புதன், 27 ஜூலை, 2011

கலாநிதி மீது மோசடி புகார்.கேபிள் ஆபரேடரை கடத்தி மிரட்டி கையெழுத்து

ராமநாதபுரம்: ஆட்களை கொண்டு மிரட்டி, தனது ரூ. 15 லட்சம் மதிப்பிலான கேபிள் பொருட்களை பறித்ததாக சன் டி.வி., நிர்வாக இயக்குநர் கலாநிதி மீது ராமநாதபுரம் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். தி.மு.க., பிரமுகரான இவர், அப்பகுதியில் கடந்த 98 முதல் 2002ம் ஆண்டு வரை லிங்க் ஆபரேட்டராக இருந்து கேபிள் தொழில் செய்து வந்தார். பின்னர் கடந்த 2008ம் ஆண்டு, 55 சேனல்களுடன் ரூ. 15 லட்சம் செலவில், புதிய ஹெட் எண்ட் எனப்படும் கேபிள் ஒளிபரப்பு கன்ட்ரோல் ரூம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக லைசன்சும் பெற விண்ணப்பித்தார். இந்நிலையில், இதுகுறித்து அறிந்த மதுரையைச் சேர்ந்த சன் டி.வி.,யின் சார்பு நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஆகாஷ் கேபிளைச் சேர்ந்த சரவணன் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் மேலும் 10 பேருடன் வந்து நாகராஜை மதுரைக்கு கடத்தி சென்றனர். அங்கு 2 நாட்கள் சிறைவைக்கப்பட்ட நாகராஜ், அப்போதைய மதிச்சியம் துணை ஆணையர் குமரவேல் முன்னிலையில் மிரட்டப்பட்டார். அவரது கன்ட்ரோல் ரூமை சுமங்கலி கேபிள் விஷனுக்கு ரூ. 20 பத்திரத்தில் மாற்றி எழுதிக்கொண்டனர். இந்நிலையில், இன்று ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியை சந்தித்த நாகராஜன், சன் டி.வி., நிர்வாக இயக்குநர் கலாநிதி மீது மோசடி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, தான் மிரட்டப்பட்ட போது, இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் தான் புகார் கூறிய போது, அதை போலீசார் ஏற்கவில்லை என்றும், தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக, உயர் போலீஸ் அதிகாரியான ஜாபர் சேட் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட்டு வருவதால் தைரியமாக புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., அனில் குமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: