செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

K.Bhakiyaraj:வேற கட்சில சேர்றதா இருந்தா நானே கூப்பிட்டு சொல்வேனே!


Bhagyaraj
சென்னை: திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேரப்போவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கே பாக்யராஜ்.
தமிழ் திரையுலகில் 1970, 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் பாக்யராஜ். ஏராளமான படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார்.
1989-ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் குதித்தார். ஆனால் அரசியல், சினிமா இரண்டிலுமே அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
எனவே கட்சியை கலைத்தார். அரசியலில் ஒதுங்கியிருந்தாலும், அதிமுக அனுதாபியாக மட்டும் தொடர்ந்தார். 2006 ஏப்ரல் 5-ந் தேதி தி.மு.க.வில் இணைந்தார்.

தற்போது அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளர் இவர்தான். இவரது பேச்சைக் கேட்க எக்கச்சக்க கூட்டம். கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் பக்குவமான, யாரையும் முகம் சுளிக்க வைக்காத அளவுக்கு நாகரீகமாக பேசியவர் பாக்யராஜ்தான்.

ஆனால் சமீப காலமாக பாக்யராஜுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அ.தி.மு.க.வில் சேர அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து கே பாக்யராஜிடம் தட்ஸ்தமிழ் செய்தியாளர் தொடர்பு கொண்டபோது, "யாரோ கிளப்பிவிட்ட செய்தி இது. நான் நேற்று பாண்டிச்சேரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோதுதான் என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்கள். எனக்கே ஒரு செய்திதான் அது. இந்த செய்திக்கெல்லாம் என்னத்தை அபிப்ராயம் சொல்றது... நான் கட்சியில் சேருவதாக இருந்தால் எல்லோரையும் கூப்பிட்டு சொல்வேன். அந்த நேர்மையோடதான் இருக்கேன்," என்றார்.

அதிமுகவைச் சேர்ந்த சிலரே இப்படியொரு செய்தியை பத்திரிகைகளுக்கு கசியவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில்தான், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் அதிமுகவில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: