திங்கள், 6 செப்டம்பர், 2010

புலிகளில் கொந்தராத்துகளை எடுத்து நடத்தியவர்கள் 6 மாதம் பதுங்கி இருந்து விட்டு மீண்டும் தற்போது அரசின்

கெஞ்சிக் கேட்கின்றேன்
வாழ்வதற்காக விடுதலை செய்வீர்
(சாகரன்)
போர் முடிவுக்கு வந்து 450 நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என இரு பெரும் தேர்தல்களும் நடைபெற்று முடிந்து விட்டன. கூடவே மாநகர தேர்தல்களும் நடைபெற்று விட்டன. போரினால் இடம் பெயர்ந்து வன்னியில் முள்ளுக் கம்பிகளுக்கு பின்னால் சென்றவர்களையும் படிப்படியாக தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றி இயல்பு வாழ்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. வடக்கிலிருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் சுயாதீனமாக மக்கள் நகர்ந்து செல்லும் இயல்பு நிலமைகளும் வந்து விட்டன. வடக்கு, கிழக்கு எங்கும் தொடர்ந்து இராணுவ முகாம்கள் வியாபித்திருக்கும் சூழலிலும் நாடு அமைதியான சூழலுக்குள் புகுந்து விட்டது.
இராணுவ முகாங்களுக்கு மத்தியில் சமாதானமாக வாழும் சூழல்களில் வாழ் மக்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். புலிகள், புலிகளுடன் விரும்பியோ விரும்பாமலோ இணைந்து ஆயுத் தூக்கியவர்கள் பல ஆயிரம் பேர் நலன்புரி முகாங்களிலிருந்து நல்வழி நடத்தலின் பின்பு தமது பெற்றோரிடம் அல்லது சுயாதினமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு தொழில் பயற்சி வழங்கி தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டும் விட்டனர். மனத்தால் இணைந்த பலரை மணத்தால் இணைத்து வாழவும் வாழ்த்தப்பட்டும் விட்டனர்.
ஜோர்ஜ் மாஸ்டரும், தயா மாஸ்டரும் வட மராட்சியில் சுயாதீனமாக நடமாடி தமது வாழ்வைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேபி பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புனருத்தாரணம், புனர்நிர்மாணம், மீள் குடியேற்றம் என்றும், அபிவிருத்தி என்றும் என்ஜீஓ (NGO) களை அமைத்து செயற்பட  அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்சியாக நலன்புரி முகாங்களில் மக்களை நேரடியாக சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடவே தமது முன்னாள் வெளிநாட்டு சகாக்களை ஊருக்கு செங்கம்பள வரவேற்புடன் அழைத்து 5 நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்து அரசுத் தலைவர்களையும், ஏனையவர்களையும் சந்தித்து தமது மேதாவிலாசங்களை நிரூபிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் பிரசன்ன காலத்தில் (சிறப்பாக வன்னியில்) புலிகளில் கொந்தராத்துகளை எடுத்து நடத்தியவர்கள் 6 மாதம் பதுங்கி இருந்து விட்டு மீண்டும் தற்போது அரசின் ஆதரவுடன் தமிழ் பிரதேசங்கள் எங்கும் கொந்தராத்துகளை எடுத்து தமது வியாபார நடவடிக்கைகளை விருத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டில் தெற்கு சீனாவிற்கு, வடக்கு இந்தியாவிற்கு என அபிவிருத்தியை முன்னெடுக்க அனுமதிகளும் வழங்கியாகி விட்டது.
மிக நீண்டகாலம் இலங்கையில் வாழ்ந்த 80 சீனர்களுக்கு இலங்கையில் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு இலங்கை அரசு முடிவு செய்து விட்டாகிவிட்டது. இன்னமும் மலையகத்தில் அல்லது தமிழ் நாட்டில் இலங்கையை வளமாக்கிய பல ஆயிரம் மலையகத்தவர்கள் எந்த நாட்டிற்கும் சொந்தமாவர்கள் அல்ல என்ற நிலையில் கூலிகளாக வாழ்கின்றனர் என்பது வேறு விடயம்.
தமிழ் செல்வனுக்கு இரங்கல்பா எழுதிய கட்சியின் தலைவரின் மகள், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கனினொழி, பிரபாகரனை இன்றுவரை தலைவராக ஏற்றுள்ள திருமாவளவன் போன்றவர்கள் இராஜதந்திர கடவுச்சீட்டுடன், செங்கம்பளம் இட்டு வரவேற்று அரச பாதுகாப்புடன் தமிழ் மக்கள் பிரதேசம் எங்கும் மீட்போராக காட்சியளிக்க அனுமதிச்சாச்சு. ஆனால்...... ஆனால்.....
மக்களின் விடிவிற்கு குரல் கொடுத்தார்கள், போராடினார்கள், போராட்டத்தை ஆதரித்தார்கள் என்பதற்காக 10 வருடங்களுக்கு மேல் எம் நாட்டு சிறைகளில் எப்போது விடுதலை என்பதை தெரியாமல் அடைபட்டிருக்கும் அந்த சிறைக்கைதிகள் விடத்தில் மட்டும் ஏன் ஐயா பாகுபாடு. மகிந்த ஐயாவே! வாய் திறவுங்கள். கருணை காட்டுங்கள் ஐயா. கடந்த காலங்களில் இவர்களில் சிலர் என்னைக் கொல்லக் கூட துப்பாக்கியுடன் அலைந்திருக்கலாம். ஏன் என்னைப் போன்றவர்களை கூட கொன்றிருக்கலாம். ஆனால் இவர்கள் ஒன்றும் கேபியை விட கூடாதவர்கள் அல்ல. பயங்கரமானவர்கள் அல்ல.

கருத்துகள் இல்லை: