வியாழன், 1 மார்ச், 2012

ஷூ' அணிந்தபடி 'தூங்கினரா' கொள்ளையர்கள்?- எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்

Chennai Encounter
சென்னை: வேளச்சேரியில் ஐந்து கொள்ளையர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் அடங்கவில்லை. பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொள்ளையர்களில் ஒருவன் காலில் ஷூ இறுக்கமாக அணிவித்தபடி இருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டி இப்படித்தான் ஷூ போட்டு, ஜீன்ஸ் போட்டு ஒருவன் தூங்கிக் கொண்டிருந்திருப்பானா என்றும் கேட்கின்றனர்.போலீஸ் என்கவுண்டர்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கிறது - மனித உரிமை ஆர்வலர்கள் இதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்ற போதிலும். ஆனால் இதுவரை இல்லாத பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சைகளையும் வேளச்சேரி என்கவுண்டர் கிளப்பி விட்டு விட்டது. காரணம் ஒட்டுமொத்தமாக ஐந்து பேரை, அதுவும் வட மாநிலத்தவர்களை போலீஸார் குட்டியூண்டு வீட்டுக்குள் வைத்து என்கவுண்டர் செய்ததால்.

ஒரு சாதாரண வீட்டு வசதி வாரிய வீட்டுக்குள்தான் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. அது ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு. வீட்டுக்குள் நுழைந்தால் வீடு முடிந்து விடும், ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு வந்தால், தெருவே வந்து விடும். அப்படி ஒரு தக்கனூண்டு வீட்டுக்குள் இருந்த ஐந்து பேரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டும் உயிரோடு பிடிக்க முடியாமல் போய் விட்டதா என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய கேள்வி.

போலீஸார் தேடி வரும் வினோத் குமார் என்ற கொள்ளையன் இந்த வீட்டுக்குள்தான் இருக்கிறான் என்று போலீஸாருக்குத் தகவல் வருகிறது. இதையடுத்து போலீஸ் படை துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அங்கு விரைகிறது.

நள்ளிரவில் தகவல் வந்ததாக போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். ஆனால், 10 மணிக்கே அந்தப் பகுதியில் இருந்த வீடுகளையும் அணுகிய போலீஸார் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறும், வெளியே வரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது போலீஸ் படை. முன்னெச்சரிக்கையாக வீட்டின் வெளிப்புறத்தைப் பூட்டி விடுகிறார்கள். பிறகு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கதவைத் தட்டுகிறது போலீஸ். உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறப்பதற்குப் பதில் ஜன்னல் வழியாக பார்க்கின்றனராம். போலீஸார் இருப்பதைப் பார்த்ததும் உஷாரான அவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

இதையடுத்து போலீஸார் முதலில் ஜன்னல் வழியாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சுட்டதாகவும், இதில் ஐந்து பேரும் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை நடந்தது ஒரு சம்பவத்தின் தொகுப்பு. இதுதொடர்பாக தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் சந்தேகங்கள், கேள்விகள் குறித்துப் பார்ப்போம்...

1. இறந்த ஐந்து பேருமே பேண்ட்-சட்டை அணிந்தபடி இருந்திருக்கிறார்கள். மேலும் கால்களில் ஷூக்களும் உள்ளன. லேஸ் கூட கழற்றப்படாமல் கட்டியபடி இருக்கிறது. இப்படி இரவில் யாரேனும் தூங்குவார்களா என்பது முதல் சந்தேகம்.

2. வீட்டின் சுவற்றில் எந்தவிதமான ரத்தக்கறையும், ரத்தச் சிதறல்களும் இல்லை. மேலும் ஜன்னல் வழியாக கொள்ளையர்கள் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படிச் சுட்டதற்கான எந்தவிதமான வடுவும் இல்லை. ஒரு வேளை சுட்டிருந்தாலும் போலீஸார் திருப்பிச் சுட்டிருப்பார்கள்தானே. அப்படி சுட்டிருந்தால் ஜன்னல் கம்பிகள் சேதமடையாமலா இருந்திருக்கும். ஒரு வேளை ஜன்னல் கம்பிகளுக்குள் தோட்டாக்கள் லாவகமாக புகுந்து செல்லக் கூடிய வகையில் படு திறமையாக போலீஸார் சுட்டார்களா என்பது இன்னொரு சந்தேகம். விஜயகாந்த் படத்தில்தான் இப்படிப்பட்ட காட்சிகளப் பார்க்க முடியுமே தவிர நிஜத்தில் இது சாத்தியமில்லை.

3. ஐந்து பேரும் சுட்டார்கள், பதிலுக்கு நாங்களும் சுட்டோம் என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் கூட துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான எந்தவிதமான அறிகுறியும் தங்களுக்குத் தெரியவில்லை, துப்பாக்கி் சண்டை நடந்தால் சத்தம் கேட்குமே, அது கூட தங்களுக்குக் கேட்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதற்குப் போலீஸ் தரப்பு விளக்கம் என்ன?. (இதனால் வெளியில் எங்கேயோ வைத்து இவர்களை போட்டுத் தள்ளிவிட்டு இந்த வீட்டுக்குள் கொண்டு வந்து உடல்களை போட்டுவிட்டு, சம்பவம் அங்கு நடந்தது போல காட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள், இந்த எண்கெளன்டர் நாடகத்தை ஏற்க மறுப்போர்).

4. போலீஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட பின்னர் அப்பகுதியில் இருந்த வீடுகளை மூடிக் கொள்ளுமாறும், யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது என்றும் மக்களை எச்சரித்தது ஏன்?.

5. உள்ளே இருப்பது பயங்கரமான கொள்ளையர்கள் என்று போலீஸார் நம்பினால், அவர்களை உயிருடன்தானே பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும். அவர்களைப் பிடித்து விசாரித்தால்தானே அவர்களுக்கு எந்தெந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். அப்போதுதான பல வழக்குகளுக்கு விமோச்சனம் கிடைக்கும். ஐந்து பேரும் பெரிய அளவிலான ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரியவில்லை. அவர்களை, ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு நாமதான் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் தமிழக போலீஸாரால் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது ஏன். அது காவல்துறைக்கே அவமானமாக இருக்கிறதே. அட, மயக்க மருந்துப் புகையை உள்ளே செலுத்தியாவது பிடித்திருக்கலாமே...

இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பி்ல இதற்குப் பதில் இல்லை. (முதல்வர் ஜெயலலிதாவும், சம்பவம் ஏதோ குஜராத்தில் நடந்தது மாதிரி இந்த சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் கனத்த அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது)

அதேசமயம், இது திட்டமிட்ட என்கவுண்டர்தான். இன்னும் சொல்லப் போனால் போலீஸார் வேண்டும் என்றேதான் ஐவரையும் கொன்றார்கள் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

அதாவது சம்பவம் நடந்த புதன்கிழமை காலையே வினோத் குமார் போலீஸில் சிக்கி விட்டான். அவனை தங்களது கஸ்டடியில் வைத்து போலீஸார் விசாரித்தபோது உண்மைகளைக் கக்கியுள்ளான். தான் தங்கியிருந்த வீட்டையும் அவன் கூறியுள்ளான். இதையடுத்து மற்ற நால்வரையும் அள்ளிக் கொண்டு வந்த போலீஸார், ஐந்து பேரையும் விசாரித்து, பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் எங்கேயோ வைத்து ஐவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை வேளச்சேரி வீட்டில் கொண்டு வந்து போட்டு செட்டப் செய்து விட்டனர் என்பது ஒரு வாதமாக உள்ளது.

இன்னொரு வாதம் என்ன சொல்கிறது என்றால், ஐந்து பேரையும் அதே வீட்டில் வைத்து வளைத்துப் பிடித்த போலீஸார், உள்ளே நுழைந்து ஐவரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள்தான் கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் உள்ளேயே வைத்து சுட்டு வீழ்த்தினர் என்கிறது.

தமிழக அளவில் பெரும் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதாலும், பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாலும் ஆத்திரத்தில் போலீஸார் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது அந்த வாதமாகும்.

போலீஸ் தரப்பில் சிலர் இதுகுறித்துக் கூறுகையில், இது செட்டப்பா அல்லது இயற்கையானதா என்பது இப்போது பிரச்சனையில்லை. தயவு செய்து அதுகுறித்து யாரும் ஆய்வு செய்ய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற துணிகரக் கொள்ளைச் சம்பவங்களில் யாரும் ஈடுபட அஞ்ச வேண்டும். அதற்கு இது ஒரு வார்னிங் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே பார்க்க வேண்டும். 100 கோடி பேர் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் நிம்மதியாக வாழ ஒரு ஐந்து கிரிமினல்கள் செத்துப் போவதில் தப்பில்லையே என்று 'நாயகன்' பட டயலாக் கணக்கில் கூறுகிறார்கள்!.

கருத்துகள் இல்லை: