செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

Tamilnadu வட மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு: போலீஸ் உஷார்

சென்னையில் நடந்த வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தங்கியுள்ள, வட மாநில தொழிலாளர்களைக் கணக்கெடுக்கும் பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கடந்த 20ம் தேதியும், பெருங்குடி பரோடா வங்கியில், கடந்த மாதம் 23ம் தேதியும் துப்பாக்கி முனையில், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள், பிஹாரை சேர்ந்த வினோத்குமார், சரிகரே, வினய்பிரசாத், அபய்குமார், அரிஷ்குமார் என்பது தெரிய வந்தது. கடந்த, 22ம் தேதி இரவு, வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேரையும், போலீசார் சுட்டுக் கொன்றனர். வேலைவாய்ப்புக்காக, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக முகாமிட்டுள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதால், தமிழகத்தைச் சேர்ந்த கான்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள், புரோக்கர்கள் மூலம், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

பிஹார், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்களில், கள்ளத் துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி போன்றவை, கள்ளச் சந்தையில் எளிதாகக் கிடைப்பதால், அங்கிருந்து வருபவர்கள் துப்பாக்கிகளை வாங்கி தமிழகத்துக்குக் கொண்டு வருவதாகவும், போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, சென்னையைப் போல, தமிழகத்தின் பிற இடங்களிலும், கொள்ளைச் சம்பவம் நடக்காமல் இருக்க, போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்டமாக, தமிழகத்தில் கடை, ஹோட்டல் வைத்துள்ள பிஹார், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் பெயர், முகவரி, தங்கியுள்ள இடம், வடமாநில தொழிலாளர்களின் சொந்த ஊர் ஆகியவை குறித்து, ஒவ்வொரு ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும், போலீசார் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.மாநிலம் முழுவதும் தங்கியுள்ள, வடமாநில தொழிலாளர் பட்டியல், காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: