வியாழன், 1 மார்ச், 2012

இந்திரா காந்தி அரசு கருணாநிதியைத்தான் கைது செய்யும் என்று திமுக தலைவர்கள் எதிர்



திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டு வாசலைக் காவல்துறை வாகனங்கள் ஆக்கிரமித்தன.  வாகனங்கள் முழுக்க காவலர்கள். எமர்ஜென்ஸி அமலில் இருந்ததால் (ஜனவரி 31, 1976) ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் வீட்டில் இருந்தவர்களுக்குப் புரிந்தது.  திமுதிமுவென வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் கருணாநிதியின் மகன் ஸ்டாலினைக் கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர்.
‘அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்’
பதில் சொன்னவர் கருணாநிதி. நேற்றுவரை தமிழ்நாட்டுக்கே முதலமைச்சராக இருந்தவர். ஆட்சி கலைக்கப்பட்டு விட்டதால் அவர் சொன்ன பதிலை அதிகாரிகள் ஏற்கக் தயாராக இல்லை. சர்ச் வாரண்ட் இருக்கிறது.. வீட்டுக்குள் தேடிப் பார்த்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்தனர். சில நிமிடங்களுக்குத் தேடுதல் நீடித்தது. பலனளிக்காத தேடல்.
‘ஸ்டாலின் வந்ததும் தகவல் கொடுக்கிறேன். வந்து கைதுசெய்து கொள்ளுங்கள்’
கருணாநிதி உத்தரவாதம் கொடுத்தார்.
அதை ஏற்பதைத்தவிர அப்போது அவர்களுக்கு வேறு வழியில்லை. அதிகாரிகள் மெல்ல நகர்ந்தனர்.
0
மறுநாள் ஸ்டாலின் வீடு திரும்பினார். உடனடியாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது. மின்னல் வேகத்தில் கோபாலபுரம் வந்தனர் அதிகாரிகள். அங்கே பெட்டி சகிதம் தயாராக இருந்தார் ஸ்டாலின். கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். மிசா சட்டம் ஸ்டாலின் மீது பாய்ந்திருந்தது.
உண்மையில் இந்திரா காந்தி அரசு கருணாநிதியைத்தான் கைது செய்யும் என்று திமுக தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். காரணம். மத்திய அரசுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தது கோயம்புத்தூரில் நடைபெற்ற திமுக மாநில மாநாடு. எதற்காக?
ரேபரேலி தொகுதியில் இருந்து இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்காரணமாகப் பிரதமர் நாற்காலியில் இருந்து இறங்க வேண்டிய நிர்பந்தம் இந்திரா காந்திக்கு.
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிர்கட்சிகள்  ஆயுதக் கலகம் செய்யத் திட்டமிட்டுள்ளன என்று  குற்றம்சாட்டி நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்திருந்தார் இந்திரா காந்தி. அந்த முடிவை தேசிய அளவில் எல்லா எதிர்கட்சிகளுமே கண்டித்திருந்தன. இதனால் நாடு முழுக்க ஏராளமான அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்திராவின் முடிவு அதிகார அத்துமீறலின் உச்சம் என்று நினைத்தது திமுக. ஆகவே, எமர்ஜென்சியைத் திரும்பப் பெறவேண்டும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், ஜனநாயகத்தை மறுநிர்மாணம் செய்யவேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசை, அதன் ஆளுகையின் கீழ் இருக்கும் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சி கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியதை இந்திராவால் துளியும் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆத்திரம் தலைக்கேறியது.
அப்போதெல்லாம் மத்திய அரசுக்கு மாநில அரசின் மீது கோபம் வந்தால் 356 என்ற எண்ணைத்தான் உச்சரிப்பார்கள். அது ஒரு மந்திர எண். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அது ஒரு பிரிவு. கலைப்புச் சட்டம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில ஆட்சியை நினைத்த மாத்திரத்தில் கலைத்துவிட அதிகாரம் வழங்கியுள்ள சட்டப்பிரிவு அது.
திமுக போட்ட தீர்மானத்தால் ஆத்திரமடைந்த இந்திரா, தமிழ்நாட்டில் இருந்த திமுக ஆட்சியை அரசியல் சட்டப்பிரிவு 356ன் கீழ் கலைத்திருந்தார். திமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் தேடித்தேடிக் கைது செய்யப்பட்டனர். அதன் ஒருபகுதியாகவே ஸ்டாலினும் கைதாகியிருந்தார்.
0
நள்ளிரவு நேரம் சிறைக்குள் கொண்டுவரப்பட்டார் ஸ்டாலின். சிறைக்குள் நுழையும்போதே அவரை ஒருமையில்தான் அழைத்தனர். அவரை மட்டுமல்ல, அவரோடு கைதானவர்கள் அத்தனை பேரையும் அப்படித்தான் அழைத்தனர். மேலிடத்து உத்தரவா அல்லது உள்மனத்து உணர்வா என்று தெரியவில்லை.
ஆடைகளை சோதனை போட்டனர். பணம் இருக்கிறதா என்று விசாரித்துக் கொண்டனர். எல்லாம் முடிந்ததும் ஒரு பிளாக்குக்கு அழைத்துச் சென்றனர். தொழுநோயாளிகள் அடைத்து வைக்கப்படும் ஒன்பதாம் எண் ப்ளாக் அது. அன்றைய தினம் ஸ்டாலின் உள்ளிட்டோருக்காக ‘சிறப்பு ஒதுக்கீடு’ செய்திருந்தார்கள்.
சிறைக்குள் நுழைந்தபோது காவலர்கள் சோதனை போட்ட விதத்தை கைதிகளுள் ஒருவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான சிட்டிபாபு தன்னுடைய நாள்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அதைப் படித்தால் எமர்ஜென்ஸியின் போது தமிழ்நாட்டில் அரசியல் கைதிகளுக்குத் தரப்பட்ட மரியாதையின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
‘கர்வத்தோடு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. நாங்கள் அனைவரும் இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து சென்றோம். இப்போது நாங்கள் ஒரே வரிசையில் நின்றுகொண்டு இருந்தோம். ஒருவர் அவசரமாக அங்கு வந்தார். அவர் வரும்போதே யாருடா இவங்க எல்லாம் என்று கத்திக்கொண்டே வந்தார்.
அவருடைய பேச்சே புதுமையாக இருந்தது. வரவேற்புக்குப் பின்னர் எங்களுக்கு வாழ்த்து கூறுவது போல அவை இருந்தன. இவர்களை எல்லாம் சோதனை போடுங்கள். எந்தப் பயலும் பணம் கொண்டு வந்திருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
அப்போது ஆசைத்தம்பியிடம் அறுபத்தியேழு ரூபாய் இருப்பதாக வார்டர் கூறினார். அவ்வளவுதான். அந்த அதிகாரியின் சொற்கள் கொடூரமாக இருந்தன.
‘அப்படியா ஆசைத்தம்பி.. உனக்கு மூளை இல்லை. நீ அடிக்கடி சிறைக்கு வந்திருக்கிறாய்….’. இப்படியே அவர் பேசிக்கொண்டு போனார்.’
காரைகள் பெயர்ந்த பலவீனமான அறை. ஸ்டாலினுடன் சேர்த்து ஆறு பேருக்கான அறை அது. சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, நீல நாராயணன், வி.எஸ். கோவிந்தராஜன் உள்ளிட்டோர். வெளியேயும் நெருக்கடி. உள்ளேயும் நெருக்கடி.
தரையில் ஏதோ சுருண்டு சுருண்டு கிடப்பது போல இருந்தது. குனிந்து பார்த்தார். பஞ்சு சுருள்கள். ரத்தக்கறை தோய்ந்தவை. தொழுநோயாளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடும். சுத்தம் செய்யாமல் கிடந்த அறை. அவற்றைப் பார்த்த மாத்திரத்தில் மயக்கம் வருவது போல இருந்தது ஸ்டாலினுக்கு.
மனத்துக்குள் எத்தனை வன்மம் இருந்தால் இந்த அறையை ஒதுக்கி இருப்பார்கள்? அதிகாரம் அவர்கள் கையில். அப்படித்தான் செய்வார்கள். சிறைக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். கேள்வி கேட்க நாதியில்லை. அபாயகரமான சூழல்.
பஞ்சு சுருள்களை கைகளால் தள்ளிவிட்டு அங்கேயே படுத்துக் கொண்டார் ஸ்டாலின். மற்றவர்களும் ஆளுக்கொரு பக்கம் சாய்ந்தனர். ஆனால் தூக்கம் வரவில்லை. நள்ளிரவு நேரம். அய்யோ.. அம்மா.. அடிக்காதீங்க.. பக்கத்து அறையில் இருந்து வந்த அலறல் சத்தம் ஸ்டாலினை திடுக்கிட்டு எழ வைத்தது.
கொட்டடிக்குள் நுழைந்துக் கைதிகளை அடித்து உதைக்கிறார்கள் காவலர்கள் என்பது ஸ்டாலினுக்குப் புரிந்தது. அதை உறுதிப்படுத்த அறையில் இருந்தவர்களிடம் விசாரித்தார்.
‘அடிபடுபவர்கள் கைதிகள்தான். அடிப்பவர்கள் அதிகாரிகள் அல்ல, கைதிகள். கைக்கூலிக் கைதிகள். அரசாங்கத்தின் ஏவலாளிகள்’
இப்படியெல்லாம்கூட நடக்குமா? நடக்கும். எமர்ஜென்சியின் வீரியம் ஸ்டாலினுக்குப் புரிந்துவிட்டது. இப்போது அந்த முரட்டு மனிதர்கள் ஸ்டாலின் இருந்த அறை வாசலுக்கு வந்திருந்தனர்.
முதலில் வெளியே அழைக்கப்பட்டவர் சிட்டிபாபு. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர். வெளியே வந்த வேகத்தில் அவர் மீது அடிகள் விழத் தொடங்கின. லத்திகள் அவருடைய உடலைப் பதம் பார்த்தன. அப்படியே தரையில் சாய்ந்தார் சிட்டிபாபு.
அடுத்து நீல நாராயணன், ஆற்காடு வீராசாமி, கோவிந்தராசன் என்று வரிசைக்கிரமமாக வரவழைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர். இப்போது ஸ்டாலினின் முறை. வெளியே வந்தார். மறுநொடி பூட்ஸ் காலால் எட்டி உதைத்தான் ஒருவன்.
சுதாரிப்பதற்குள் லத்தியால் ஒரு அடி விழுந்தது. நரம்புகளை தாக்கும் அளவுக்கு வீரியம் நிறைந்த அடி அது. போதாக்குறைக்கு கன்னத்தில் ஒரு அறை. நிலைகுலைந்து போனார் ஸ்டாலின்.
இனியும் அடி விழுந்தால் தாங்கமாட்டார் என்பதால் குறுக்கே புகுந்தார் சிட்டிபாபு. ஸ்டாலினுக்கான அடிகள் அவர்மீது விழுந்தன. தட்டுத்தடுமாறி அறைக்குள் நுழைந்து சரிந்தார் ஸ்டாலின். வலி தாங்க முடியாமல் படுத்தவர் அயர்ச்சி காரணமாக அப்படியே தூங்கிப்போனார்.
0
விடிந்ததும் காலை உணவு என்ற பெயரில் தட்டில் கொஞ்சம் கூழை ஊற்றிக் கொடுத்தார்கள். தொட்டுக் கொள்ளப் புளிக்காரம். பார்த்த மாத்திரத்திலேயே குமட்டிக்கொண்டு வந்தது ஸ்டாலினுக்கு.
அறை நண்பர்களின் முகத்தைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தார். முகத்தில் துளியும் சுணக்கமின்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  பலமுறை சிறைக்கு வந்து சென்றவர்கள் அல்லவா. பழகிப் போயிருந்தது. உடனே தானும் சாப்பிடத் தொடங்கினார். கொட்டடி அனுபவம் முற்றிலும் புதிதாக இருந்தது ஸ்டாலினுக்கு.
தண்டனையின் உச்சம் என்று சொல்லும் அளவுக்குக் கொடூரமானத் தாக்குதலாக அந்த நள்ளிரவுத் தாக்குதல் அமைந்ததால் மறுநாளில் இருந்து சிறைக்குள் நடந்த சம்பவம் எதுவுமே ஸ்டாலினைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
மெல்ல மெல்ல சிறைச்சாலை சித்திரவதைகள் ஸ்டாலினுக்குப் பழக ஆரம்பித்துவிட்டன. வேப்பெண்ணெய் கலந்த சோற்றைக் கொடுத்தாலும் லாகவமாகத் தண்ணீர் விட்டுக் கழுவிச் சாப்பிடக் கற்றுக்கொண்டார். உப்பு நிறைந்த இட்லியையும் உற்சாகம் குறையாமல் சாப்பிடப் பழகிக் கொண்டார்.
அளவு குறைந்த உணவு. அறைக்குள் வெப்பம் தகித்தபோதும் மின்விசிறிக்கு அனுமதி இல்லை. வெறும் கைவிசிறி. தூங்கவேண்டும் என்றால் விசிற முடியாது. விசிற வேண்டும் என்றால் தூங்க முடியாது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசக்கூடாது.
எப்போதேனும் உறவினர்களுடன் பேசலாம். ஆனால் கூடவே காவலர்கள் இருப்பார்கள். அதற்குப் பதில் பேசாமலேயே இருந்துவிடலாம்.  தேவைப்படும் புத்தகங்களை சொந்த செலவில்கூட வாங்கிப் படிக்க அனுமதி இல்லை. கடிகாரம் வைத்துக் கொள்ளக் கூடாது.
ரேடியோ கேட்கக்கூடாது.
இப்படி இன்னும் இன்னும் நிறைய அனுபவங்கள். மு.க. ஸ்டாலினின் வாழ்க்கையில் இந்தச் சிறைவாசம் மிக மோசமான அத்தியாயம்!

கருத்துகள் இல்லை: