திங்கள், 6 செப்டம்பர், 2010

பதநீரைப் பாதுகாக்க புதிய முறை: கலைஞர் கருணா‌நி‌தி அறிமுகம்

பதநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள 32
ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள்
பயன்பெறும் வகையில் பதநீரை 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் புதிய முறையை முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இன்று அறிமுகம் செய்துவைத்தார்.

இது குறித்து தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பி‌ல், பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் இயற்கையான ஊட்டச் சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; பற்கள் உறுதிப்படுகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது; அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது; இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்பொழுது பாலிதீன் உறையில் அடைத்து காலை முதல் மாலை வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது.


இயற்கையான சத்து மிகுந்த இந்த பதநீரைப் பல நாள்களுக்கு, ஏறத்தாழ 40 நாள்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்துப் பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள டெட்ரா பேக் முறையை முதல்வர் கருணாநிதி இன்று அறிமுகம் செய்தார். மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி செய்து நவீனமுறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனைவெல்லம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார். பதநீரும் பிற பொருள்களும் இம்முறையில் விற்பனை செய்யப்படுவதன்மூலம் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெற்றுப் பயனடைவதற்கு வழிவகுக்கும்.

இப்புதிய திட்டம் பதநீர்ப் பருவம் தொடங்கும் வரும் நவம்பர் மாதம் முதல் விரிவுபடுத்தப்படும். நவீன சாதனங்களுடன் பனைமரம் ஏறும் தொழிற்பயிற்சி : பனைமரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடைய குடும்பங்களின் நலன் கருதி பனைமரங்கள் மிகுந்துள்ள பகுதிகளில் கோவையிலுள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் உதவியோடு நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பான முறையிலும் பனைமரம் ஏறி தொழில் செய்திட 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இலவசமாகப் பயிற்சிகள் அளிக்கப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கருத்துகள் இல்லை: