முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள சினிமாகக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினார்கள். தமிழ் சினிமாக்காரர்கள் அமைதியாக இருந்துவிட்டார்களே? இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டிய ஆர்வத்தைக் கூட இதில் காட்டவில்லையே?
-கனல், திருப்பூர்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள சினிமாகக்காரர்கள் மலையாள இன உணர்வோடு நடந்து கொண்டார்கள் என்பதைவிடவும், தமிழ் சினிமா மீது உள்ள வெறுப்புணர்வை காட்டுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள், என்பது சரியாக இருக்கும்.
ஏனென்றால், கேரளாவில் தமிழ் சினிமாதான் ஆதிக்கம் செலுத்துகிறது.
மலையாளத்தில் மொழி மாற்றம் கூட செய்யாமல் நேரடியாக வெளியிடப்பட்டு, மலையாளிகளிடம் செல்வாக்கு பெற்று திகழ்கிறது தமிழ் சினிமா. இதனால் மலையாள படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையும் நிலவுகிறது.
மட்டமான தமிழ் சினிமாக்களுக்கு, சினிமாக்காரர்களுக்கு எதிராக காட்ட முடியாத எதிர்ப்பை, தமிழர்களுக்கு எதிராக காட்டுகிறார்கள் மலையாள சினிமாவின் மாவீரர்கள்.
தமிழில் பெரிய கதாநாயகனாக ஆவதற்கு மோகன்லால் செய்த தீவிர முயற்சிகளை, சர்வதேச தகுதியுடன் உள்ள தங்களின் திறமைகளின் மூலம் அதை ஆரம்பித்திலேயே கிள்ளி எரிந்தார்கள் . ‘இருவர்’, ‘பாப்கார்ன்’ போன்ற கொடுமைகளின் மூலமாக.
இந்த இரு படங்களால், தமிழர்களும் துன்புறுத்தப்பட்டார்கள் என்பது வேறு கதை.
மோகன்லால் போன்றவர்களின் மலையாள படங்களில் தமிழர்களை இழிவானவர்களாக, வில்லன்களாக காட்டுவதின் காரணம், தன்னை தமிழ் சினிமாவில் அங்கிகரிக்காததே. இங்கு நடிகராக வெற்றி பெற்றிருந்தால் அப்படி ஒரு காட்சியை அங்கு அவர் எப்படி வைப்பார்?
மற்றபடி, தமிழ் சினிமாவில் நிரம்பி இருக்கிற மலையாளிகள் எப்படி கேரளாவிற்கோ, தமிழகத்திற்கோ ஆதரவு காட்டாமல் அமைதி காத்தார்களோ, அதே காரணத்திற்காகத்தான், தமிழ் சினிமாவின் தமிழ்த் தேசிய வீரர்களும் மவுனம் காக்கிறார்கள்.
இவர்கள் மலையாளிகளும் இல்லை, தமிழர்களும் இல்லை. பச்சையான சந்தர்ப்பவாதிகள்.
ஈழப் பிரச்சினையில் தற்கொலைபடையாக மாறுவோம் என்று பொங்கிய தமிழ் சினிமாக்காரர்களின் உணர்வும் தமிழ் உணர்வல்ல; அதுவும் இதுமாதிரியேதான்.
தங்கள் பொன், பொருள், உறவு இவைகளை இழந்து நிற்கதியாக உலகமெங்கும் பரவிய தமிழர்கள், தங்களுடன் ஜோதிடம், இந்து கடவுள் நம்பிக்கை, சாமியார்கள் கால்களில் விழுவது, ஜாதி உணர்வு, தமிழ் சினிமா மீதான மோகம் இவைகளைதான் தங்களின் உடமைகளாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்கள் தங்களின் தொலைந்த வாழ்க்கையை தேடி உலமெங்கும் பரவிய பிறகு, அவர்களை சுரண்டித் தின்னும் கூட்டம் இந்தியத் தமிழர்களிடம் பெருமளவு உருவானது.
ஜோதிடர்கள், சாமியார்கள், ஜாதி சங்கத் தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சினிமாக்கார்கள் என்று ஒரு பெரும் கூட்டம் புலம் பெயர்ந்த தமிழர்களை சூறையாடி கொண்டிருக்கிறது.
அதில் முக்கியமானர்கள் இந்த சினிமாக்காரர்கள்.
தமிழர்களின் துயரத்திற்காக பொங்கியது, இலங்கையில் இருக்கும் தமிழர்களை நினைத்தோ அல்லது இங்கு அகதிகள் முகாமில் இருக்கும் தமிழர்களுக்காகவோ அல்ல; வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களிடம் நற்பெயர் பெருவதற்கும், அவர்களிடம் செல்வாக்கும், நட்பும் பெருவதற்கும்தான்.
தமிழ் படங்களுக்கான சர்வதேச மார்க்கெட் புலம் பெயர்ந்த தமிழர்கள் உருவாக்கி தந்ததுதான். புலம் பெயர்ந்த தமிழர்களில் இன்னும் சிலர் தயாரிப்பாளர்களாகவும், வினியோகிஸ்தர்களாகவும், சினிமாக்காரர்களுக்கு பாராட்டுவிழா நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.
அதானல்தான் ஈழப் பிரச்சினைக்கு மீசை முறுக்கி விட்டு, முல்லைப் பெரியாறில் மீசையை மழித்தார்கள்.
ஆக, ஈழப் பிரச்சினையில் மீசை முறுக்கினால்தான் லாபம். முல்லை பெரியாறில் அமைதி காத்தால்தான் லாபம். (கேரள மலையாளிகளிடம் தமிழ் சினிமா மாவரைத்து ஏமாற்றுதற்கு வசதியாக இருக்கும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக