மருத்துவ காரணமா, பிரஸ்டீஜ் பிரச்னையா, கூண்டு சுத்தமாக இல்லையா, நோய்க் கிருமிகள் தொற்றும் அபாயமா என எந்தக் காரணமாக இருந்தாலும், நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய காரணத்தை அவர் கூறினால், அப்பீலில் ஜெயிக்கவும் முடியும்.
அமைச்சர் நிச்சயம் அப்பீல் செய்வார். அப்பீலில் தீர்ப்பு வருவதற்குமுன், தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். ஜெய் ஹிந்த்.

கருத்துகள் இல்லை: