புதன், 6 ஜூன், 2012

போலீஸ் பிடியில் ராமஜெயம் கொலையாளி?-வெளியில் சொல்ல முடியாத காரணத்திற்காக கொலை??

 Ramajayam Killer Police Custody
திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி கே.என். ராமஜெயம் படுகொலை வழக்கில் குற்றவாளி போலீஸ் பிடியில் உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பியும், பிரபல தொழில் அதிபருமான ராமஜெயம் (40) கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி காலை வாக்கிங் சென்றபோது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராமஜெயம் படுகொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ராமஜெயம் சம்பந்தப்பட்ட பலரிடமும், பிரபல ரவுடிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் குற்றவாளி குறித்த தகவலோ அல்லது அதற்கான தடயத்தையோ போலீசாரால் நெருங்க முடியவில்லை.

இந்த நிலையில் திருச்சி வந்த போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ராமஜெயம் கொலை வழக்கை திருச்சி நகர கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் வசம் ஒப்படைத்தார். கமிஷனர் அமல்ராஜ் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க கடந்த வாரம் புதிய தனிப்படை ஒன்றை அமைத்தார். அந்த தனிப்படை கொடுத்த தகவலின் பேரில் ராமஜெயம் கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது. அதன்படி ராமஜெயத்துக்கு மிக நெருக்கமான ஒரு வாலிபர் தான் அவரை கொலை செய்துள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
வெளியே சொல்ல முடியாத சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவரைக் கொலை செய்தேன் என அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.
இந்த தகவல் தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ராமஜெயம் அரசியல் தொடர்புடைய தொழில் அதிபர் என்பதால் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டு அவர் அனுமதி அளித்த பிறகே வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.
எனவே விரைவில் ராமஜெயம் கொலை வழக்கு விவரங்களையும், கொலையாளி யார் என்ற மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க போலீசார் தயாராகி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: