புதன், 6 ஜூன், 2012

A.K.Anthoni next president?ஏ.கே.அந்தோணி ஜனாதிபதி?

ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஹமீது அன்சாரி, பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் தற்போது ஏ.கே.அந்தோணியின் பெயரும் அடிபடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது. தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
தென் மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் கேரள மாநில தலைவரான ரமேஷ் சென்னிதாலாவுக்கு மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சோனியாவுடன் ஞானதேசிகன் சந்திப்பு:ஞானதேசிகன் பேசுவதற்கு சில குறிப்புகளை தயார் செய்து வைத்திருந்தார். அவர் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மதிய உணவு வேளையில் சோனியாவை ஞானதேசிகன் சந்தித்தார். அப்போது சோனியாவிடம், ஞானதேசிகன், "தமிழக காங்கிரஸ் கட்சி நல்லபடியாக செயல்பட்டு வருகிறது' என்றார். அதற்கு சோனியா, "எனக்கு தெரியும்; இன்னும் சிறப்பாக செயல்படுங்கள்' எனக் கூறியுள்ளார்.

மேற்கு வங்கம், மகாராஷ்டிர மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் பேசும் போது, "மத்திய அரசின் சாதனைகளை, தங்களது ஆட்சியின் சாதனைகளாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து மக்களிடம் செல்வாக்கை உயர்த்தி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதியின் வேட்பாளர் தேர்வு செய்ய, சோனியாவுக்கு முழு அதிகாரத்தை காரியக் கமிட்டிக் கூட்டம் அளித்துள்ளது.

ஏ.கே.அந்தோணி:இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கனவே ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்தது. தற்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணியின் பெயரும் கூடுதலாக அடிபடுகிறது.

இன்று ஸ்டாலின் டில்லி பயணம்:ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து ஐ.மு., கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா தனித்தனியாக, ஆலோசனை நடத்துகிறார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து, ஏற்கனவே சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் மத்திய அமைச்சர் அந்தோணி ஆலோசனை நடத்தினார். ஐ.மு., கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி உட்பட வேட்பாளர் யாராக இருந்தாலும் தி.மு.க., ஆதரிக்கும் என, கருணாநிதி தெரிவித்தார்.இந்நிலையில் ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,வின் சார்பில், பொருளாளர் ஸ்டாலின் நாளை (7ம் தேதி) சோனியாவை சந்தித்து பேசுகிறார். அதற்காக அவர் இன்று மாலை டில்லி செல்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: