சனி, 3 மார்ச், 2012

மக்களுக்கு எதிரானவராக காந்தி ஒருவர் மட்டுமே இருந்தார்.

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

ஏ.சண்முகானந்தம்
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்

ம்பங்களை தலையில் தூக்கி கொண்டாடுவதிலும், புரட்சியாளர்களை கண்டு கொள்ளாமல் விடுவதுமான நமது போக்கு வரலாறு நெடுகிலும் நடந்து வந்துள்ளது. காந்தி, பாரதியார், நேரு, இராசாசி சமீபத்திய அரசியல் கோமாளி அப்துல் கலாம் என முதலாளித்துவ பிம்பங்களை வரலாற்று நாயகர்களாகவும், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், வ.உ.சி., பகத்சிங், பாரதிதாசன் போன்ற மக்கள் தலைவர்களை மதிக்க தெரியாத அல்லது அவர்களது கொள்கைகளை பின்பற்றாமல் இருப்பது என கேடுகெட்ட சமூகமாகவே தமிழ் சமூகம் பல காலமாக இருந்து வந்துள்ளது.
‘பாரதிய ஜனதா பார்ட்டி’, ‘வே.மதிமாறன் பதில்கள’, ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’- போன்ற நூல்கள் வழியே தமிழ் வாசகர்கள் அறிந்துள்ள தோழர்.மதிமாறன் எழுத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல் ‘காந்தி நண்பரா? துரோகியா?’.
காந்தியை பற்றிய பிம்பம் இந்திய சமூகத்தில் வெகு நேர்த்தியாக முதலாளிகளாலும், அரசியல்வாதிகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்’ என்ற சொல்லாடலில் இருந்து ‘மகாத்மா’ வரையிலான பிம்பம்  திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தான், ஊமைத்துரை, கட்டபொம்மன், வ.உ.சி., பகத்சிங் போன்ற எண்ணற்ற புரட்சியாளர்களாலும், லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்திலும், உயிர்த்தியாகத்திலும் பெறப்பட்டதுதான் இந்திய சுதந்திரம்.
டாட்டா, பிர்லா உள்ளிட்ட வெள்ளையனுக்கு எடுபிடி வேலை செய்த பெரு முதலாளிகளுக்கு பாதிப்பில்லாத, வெள்ளையனுக்கும் சிக்கலில்லாத ஒரு தலைவர் தேவைப்படும் போது, எல்லாவற்றிற்கும் ஒத்து வரக்கூடிய தலைவராக, மக்களுக்கு எதிரானவராக காந்தி ஒருவர் மட்டுமே இருந்தார். வெள்ளையனும், இந்திய பெரு முதலாளிகளும் இந்திய மக்களின் ஒரே தலைவராக காந்தியை தூக்கிப் பிடிப்பதற்கான உள் நோக்கம் இது மட்டுமே.
இவரது தனிநபர் அகி(இ)ம்சை, சத்தியாகிரகங்களால் லட்சக்கணக்கான மக்கள் சின்னா பின்னமாக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்ட, தாழத்தப்பட்ட மக்களின் வாழ்வை நீண்ட காலத்திற்கு ஒடுக்கியது என இவரது அகிம்சையின் கொடூர கரங்கள் இந்திய சமூகத்தில் அனைத்து பக்கங்களிலும் நீண்டுள்ளது. இவை அனைத்தையும் மூடி மறைத்து விட்டு மகாத்மா என்று புகழ்வதின் உள் அர்த்ததை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக்கெதிராக காந்தியின் விடுதலை போராட்டம் துவங்கியதாக கூறப்படும் முதலாளித்துவ புளூகு மூட்டையை அவரது எழுத்துக்களில் இருந்தே நீருபித்துள்ள தோழர்.மதிமாறன் மிகுந்த பாராட்டிற்குரியவர் மட்டுமின்றி, காந்தி நண்பரா? துரோகியா?- என்ற வரலாற்று முக்கியத்துவம் உள்ள படைப்பை  சமூகத்திற்கு அளித்துள்ளார். இதை காலம் கடந்தாவது சமூகம் புரிந்து கொள்ளும்.
காந்தியிடம் நிலவிய சாதிய மனநிலையை தெளிவாக, அவரது எழுத்துகளில் இருந்தே விளக்கிய மதிமாறன், தென் ஆப்பிரிக்காவில் கூலி தமிழர்கள் வீடுகளில் தங்க தனது சாதி மனோபாவம் இடம் கொடுக்காததால், வெள்ளையனிடம் அடிமையாக இருப்பது தவறு இல்லை எனும் நிலைக்கு போகிறார் என்றால், சாதியின் இறுக்கம் காந்தியிடம் எவ்வாறு பிணைந்திருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த சாதிய மனோபாவத்திலேயே புரட்சியாளர் அம்பேத்கர் கோரிய இரட்டை வாக்குரிமையை சீர்குலைத்தது, பகத்சிங் தூக்கில் தொங்குவதை தடுக்க வாய்ப்பிருந்தும், தடுக்காதது, ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒட்டி தன்னெழுச்சியாக கிளம்பிய மக்கள் போராட்டத்தை, தனது தனி நபர் சத்தியாகிரகமாக மாற்றி போராடும் மக்களை காட்டி கொடுத்தது, கடற்படை வீரர்களின் போராட்டத்தை ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்காக தானே முன் வந்து ஒடுக்கியது… என அவரது ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அநாகரீகத்தின், துரோகத்தின் வெளியீடாகவும், ஆங்கிலேயே ஆட்சிக்கும், இந்திய தரகு முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக அமைந்தது என்பதே வரலாறாக நம் முன் இருக்கிறது.
காந்தி போன்ற பிம்பங்களை நாம் உடைத்தெறிவதன் மூலம், அதை கட்டிக் காக்கின்ற முதலாளித்துவத்தை, இந்தியத்தை கேள்விக்குள்ளாக்குவோம். காந்தியத்தை தூக்கியெறியும் அதே வேளையில், மார்க்சிய பாதையில், அம்பேத்கர், தந்தை பெரியார் சிந்தனைகளை உயர்த்தி பிடிப்பதன் மூலமே நாம் விரும்பும் சமூக மாற்றம் நிகழும் என்பதை நினைவில் கொள்வோம்.
காந்தியை பற்றிய சர்வதேச சமூகத்தின் பார்வையை மாற்ற ஆங்கிலத்திலும், இந்திய சமூகங்களுக்கு காந்தியின் கொடூர முகம் தெரிய ‘காந்தி நண்பரா? துரோகியா?’- நூல் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டியது அவசியம்.
வ.உ.சி. பற்றிய கட்டுரையில் அவரது விடுதலை போராட்டம் தெளிந்த சிந்தனையுடன் இருந்ததை குறிப்பிடும் தோழர்.மதிமாறன், வ.உ.சி. க்கு மகாத்மா காந்தி இழைத்த துரோகத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார். காந்தி மகாத்மாவாக இல்லாமல் போனாலும் கூட ஒரு சராசரி மனிதனாக, சக தோழன் சிக்கலில் இருக்கும் போது உதவும் ஒரு எண்ணம் கூட இல்லாமல் மனித பண்புகளுக்கு கீழாகவே  காட்சி தருகிறார். காந்தியின் அருவருப்பான தோற்றமே நம் முன் காட்சியளிக்கிறது.
வ.உ.சி. யிடம் நிலவிய சாதி மனோபாவமும், பெரியாரிடம் வந்த பிறகான அவரது சாதி ஒழிப்பு சிந்தனையும் இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானதாகும் அப்பணியை தோழர்.மதிமாறன் சிறப்புற செய்துள்ளார்.
 நூலில் குறிப்பிடக்கூடிய மற்றொரு முக்கிய அம்சம் – பின்அட்டை. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், காந்தியின் உடைகள் குறித்து தோழர்.மதிமாறனின் கருத்துக்கள் பலருக்கு சாட்டையடியாக இருக்கும். பின் அட்டை மிகப் பெரும் கருத்தை தாங்கி வந்துள்ளது பாராட்டுக்குரியது.
அந்த வகையில் நமக்கெதிராக உள்ள பிம்பங்களை அம்பலபடுத்த தோழர்.மதிமாறன் எழுத்துக்கள் உதவும், அதே வேளையில் நமக்கான சக்திகளை அடையாளப்படுத்தவும் மதிமாறனின் எழுத்துக்கள் உதவும். தோழர்.மதிமாறனின் எழுத்துக்களை தமிழ்ச் சமூகம் காலம் கடந்தாவது அங்கீகரிக்கும். காந்தியத்தை அழிப்போம்! மார்க்சிய பார்வையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிந்தனைகளை முன்னெடுப்போம்!!
 இறுதியாக, காந்தியை பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் சொன்ன சொல்லாடலில் நிறைவு செய்வதே பொருத்தமாக இருக்கும்.
               ’காந்தியைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்’
***
ஏ.சண்முகானந்தம்
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
எழுத்தாளர், சுற்றுசூழல் ஆர்வளர், ஆய்வாளர்.

கருத்துகள் இல்லை: