International Tamil Writers Forum
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்3 B, 46th Lane, Colombo -06 P.O.Box: 350, Craigieburn,Vic-3064
Srilanka Australia
T.Ph: 00 94 2586013, 0094 777306506 T.Ph: 00 61 (0)3 9308 1484
Fax: 00 94 11 2362862 E.Mail: international.twfes@yahoo.com.au
E.Mail:editor@gnanam.info
ஊடகங்களுக்கான அறிக்கை
இலங்கையில் கொழும்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 6,7,8,9 ஆம் திகதிகளில், ஏற்கனவே திட்டமிட்டவாறு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடைபெறும் என்று இம்மகாநாட்டின் பிரதம அமைப்பாளர் திரு.லெ.முருகபூபதியும் மகாநாட்டிற்கான இலங்கை இணைப்பாளரும் ‘ஞானம்’ ஆசிரியர்; டொக்டர் தி.ஞானசேகரனும் நேற்று (05-09-2010) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கலை, இலக்கிய ஊடகத்துறையில் அறிந்ததை பகிர்தல் அறியாததை அறிந்துகொள்ள முயல்தல் என்ற அடிப்படை நோக்கத்துடன் இந்த மகாநாடு கடந்த சிலவருடங்களாகவே ஆலோசிக்கப்பட்டது எனவும் இதுதொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடந்தது எனவும் இக்கூட்டத்தில் தகைமைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கூறியதுடன் மகாநாடு எவ்வாறு அமையவேண்டும் எனவும் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆலோசனைக்கூட்டத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, “ அண்மைக்காலமாக தமிழ் எழுத்தாளர்களின் பரந்துபட்ட சந்திப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனை ஒருதேக்க நிலையாகவே நோக்கலாம். நீண்டதொரு இடைவெளிக்குப்பின்னர் சர்வதேச மட்டத்தில் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வரவேற்கப்படவேண்டியதொன்றாகும். இந்த மகாநாடு வெறுமனே தமிழ் எழுத்தாளர்கள் கூடிக்கலையும் மகாநாடாக அமைந்துவிடாமல் தமிழின் பெருமையை மேலும் விரிவுபடுத்துவதாகவும் வளமடையச்செய்வதாகவும் அமையவேண்டும். அதற்குரிய விதத்தில் திட்டங்கள் தயாரிக்கப்படவேண்டும். ஆரோக்கியமான வேலைத்திட்டமொன்றை முன்வைத்து அதற்கான செயற்பாடுகளை முன்கொண்டு செல்லவேண்டும்.
சர்வதேச மட்டத்தில் பரந்துபட்டுப்போயுள்ள புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் இந்த மகாநாடு உள்வாங்கவேண்டும் அதற்கான கால அவகாசம் தாராளமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். 2011 ஜனவரியில் மகாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கின்றீர்கள். ஒருவருட காலம் உள்ளது. காத்திரமாக மகாநாட்டை நடத்த முடீயும். எனவே மிகவும் ஆழமாக காரியமாற்றி நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது” – என்றும் பேராசிரியர் இக்கூட்டத்தில் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் உரையாற்றி மகாநாட்டு ஏற்பாட்டாளர்களை உற்சாகமூட்டினார்.
இந்த ஆலோசனைக்கூட்டச்செய்திகள் இலங்கையில் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகளில் விரிவாக பிரசுரமாகியுள்ளன. அத்துடன் பேராசிரியர் மற்றும் ஊடகவியலாளர்கள் படைப்பாளிகள், கலைஞர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களின் கருத்துக்கள், ஒளிப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் வெளியான தமிழ்ப்பத்திரிகைகளைப்பார்க்கலாம்.
இந்தமகாநாட்டுக்கான செலவுகளுக்குத்தேவையான நிதியுதவி புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படும் எனவும் வெளிநாடுகளில் வதியும் ஈழத்து எழுத்தாளர்கள் தலா நூறு டொலர்களை வழங்குவதன் மூலம் மகாநாட்டை திட்டமிட்டவாறு நடத்த முடியும் எனவும். மகாநாட்டில் ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கி போரினால் இயற்கை அநர்த்தத்தினால் விபத்தினால் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட எழுத்தளார்களின் குடும்பங்களுக்கு உதவும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்படும் என்று மகாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி இக்கூட்டத்தில் தெளிவாகத் தெரிவித்துமிருந்தார். போரினால் பாதிக்கப்பட்ட பல படைப்பாளிகளுக்கு சீர்மிய (ஊழரளெநடடiபெ) ஆதரவும் வழங்கப்படவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்ட ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இம்மகாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட 12 யோசனைகளில் பல ஆக்கபூர்வமான அதேசமயம் தூரநோக்குள்ள சீரிய திட்டங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.இந்த யோசனைகள் பல இதழ்களில், இணைய இதழ்களில் ஏற்கனவே வெளியாகியிருப்பதுடன், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப்பிரதேசங்களிலும் மகாநாடு தொடர்பான விரிவான தகவல் அமர்வுக்கூட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
அத்துடன் மகாநாட்டிற்காக இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா கனடா, அமெரிக்கா உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகள் ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் வருவதற்கு விருப்பம்தெரிவித்து தமது விண்ணப்பங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மகாநாட்டு செலவுகளுக்கு நிதிசேகரிப்பதற்காக கொழும்பில் பிரத்தியேகமான வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு வெளிநாடுகளிலிருக்கும் இலக்கியவாதிகளுக்கு அறியத்தரப்பட்டுள்ளது.
எந்தவொரு நிதிநிறுவனத்தினதோ அரசுகளினதோ ஆதரவின்றி முழுமையாக கலை, இலக்கிய, ஊடகவியலாளர்களின் நிதிப்பங்களிப்புடனேயே இம்மகாநாடும் நடத்தப்பட்டு, நம்பிக்கை நிதியமும் உருவாக்கப்படும் எனவும் மேலே குறிப்பிட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்தை சொல்லுவதற்கு முன்னர் மகாநாட்டின் அடிப்படை நோக்கங்களை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிட்டு மக்களிடம் தெளிவின்மையை ஏற்படுத்துவது தார்மீகப்பண்பு அல்ல.
இலங்கையில் இப்பொழுது நடைபெற ஏற்பாடாகியுள்ள இம்மகாநாடு இனிவரும் காலங்களில் வௌ;வேறு நாடுகளில் நடைபெறும். அதுபற்றிய தீர்க்கமான முடிவு நடக்கவுள்ள முதலாவது மகாநாட்டின் இறுதியில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.
இம்மகாநாடு இலக்கியவாதிகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் புரிந்துணர்வுமிக்க ஒன்று கூடலாகும். கால வெள்ளத்தில் எங்கெங்கோ சிதறுண்டு போனவர்கள் கலை இலக்கிய நேசிப்பின் நிமித்தம் மீண்டும் சந்தித்து கருத்துப்பரிவர்த்தனை செய்யக்கூடிய அரியதொரு சந்தர்ப்பமாகும். எனவே இதனை அரசியலாக்கி கொச்சைப்படுத்திவிடவேண்டாம் என்று பொறுப்புவாய்ந்த மூத்ததலைமுறை எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரையும் வினயமாகக்கேட்டுக்கொள்கின்றோம்.
நாம் இப்போது 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். புதிய தலைமுறை படைப்பாளிகள் தமிழ், கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் பிரவேசித்திருக்கும் காலமிது. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இயங்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு மூத்ததலைமுறையினரிடம்தான் இருக்கின்றது.தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் படைப்பாளிகளிடம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் இறுக்கத்தை தளர்த்தி நெருக்கத்தை ஏற்படுத்துவதும் இம்மகாநாட்டின் அடிப்படைச்சிந்தனை எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்கனம்
லெ.முருகபூபதி தி.ஞானசேகரன்
மகாநாட்டு அமைப்பாளர் மகாநாட்டிற்கான இலங்கை இணைப்பாளர்
மகாநாட்டு அமைப்பாளர் மகாநாட்டிற்கான இலங்கை இணைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக