சனி, 30 ஜூலை, 2011

இடம் தேடி அலையும் "செம்மொழி இன்னொரு சமச்சீராக்காமலிருந்தால் சரிதான்.

தி.மு.க., ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்த, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' இன்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு 2004, அக்டோபர் 12ம் தேதி, "செம்மொழிகள்' என்ற சிறப்பு பிரிவை துவக்கி, தமிழை "செம்மொழி' என அறிவித்தது. அதன்பின், 2007ம் ஆண்டு, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' சென்னையில் துவக்கப்பட்டது. இதற்காக 11ம் ஐந்தாண்டு திட்டத்தில், 76 கோடியே 32 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இப்புதிய நிறுவனம் சென்னை பீச் ரோட்டில் உள்ள, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, பாலாறு இல்லத்தில் துவக்கப்பட்டது. இதன் இயக்குனராக மோகன், பொறுப்பு அலுவலராக பேராசிரியர் ராமசாமி நியமிக்கப்பட்டனர். தலைவராக அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணைத் தலைவராக பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி நியமிக்கப்பட்டனர். ஐம்பெரும் குழு, எண்பேராயம் போன்றவை துவக்கப்பட்டது. நிறுவனம் துவக்கப்பட்டபோதே, இடவசதி போதுமானதாக இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கிண்டி அருகே கட்டடம் ஒன்றை வாடகைக்கு பார்த்தனர். அங்கு அலுவலகத்தை கொண்டு செல்ல, மத்திய அரசிடம் அனுமதி பெற்றனர்.
ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஒதுக்கி தருகிறேன். வேறு இடம் பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதையேற்று, அலுவலகத்திற்கு இடம் பார்க்கும் பணியை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் நிறுத்தினர்.
கடந்தாண்டு(2010) ஜூலை, ஜார்ஜ் கோட்டையில், சட்டசபை கூட்டம் நடக்கும் அரங்கில், "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' துவக்கப்பட்டது. இதில் 35 ஆயிரம் நூல்கள், 2,000க்கும் மேற்பட்ட, "சிடி'க்கள் இடம் பெற்றிருந்தன. அங்கு 120 தமிழ் ஆய்வாளர்கள் அமர்ந்து, ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஓலைச்சுவடிகள், பழைய நூல்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.
புதிய அரசு பொறுப்பேற்றதும், சட்டசபை கோட்டையிலே செயல்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த, "பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்' இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தும், மூன்று அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' செயல்பட்டு வந்த பாலாறு இல்லத்தின், ஒரு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் குடியேறி உள்ளார். இதனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வரிடம் பேச, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரிகள், தங்கள் அலுவலகத்திற்காக இடம் தேடத் துவங்கியுள்ளனர். தங்கள் அலுவலகத்திற்கு 30 ஆயிரம் சதுரடி கொண்ட கட்டடம் தேவை என, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' அதிகாரிகள் கூறியதாவது:
"செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்திற்கு தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவிகள் தேவை இல்லை. எனினும், அப்போதைய முதல்வர் கருணாநிதியை மகிழ்விப்பதற்காக, அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆட்சி மாறியதும், நடைமுறைப்படி, ஜெயலலிதா தலைவராக அறிவிக்கப்பட்டார். சட்டசபை அரங்கில் செயல்பட்ட, நூலகத்தை அகற்றும் போது, புத்தகங்களை கொண்டு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்வதாகவும், வேறு இடம் ஒதுக்கி தருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் சொந்த கட்டடம்:
சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக 17 ஏக்கர் நிலம், தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், 2 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கட்டடம் கட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு கட்டடம் கட்டப்பட்டால், இடம் தேடி அலையும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

கருத்துகள் இல்லை: