வியாழன், 7 ஜூன், 2012

மர்ம சந்நியாசி – 2 கற்பனையை மிஞ்சும் உண்மைகதை Bhawalpur Prince




மேஜோ குமார் தனக்குப் பிரியமான ஃபுல்மாலா யானையின் மீது ஏறி வேட்டைக்கு செல்வோரை வழிநடத்திச் சென்றான். மரத்தின் உச்சியில் மறைவான கூடாரம் அமைக்கப்பட்டது. கீழே, புலியை வரவைப்பதற்காக மூன்று மாடுகள் கட்டப்பட்டிருந்தன. கூடாரத்தில் கிச்சனர் துரை துப்பாக்கியும் கையுமாக தயாராக இருந்தார். கூடவே மேஜோ குமார் மற்றும் வேட்டைக்குழுவை சேர்ந்தவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் புலிதான் வரவில்லை. கிச்சனர் துரை பொருத்து பொருத்துப் பார்த்தார், புலி வருவதாகத் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், அங்கு அப்பாவியாக வந்த ஒரு மானைச் சுட்டுவிட்டு, தனக்கு இது போதும் என்று புலியைச் சுட்ட பெருமிதத்துடன் விடைபெற்றுக்கொண்டார்.

கிச்சனர் துரை கல்கத்தா சென்றவுடன், முதல் வேலையாக ராஜ்பாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், பாவல் அரண்மனையில் தான் தங்குவதற்கும் பின்னர் வேட்டையாடுவதற்கும் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை நினைவுகூறி, தன்னுடைய மகிழச்சியையும் நன்றியையும் ராஜகுமாரர்களுக்குத் தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, மேஜோ குமாரை வெகுவாகப் பாராட்டியிருந்தார். சந்தர்ப்பம் கிடைத்தால் மேலும் ஒருமுறை மேஜோ குமாருடன் புலி வேட்டைக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் கிச்சனர் துரையால் புலி வேட்டைக்கு வர முடியவில்லை. ஆனால் மேஜோ குமார், அந்த ஆண்டு இறுதியில் ஒரு அருமையான ராயல் பெங்கால் டைகரை வீழ்த்தி, அதை அரண்மனைக்குப் பரிசாக எடுத்துவந்தான். இது நடந்தது 1909ம் ஆண்டு. மேஜோ குமார் தன் குடும்பத்துடன் டார்ஜிலிங் செல்வதற்கு சிறிது நாட்களுக்கு முன்னர். இந்த செய்திகளிலிருந்து, மேஜோ குமார் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் சிப்பிலிஸ் நோயிலிருந்து தேறி, உடல் நலத்துடன் இருந்தான் என்பது தெரிகிறது.
இதன் பிறகுதான் மேஜோ குமாரின் மச்சினனான சத்திய பாபு, இந்த வருடத்தின் கோடையை மேஜோ குமார் தன் மனைவியுடன் டார்ஜிலிங்கில் கழிக்கலாம் என்று யோசனை கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். மேஜோ குமார், அவனுடைய மனைவி பிபாவதி தேவி, மச்சினன் சத்திய பாபு, டாக்டருக்குப் படித்து வரும் அஷுதோஷ் கோஷ் மற்றும் சிப்பந்திகள் என அனைவரும் டார்ஜிலிங் சென்றடைந்தனர். டார்ஜிலிங்கில் அவர்கள் தங்கியது Step Aside என்ற பிரபல பங்களாவில். டார்ஜிலிங் சென்ற சில நாட்களிலேயே மேஜோ குமார் உயிரிழந்தான். அதன் பின்னர் நடந்த சம்பவத்தைத் தான் நாம் முதலிலேயே பார்த்தோம்.
0
மேஜோ குமாரின் சாவில், ஏதோ மர்மம் இருப்பதாகவே அரண்மனையில் இருந்தவர்கள் கருதினர். மேஜோ குமார் உயிருடன் இருப்பதாக, ராஜ்ஜியம் முழுவதும் வதந்தி பரவியது. மேஜோ குமாரின் உடல் தீயூட்டப்பட்டதை யாரும் பார்க்கவில்லை, அதனால் மேஜோ குமாருக்கு ஷ்ரத்தம் (11 ஆம் நாள் செய்யவேண்டிய சடங்கு) செய்வதில் அரண்மனையில் குழப்பம் நீடித்தது.
ஆங்கிலேய அரசாங்கம் இந்த விஷயத்தில் ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலர் பரவலாக கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசாங்கம், இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. காரணம் ஒரு பிரபலமான ஜமீனின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது. அப்படிச் செய்தால் அது மக்களுக்கு ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பை அதிகரிக்கும். மேலும் நாடெங்கும் சுதந்தர வேட்கையில் பலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி வன்முறையில் ஈடுபட்டு வந்த சூழல். இந்த நேரத்தில் புதிய தலைவலி எதற்கு என்று ஆங்கிலேய அரசு ஒதுங்கிகொண்டது. மேலும் டார்ஜிலிங்கில் உள்ள பிரதான அரசு மருத்துவரே (Resident Civil Surgeon) மேஜோ குமார் இறந்துவிட்டதாகக் கூறி, இறப்புச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அதனால் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டியதில்லை என்று அரசு முடிவெடுத்தது.
அரசு முடிவெடுத்தால் என்ன, அரண்மனையின் ராஜமாதாவும் மூன்று குமாரர்களின் பாட்டியுமான ராணி சத்தியபாமா, பர்தவான் மகாராஜாவுக்குக் கடிதம் எழுதி அனுப்பினார்.
அந்தக் கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு. ‘என்னுடைய பேரன் மேஜோ குமாரின் இறுதிச் சடங்கில் நீங்கள் கலந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டேன். அவனை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் வழியில் பெரும் இடியும் மழையும் பெய்த சூழ்நிலையில், அவனது உடல் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டேன். அதன் பின்னர் அவனை சன்னியாசி கூட்டத்தினர் கூட்டிச் சென்றதாகவும், மேஜோ குமாரும் அந்த சாமியார்களுடன் ஊர் ஊராக சஞ்சாரம் செய்வதாகவும் மக்களிடையே வதந்தி பரவியிருக்கிறது. என்னையும், மக்கள் இதுபற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஆற்றாத துயரத்துடன் இருக்கிறேன். எனக்கு குழப்பமாக இருக்கிறது. எந்தக் கூற்று உண்மை? உங்களுக்கு உண்மை தெரியும். அதை நீங்கள் எனக்கு தெரியப்படுத்தினால் நான் மிகவும் நிம்மதி அடைவேன்.’
பர்தவான் மகாராஜா, ராணி சத்தியபாமாவுக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் அவர், மேஜோ குமாரின் இறுதிச் சடங்கில் கொஞ்சம் பேர்தான் இருந்தனர்; தூரத்தில் இருந்த சிதையைக் காட்டி, அது மேஜோ ராஜாவினுடையது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். சிதைக்கு தீ மூட்டப்பட்டது சாயங்காலமா அல்லது விடியற்காலையா என்று தனக்கு நினைவில்லை என்று தன் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் சத்திய பாபுவின் செயல்களிலும் நடவடிக்கைகளிலும் அரண்மனையில் இருந்தவர்களுக்கு நம்பிக்கையில்லை. சத்திய பாபு, மேஜோ குமாரின் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை, மாறாக அவன் வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற கல்கத்தா சென்றிருந்தான்.
மூத்த ராஜகுமாரான் பாரா குமார், இனி பிபாவதி தேவி ராஜ்ஜியத்தின் நிர்வாகத்தில் எந்த விதத்திலும் தலையிடக்கூடாது என்ற வகையில் முடிவெடுத்து அதற்கான பத்திரத்தை தயார் செய்தான். பத்திரத்தின்படி ஜமீனின் நிர்வாகத்தில் பிபாவதிக்கு எந்த உரிமையும் இல்லை, மாறாக மாதந்தோறும் பிபாவதி தேவிக்கு 1100 ரூபாய் ஜமீனிலிருந்து பணம் வந்து சேரும் என்று முடிவு செய்யப்பட்டு, அது இரண்டு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சத்திய பாபுவை ராஜ்ஜிய நிர்வாகத்தில் தலையிடமுடியாமல் செய்யும் முயற்சியாகவே இது கருதப்பட்டது. அரண்மையிலிருந்த அனைவரும் இந்த முடிவை ஆமோதித்தனர்.
ஆனால் இன்னொரு பக்கம், சத்திய பாபு தன் தங்கையிடம் தான் தான் அவளுடைய பிரதிநிதி என்ற முறையில் பிபாவதியிடமிருந்து ஒரு பவர் பத்திரத்தை பெற்றுக்கொண் டான். 19 வயதே நிரம்பிய, இளம் வயதில் விதவையான பிபாவதிக்கு தான் செய்வது சரிதானா என்றெல்லாம் தெரியாமல், தன் அண்ணன் சொல்பேச்சு கேட்டு நடந்தாள். பவர் பத்திரத்தை பெற்றவுடன் சத்திய பாபு நேரே கல்கத்தா சென்று மேஜோ குமார் காப்பீடு எடுத்த நிறுவனத்திலிருந்து அவன் தங்கைக்கு கிடைக்க வேண்டிய 30,000 ரூபாயைப் பெற்று, அதை தனது வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டான். பிபாவதியிடம் வங்கிக் கணக்கில்லை. ஜமீனிலிருந்து அவளுக்கு கிடைக்கவேண்டிய தொகை ஆண்டாண்டுக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. 1911ம் ஆண்டு பிபாவதிக்கு வழங்கப்பட்ட 1100 ரூபாய் மாதத் தொகை, 1913ல் 2500 ரூபாயாகவும், 1915ல் 4000 ரூபாயாகவும், 1917 ஆம் ஆண்டு 5000 ரூபாயாகவும் பின்னர் 1917ம் ஆண்டில் 7000 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த மாதந்திர தொகை போக, ஒரு முறை அவளுக்கு ரூபாய் 4,00,000 கிடைத்தது. ஆனால் பிபாவதியின் பேரில் சொத்தோ முதலீடோ இல்லை.
0
1921ம் ஆண்டு, டாக்கா ரயில் நிலையத்தில் ஒரு சந்நியாசி வந்திறங்கினார். நீண்ட ஜடாமுடி அவரது முழங்கால்வரை தொட்டது. அவருக்கு நீண்ட தாடியும் இருந்தது. இடுப்பில் ஒரு துண்டை மட்டும் சுற்றியிருந்தார். அவரது உடம்பெல்லாம் சாம்பல் பூசப்பட்டிருந்தது. அந்த சந்நியாசிக்கு, டாக்கா ரயில் நிலையம் ஏற்கெனவே பரிச்சயமானது போல் தோன்றியது. ரயில் நிலையத்துக்கு வெளியில் வந்தவர், சற்று தொலைவில் ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் இருந்த அரச மரத்தின் அடியில் போய் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்கு முன்னால் ஒரு துணியில் நெருப்பு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு கமண்டலம் இருந்தது. இவற்றைத்தவிர அந்த இளம் சந்நியாசியின் சொத்து என்று பார்த்தால் ஒரு கம்பளமும் குறடும்தான். எதிரே சற்று தூரத்தில்தான் ஓய்வு பெற்ற சார்பு நீதிபதியான தெபரதா முகர்ஜியின் வீடு இருந்தது.
தெபரதா முகர்ஜி, அந்த இளம் சந்நியாசியை நான்கு மாதங்களாக கவனித்துக்கொண்டிருக்கிறார். மழை, வெயில், இரவு, பகம் பேதமின்றி அந்த சந்நியாசி ஒரே இடத்தில்தான் அமர்ந்திருந்தார். ஒரு நாள் இரவு 2:30 மணியிருக்கும். பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்திலும், இளம் சந்நியாசி அந்த இடத்தில் இருப்பாரா என்று தெபரதா முகர்ஜிக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரச மரத்தடிக்குச் சென்றார். என்ன ஆச்சர்யம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சற்றும் கவலைப்படாமல், மிகவும் அமைதியாக சந்நியாசி அமர்ந்திருந்தார்.
மேலும் நான்கு மாதங்களுக்கு அவர் அங்கேதான் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க மக்கள் வந்தனர். அவர் ஹிந்தியில் பேசினார். மக்கள் அவரிடம் தங்களுக்கிருக்கும் வியாதி குணமாக வேண்டும் என்று மருந்து கேட்டால், அவர் சிறிது விபூதியை எடுத்துக் கொடுப்பார். இளம் சந்நியாசியைப் பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. காசிம்பூர் ஜமீன்தாரான பிரசாத் ராய் சவுத்ரி, இளம் சந்நியாசியைப் பார்க்க வந்தார். காசிம்பூர், பாவல் ராஜ்ஜியத்தின் தலைமையிடமான ஜெய்தேபூருக்கு அருகிலிருந்தது. காசிம்பூர் ஜமீன்தார், சந்நியாசியை தன்னுடைய ஜமீனுக்கு கூட்டிச்சென்றார். காசிம்பூரில் 6 நாட்கள் தங்கிய பிறகு, சந்நியாசி அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெய்தேபூருக்கு ஒரு யானை மீது அனுப்பி வைக்கப்பட்டார்.
1921ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, காலை ஆறு மணியளவில் சந்நியாசி ஜெய்தேபூருக்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்து ஒரு மரத்தினடியில் தங்கிக்கொண்டார். தங்கள் ஜமீனுக்கு ஒரு இளம் சந்நியாசி வந்திருப்பது காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் அவரைக் காண வந்தனர். மேஜோ குமாரின் மாமாவும், அவருடைய மகனான புத்துவும் இளம் சந்நியாசியை சந்தித்தனர். புத்து, இளம் சன்னியாசியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று, தன்னுடைய தாயாரான ஜோதிர்மாயி தேவியிடம் அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று விரும்பினான். ஜோதிர்மாயி வேறு யாரும் இல்லை, மேஜோ குமாரின் இரண்டாம் அக்கா.
இளம் சன்னியாசி, ஜோதிர்மாயி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வீட்டில் ஜோதிர்மாயியின் கணவனும், அவளது இரண்டு பெண்களும், மேஜோ குமாரின் பாட்டியுமான சத்தியபாமா தேவியும் மற்றும் சில உறவினர்களும் இருந்தனர்.
இளம் சன்னியாசி தலையைக் குனிந்திருந்தார். அங்கு சுற்றியிருந்தவர்களை, ஒரு பக்கமாக கீழிருந்துப் பார்வையிட்டார். மேஜோ குமாரும் இப்படித்தான் பார்ப்பது வழக்கம். சந்நியாசியின் உருவம், கண், காது, உதடு, விரல்கள், கை, பாதம், முக வடிவம் அனைத்தும் மேஜோ குமாருடையது போல் இருந்தது. ஜோதிர்மாயி உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் இந்த உருவ ஒற்றுமையைப் பற்றித்தான் பேசினர்.
ஜோதிர்மாயி சந்நியாசியைப் பார்த்து, தாங்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் தங்கத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்று ஹிந்தியில் கேட்டாள். அதற்கு சன்னியாசி, தான் மறுநாள் காலை பிரம்மப்புத்திரா நதிக்குச் சென்று தீர்த்தம் ஆடப்போவதாக ஹிந்தியில் தெரிவித்தார். சன்னியாசிக்குப் பழங்களும் தயிரும் வழங்கப்பட்டது. சந்நியாசி தயிரை மட்டும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் நடந்து போவதைப் பார்த்ததும், ஜோதிர்மாயிக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். சந்நியாசி மேஜோ குமாரைப் போலவே நடந்து சென்றார்.
மறுநாள் காலை சந்நியாசி ஜோதிர்மாயி இல்லத்துக்குச் சென்றார். முந்தைய தினம் இருந்தவர்கள் அனைவரும் அங்கு குழுமியிருந்தனர். அப்போது மேஜோ குமாரின் மூத்த சகோதரி இந்துமாயியின் மகள் தபு, மேஜோ குமாரின் பழைய புகைப்படத்தை சந்நியாசியிடம் காட்டினாள். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் சன்னியாசி அழத் தொடங்கிவிட்டார். பின்னர் தபு, சோட்டா குமாரின் புகைப்படத்தை காண்பித்தவுடன் இளம் சந்நியாசி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
ஜோதிர்மாயி சன்னியாசியைப் பார்த்து, “நீங்கள் சன்னியாசி ஆயிற்றே, அழலாமா” என்று கேட்டாள்.
அதற்கு சன்னியாசி, “மாயை என்னை அழச்செய்கிறது” என்று தெரிவித்தார்.
“நீங்கள் உலகத்தைத் துறந்தவராயிற்றே, உங்களுக்கா மாயை” என்று ஜோதிர்மாயி கேட்டாள்.
அதற்கு சன்னியாசி பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“என்னுடைய இரண்டாம் தம்பி டார்ஜிலிங்கில் இறந்துவிட்டார். அவரை இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் வழியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தம்பியின் உடலை தூக்கிச்சென்றவர்கள், அவரது உடலை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். பின்னர், சிலர் தம்பியின் உடல் எரியூட்டப்பட்டது என்று தெரிவித்தனர். ஆனால் வேறு சிலர், அவரது உடலைக் காணவில்லை, என்னுடையத் தம்பியின் உடல் எரியூட்டப்படவில்லை என்று தெரிவித்தனர்” என்று ஜோதிர்மாயி தகவலை சொல்லி முடிக்கும் முன்னரே சன்னியாசி குறுக்கிட்டார்.
“அது உண்மையில்லை, அவன் உடல் எரியூட்டப்படவில்லை. அவன் உயிரோடுதான் இருக்கிறான்.”
ஜோதிர்மாயி சந்நியாசியைப் பார்த்து, “உங்களுடைய அங்க அடையாளங்கள் என்னுடைய தம்பி மேஜோ குமாரை ஒத்து இருக்கிறது, நீங்கள்தான் அவரா?” என்று வங்காளத்தில் கேட்டாள்.
“இல்லை. இல்லை. நான் யாருக்கும் ஒன்றும் இல்லை” என்று சன்னியாசி தெரிவித்தார்.
சந்நியாசி உண்பதற்கு உணவு கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னியாசி சாப்பிடும்போது, அவருடைய ஆள்காட்டி விரல் மற்ற விரல்களுடன் சேராமல் தனியே நீட்டிக் கொண்டிருந்தது. மேஜோ குமார் சாப்பிடும்போதும் அப்படித்தான் சாப்பிடுவான். சந்நியாசின் குரல்வளை முடிச்சு, அவரின் சிகப்பும் பழுப்பும் கலந்த முடி, பழுப்பு நிறக் கண்கள், முகத்தில் உள்ள வடு, காது, மூக்கு, வாய், பல், உள்ளங்கை, கையின் பின்புறம், கால், கால் விரல்கள், நகம் என அனைத்தும் மேஜோ குமாரினுடையது போலவே இருந்தது. ஜோதிர்மாயியின் கணிப்பு பொய்ப்பதற்கு வாய்ப்பே இல்லை, ஏனென்றால் அவள்தான் மேஜோ குமாரை குழந்தையிலிருந்து பார்த்து வந்தவளாயிற்றே. சந்நியாசியின் வார்த்தைகள் தெளிவில்லாமல் இருந்தாலும், அவருடைய குரல் மேஜோ குமாரை ஒத்திருந்தது.
சந்நியாசி, தான் அஷ்டமி ஸ்தானத்துக்காக வேண்டி டாக்காவுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். அவர் கிளம்பும் போது ஜோதிர்மாயி, டாக்காவில் எவ்வளவு நாள் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு, பத்து நாட்கள் என்று அறிவித்தார். சன்னியாசி ஜெய்தேபூரிலிருந்து, சந்திரநாத் மற்று சித்தகாங் அருகாமையில் உள்ள தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்றார். தீர்த்த யாத்திரை முடித்த பிறகு, அவர் டாக்காவில் தன்னுடைய பழைய இடமான அரச மரத்தினடியில் போய் அமர்ந்து கொண்டார்.
ஜோதிர்மாயி தன்னுடைய மகனான புத்துவையும், அதூல் பாபுவையும் அனுப்பி, சந்நியாசியை டாக்காவிலிருந்து ஜெய்தேபூருக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டாள். அவர்களும் அப்படியேச் செய்தனர். இம்முறை சந்நியாசி ரயில் மூலம் ஜெய்தேபூர் வந்திறங்கினார். அவர் ஜெய்தேபூர் வந்த செய்தி, பாவல் ராஜ்ஜியத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மேஜோ ராஜா என்று கருதப்பட்ட சந்நியாசியைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது.
0
ஒருநாள் சந்நியாசி விடியற்காலையில் குளிப்பதற்காக ஆற்றங்கரை சென்றார். அப்போது ஜோதிர்மாயி சந்நியாசியைப் பார்த்து, நீங்கள் உடம்பெல்லாம் சாம்பலைப் பூசி வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டாள். சன்னியாசி குளித்துவிட்டு, சாம்பல் பூசிக் கொள்ளாமல் வீடு திரும்பினார். வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அவரை ஏற இறங்கப் பார்த்தனர். மேஜோ குமாரின் தோல் நிறத்தைவிட சிறிது வெண்மையாகவும் பளிச்சென்றும் இருந்தது சந்நியாசியின் தோல் நிறம். சந்நியாசி பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதால் முகத்தில் தேஜஸ் தெரிந்தது. ஜோதிர்மாயி சந்நியாசியின் காலைப் பார்த்தாள். ஆம் அவள் எதிர்பார்த்த வடு இருந்தது. தன் தம்பி சிறு வயதில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, அவனது காலில் ஒரு குதிரை ரதம் ஏறி காயம் பட்டு அதனால் ஏற்பட்ட வடு அது.
ஜோதிர்மாயியும் மற்றவர்களும் பரபரப்படைந்தனர். “நீங்கள் மேஜோ குமார் போல தென்படுகிறீர்கள். நீங்கள் அவராகத்தான் இருக்கக்கூடும். தயவுசெய்து நீங்கள் யார் என்று கூறிவிடுங்கள்!”
“இல்லை. நான் அவர் இல்லை. என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். நான் இங்கிருந்து போய்விடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று சாது பதிலளித்தார்.
“நீங்கள் உண்மையைக் கூறியாகவேண்டும். நீங்கள் உண்மையைக் கூற மறுக்கமுடியாது. நீங்கள் உண்மையை சொல்ல மறுத்தால் நான் சாப்பிடமாட்டேன், பட்டினி கிடப்பேன்” என்றாள் ஜோதிர்மாயி.
கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரும் சந்நியாசியைச் சுற்றிக்கொண்டனர். உண்மையைச் சொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர்.
நேரமாக நேரமாக கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. கூட்டத்தில் இருந்த ஒருவன், “உங்கள் பெயர் என்ன? ” என்று கேட்டான்.
“இராமேந்திர நாரயண ராய் சவுத்ரி” என்று பதிலளித்தார் சந்நியாசி.
“தந்தை பெயர்? ”
“ராஜா ராஜேந்திர ராய் சவுத்ரி.”
“தாயின் பெயர்? ”
“ராணி பிலாஸ்மணி தேவி. ”
அங்கிருந்த மற்றொருவன், “ராஜா, ராணி பெயர் எல்லாருக்கும் தெரியும். உன்னை யார் வளர்த்தார் என்று சொல்? ” என்றான்.
அலோகா என்று பதிலளித்தார் சன்னியாசி. கூட்டத்திலிருந்தவர்களுக்கு ஒரே சந்தோஷம். “இரண்டாம் குமார் சாகவில்லை” என்று கோஷம் போட்டார்கள். சந்நியாசி மயங்கி விட்டார். அவரை வீட்டுக்கு தூக்கிச் சென்று ஆசுவாசப்படுத்தினார்கள். கண் விழித்த சந்நியாசி, அனைவரும் ஆச்சர்யம் அடையும் வகையில் வங்காளத்தில் பேசினார். ஆனால் அது ஹிந்தி பேசும் தொனியிலிருந்தது. வாயில் ஏதோ கூழாங்கல்லை வைத்துக்கொண்டு பேசுவது போல் இருந்தது.
சந்நியாசியுடனான மக்களின் விசாரணை அடுத்த நாளும் தொடர்ந்தது. அங்கு கூடியிருந்தவர்களிடம் ஆஷு குப்தா என்பவர், “நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் இந்த சாது சரியாக பதில் சொல்லிவிட்டார் என்றால், நான் இவரை இரண்டாவது குமாராக ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.
“டார்ஜிலிங்கில், நாம் தங்கிய பங்களாவின் மேற்தளத்தின் கூரையில் ஒரு பறவை இருந்தது. அந்தப் பறவையை சுட்டது யார்? அதற்காக நீ ஏன் கோபித்துக் கொண்டாய்?”
சந்நியாசி இந்த கேள்விக்கான பதிலை சொல்வதற்கு முன்னால், கூட்டத்தில் இருந்த ஒருவன் “இந்த கேள்விக்கான பதிலை, ஆஷு குப்தா முதலில் கவுரங் பாபுவிடம் தனியாக சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். கவுரங் பாபு ஜெய்தேபூரின் சார் பதிவாளர். அவருக்கு அந்த ஊரில் நல்ல மதிப்பு இருந்தது. பாவல் அரண்மனையைச் சேர்ந்தவர்களுக்கும் நன்கு தெரிந்தவர். ஆஷு குப்தா, கவுரங் பாபுவின் காதில் ரகசியமாக தன்னுடைய கேள்விக்கான பதிலைத் தெரிவித்தார்.
அங்குக் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள், சன்னியாசி என்ன பதில் சொல்லப்போகிறார் என்று மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். சன்னியாசி அமைதியாக, ஆனால் தீர்க்கமாக பதிலைச் சொன்னார்.
“அந்தப் பறவையை சுட்டது ஹரி சிங். ”
ஆஷு குப்தா வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். சந்நியாசி சொன்ன பதில் தவறு என்றான். அந்தப் பறவையை சுட்டது பிரேந்திர பானர்ஜி என்றான். குழுமி இருந்தவர்கள், கவுரங் பாபுவை பார்த்தார்கள். அவரும் தன்னிடம் சொல்லப்பட்ட பதில் பிரேந்திர பானர்ஜி என்று தெரிவித்தார்.
அங்கு கூடியிருந்தவர்களிடம் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. கவுரங் பாபு, பிரேந்திர பானர்ஜியை யாரவது அழைத்துக் கொண்டு இங்கு வந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று கருத்து தெரிவித்தார்.
ஒருவன் வேகமாகச் சென்று, பிரேந்திர பானர்ஜியை கூட்டி வந்தான். பிரேந்திர பானர்ஜி வந்ததுதான் தாமதம். கவுரங் பாபு, “டார்ஜிலிங்கில் பங்களாவில் நீ பறவையை ஏதாவது சுட்டாயா? ”என்று கேட்டார்.
எல்லோரும் பிரேந்திர பானர்ஜி என்ன பதில் சொல்லப்போகிறான் என்று ஆவல் மிகுதியுடன் காத்திருந்தனர்.
வந்தது பதில். “இல்லை. நான் சுடவில்லை. ஹரி சிங்தான் சுட்டான். எனக்கு துப்பாக்கியால் எப்படி சுடுவது என்று கூட தெரியாது” என்றான் பானர்ஜி.
அங்கிருந்த கூட்டத்தினர் ஹோவென்று கத்தினர். அவர்கள் அனைவருக்கும் சந்தோஷம்.
தினந்தோறும் சந்நியாசியை பார்க்க நூற்றுக்கணக்கில் வந்தவர்கள், இப்போது ஆயிரக்கணக்கில் வந்தனர். ஜெய்தேபூருக்கு சிறப்பு ரயில்களெல்லாம் இயக்கப்பட்டன. ஜோதிர்மாயி வீட்டிலிருந்து ராஜ்பாரி அரண்மனை வரை எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம்தான். இறந்ததாக கருதப்பட்ட தங்களுடைய அரசர் 12 ஆண்டு காலம் கழித்து மீண்டும் திரும்பி வந்ததில் மக்களுக்குச் சந்தோஷம்தான். அதுவும் சந்நியாசியாக வந்திருப்பதால், அந்த ஆச்சர்யத்தைக் காண்பதற்காகவே நிறைய கூட்டம் திரண்டது. நிறைய பேர் சந்நியாசியிடம் ஆசிபெற்றனர்.
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த பிரபல ஆங்கில பத்திரிக்கையான ‘தி ஸ்டேட்ஸ்மென்’, இந்த நிகழ்வுகளைப் பற்றி “டாக்காவின் கிளர்ச்சி – Dacca Sensation” என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது.
ஜெய்தேபூர் காவல் நிலையத்தில், அந்த ஊரில் நடக்கும் அன்றைய தின நிகழ்வுகள்/ செய்திகள் போன்றவை பதிவேட்டில் பதியப்படுவது வழக்கம். சன்னியாசி மறுபடியும் ஜெய்தேபூர் வந்த சமயத்தில், காவல்துறை பதிவேட்டில் பின்வரும் செய்திகள் பதியப்பட்டிருந்தன.
தேதி – 04.05.1921 – காலை 9 மணி
நீண்ட ஜடாமுடி வைத்திருந்த ஓர் அழகான சந்நியாசி புத்து பாபு வீட்டில் சில நாட்களாக தங்கி இருக்கிறார். அவர் ஊரும் பேரும் தெரியவில்லை. அந்த சந்நியாசியைப் பார்க்க நிறைய பேர் வந்து போகிறார்கள். அவருடைய உருவ அமைப்புகள் மேஜோ குமாரை ஒத்து இருப்பதாக பலர் கருதுகிறார்கள். மேஜோ குமார் இறக்கவில்லை என்றும் சந்நியாசிகளுடன் சன்னியாசியாக தேச சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்படி ஊர் சுற்றி கொண்டிருக்கும் தருவாயில் இங்கு வர நேர்ந்தது என்றும் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேதி – 05.05.1921 – மாலை 3 மணி
வானம் தெளிவாக இருக்கிறது. மழை வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஊரில் தொற்றுநோய் அபாயம் எதுவும் இல்லை. ஒரு சந்நியாசி ஜெய்தேபூருக்கு வந்திருக்கிறார். அவரை மக்கள் அனைவரும் மேஜோ குமார் என்று கருதுகிறார்கள். சன்னியாசியும் தான் தான் மேஜோ குமார் என்று அறிவித்திருக்கிறார்.
0
இதற்கிடையில், மேஜோ குமார் டார்ஜிலிங்கில் இறந்துபோய், டாக்காவில் சந்நியாசியாகத் தோன்றும்வரை ராஜ்பாரியில் பல துரதிர்ஷ்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. 1909ம் ஆண்டு மேஜோ குமார் இறந்துவிட்டான். அடுத்து, 1910ம் ஆண்டு பாரா குமார் இறந்துவிட்டான். 1913ம் ஆண்டு சோட்டா குமாரும் இறந்துவிட்டான். ராஜ்குமாரர்கள் மூவருக்கும் திருமணம் ஆகியிருந்தாலும் யாருக்கும் வாரிசு கிடையாது. தந்தை, தாய், மகன்கள் என்று ஒவ்வொருவரும் அடுத்தடுத்து சில ஆண்டுகளில் இறந்ததால், இது ராஜ்பாரியின் சாபக்கேடு என்று நினைத்து ஏனையவர்கள் ராஜ்பாரியில் தங்குவதை தவிர்த்து வந்தனர். சில வேலையாட்கள் மட்டுமே பராமரித்து வந்தனர்.
மூன்று ராஜகுமாரர்களும் வாரிசு இல்லாமல் இறந்ததன் காரணமாக, அரசாங்கம் பாவல் ஜமீனை சமரஷ்னை செய்துவிட்டது. அதாவது வாரிசு இல்லாத ராஜ்ஜியத்தை அரசாங்கம் எடுத்துக்கொண்டு Court of Wards மூலமாக நிர்வகித்து வந்தது. அப்போது ஜமீனின் மேலாளராக செயல்பட்டவர் நீதாம் என்ற ஆங்கிலேயர். அவர் டாக்கா கலெக்டரான லின்ஸ்டேவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
‘விசித்திரமான சம்பவம் ஒன்று ஜமீனில் நடந்து கொண்டிருக்கிறது. சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நல்ல சிவப்பு நிறம் கொண்ட ஒரு சந்நியாசி டாக்காவுக்கு வந்திருக்கிறார். அவர் ஹரித்வாரிலிருந்து வந்ததாக தெரிகிறது. அவரை காசிம்பூர் ஜமீன்தார் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு, சந்நியாசி ஜெய்தேபூருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். பின்னர் ஜோதிர்மாயி வீட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கு அந்த சந்நியாசியை பார்த்த மாத்திரத்தில் ஜமீனின் மக்களெல்லாம், அவர் தான் இரண்டாம் குமாரான மேஜோ குமார் என்று கூறுகிறார்கள். ஜமீனுக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களும் அவரைக் காண வருகிறார்கள். அவரை இரண்டாவது குமார் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த சன்னியாசி ஜமினீல் இருப்பது, பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறது.
‘நேற்று இரவு, கிராமவாசிகள் அந்த சந்நியாசியைக் கட்டாயப்படுத்திக் கேட்டதில், தான் ராமேந்திர நாராயண ராய் என்றும், தன்னை சிறு வயதில் பார்த்துக் கொண்டிருந்த தாதியின் பெயர் அலோகா டாஹி என்றும் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அந்த சந்நியாசி மயக்கம் அடைந்துவிட்டார். கூடியிருந்த மக்கள் அனைவரும் ‘ஹுல்லா தனி’, ‘ஜெய் தனி’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
‘அங்கு இருந்த மக்கள் அனைவரும் அவர் இரண்டாவது குமார் என்று ஏற்றுக்கொண்டனர். ஜமீன் அவரை அங்கீகரிக்கவில்லை என்றாலும், தாங்கள் அவர் பக்கம் இருப்பதாக தெரிவித்தனர். மேஜோ குமாரின் உறவினர்கள் அந்த சன்னியாசியிடம், தான் யார் தன்னைப் பற்றிய பழைய விவரங்கள் அனைத்தும் கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.
‘இந்த நிலையில் அரசாங்கம் ஒரு விசாரணை நடத்தவேண்டும். நாளுக்கு நாள் சாதுவைப் பார்க்க கூட்டம் கட்டுக்கடங்காமல் ஜெய்தேபூருக்கு திரண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தங்களை தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆவண செய்கிறேன். இப்படிக்கு, நீதாம்.’
(தொடரும்)

கருத்துகள் இல்லை: