ஞாயிறு, 25 மார்ச், 2018

கர்நாடகா: 15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்!

கர்நாடகா:  15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்! ''மின்னம்பலம்:  இந்தியா முழுதும் மூன்றரை கோடி முதல் நான்கு கோடி வரையிலான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் கர்நாடகாவில், ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசையும் ஏமாற்றி 15 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டப்பட்டதைப் பார்த்து கர்நாடக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்''
பெங்களூருவில் கடந்தவாரம் நடந்த தேர்தல் முறைகேடு தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலரும், கல்வியாளரும், இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக்கின் தலைவருமான தாவூத் மியாகான் இந்த அதிர்ச்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.


இந்தத் தகவல் எப்படி வெளியானது?
‘’அண்மையில் டெல்லியில் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஓர் கூட்டம் நடந்தது. அதில் பல மாநிலங்களிலும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பலர் நீக்கப்படுவது தொடர்பாக ஆழமான கவலையுடன் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விவாதித்து முடித்து விட்டுவிடவில்லை. சச்சார் கமிட்டிக்காக புள்ளி விவரங்களை தயாரித்த குழுவினரிடம் இதை சரிபார்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைப் பட்டியலையும், அண்மையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலையும் வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. மக்கள் தொகை பட்டியலில் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கலாம். அதில் இருந்துவிட்டு இதில் இல்லையென்றால் ஒன்று இறந்திருக்க வேண்டும், அல்லது இடம் பெயர்ந்திருக்க வேண்டும். இந்த விடுபட்ட வாக்காளர்களை பட்டியலாக தயாரித்தார்கள். ஆக இரண்டு அரசு ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த விடுபட்ட வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த விடுபட்ட வாக்காளர்கள் பட்டியல் தனித்தனி குழுக்களிடம் கள ஆய்வுக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இந்த விடுபட்ட வாக்காளர் பட்டியல் ஆய்வு கர்நாடகாவில் முன்னுரிமை கொடுத்து நடத்தப்பட்டிருக்கிறது. அங்கே தேர்தல் வர இருப்பதால் இந்த முன்னுரிமை.
கர்நாடகாவில் குழுக்களிடம் கொடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதில் கர்நாடகத்தில் விடுபட்ட வாக்காளர்கள் 18 லட்சம் பேர் என்று தெரியவந்தது. இதை களப் பணியாளர்கள் ஆய்வு செய்தபோது இறந்தவர்கள் அல்லது இடம் பெயர்ந்தோர் சுமார் மூன்றரை லட்சம் பேர்தான் என்பது தெரியவந்திருக்கிறது. கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 15 லட்சம் பேரும் முஸ்லிம்கள் அல்லது பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் என்பதுதான் இங்கே அதிர்ச்சி தரவைக்கும் செய்தி.
இந்த ஆய்வுக்கான அடிப்படை எங்கிருந்து தொடங்கியது?
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமூக ஆய்வுகள் மேற்கொண்டு வரும் யோகேந்திர யாதவ்தான் இந்த பொறியை முதலில் உணர்ந்திருக்கிறார். அவர் தனக்குக் கிடைத்த தகவலின்படி உ.பி, டெல்லி உட்பட பல மாநிலங்களில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருப்பதை உறுதி செய்துகொண்டார். அதன் பின்னர் ஹர்ஷ் மேந்தர் முன்னாள் ஐ.ஏ.எஸ்,( குஜராத் கலவரத்தைப் பார்த்து தனது பணியைத் துறந்தவர். இந்தியா முழுவதும் இப்போது சமூக மேம்பாட்டுப் பணியை செய்து வருகிறார்) மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் இதை ஆய்வு செய்து அதன் பின் சச்சார் கமிட்டிக்கான புள்ளிவிவரங்கள் தயாரித்த குழுவிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டு இப்போது இந்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
இத்தனை பெரிய மோசடி மத்திய மாநில தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் முடியுமா? குறிப்பாக கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ்தானே இருக்கிறது?
வாக்காளர் பட்டியலில் நீக்கம், சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றை செய்ய மாநிலத் தேர்தல் ஆணையத்தால்தான் முடியும். கடந்த வாரம் பெங்களுருவில் தேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பது எப்படி என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கலந்துகொண்டார். கர்நாடகத்தின் மூத்த அமைச்சர் ரோஷன் பேக், அம்மாநில சிறுபான்மை ஆணையத்தின் நிர்வாகிகள், மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நானும் கலந்துகொண்டேன்.

சச்சார் கமிட்டி அறிக்கையையும், பரிந்துரையையும் அளித்த குழுவைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அளித்த அறிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கர்நாடக மாநிலத்தில் ஏறக்குறைய 15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான விவரத்தை அவர்கள் கணிணி ஆதாரங்களுடன் அளித்தனர். அவ்வாறே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்கும் இதர வாக்காளர்களிலும் கணிசமானவர் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அறிய முடிந்தது.
குறிப்பாக பெங்களூருவின் மையத்தில் இருக்கும் சிவாஜி நகர் தொகுதியில் 8,800 முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதை அறிந்து அமைச்சர் ரோஷன் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவர்தான் அந்தத் தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ. ’நாங்கதானே இங்க ஆளுங்கட்சி, எங்களை மீறி எப்படி நடந்திருக்கும்? இது தவறான தகவல்’ என்றார். அவரது தொகுதியில் ஆய்வு செய்யச் சொன்னோம். மீட்டிங் ஹாலில் இருந்தபடியே தனது தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விடுபட்ட வாக்காளர் பட்டியலை அனுப்பி அது சரியா என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

அடுத்த நாள் மாலை அமைச்சர் ரோஷன் ஆய்வின் முடிவில், குழு கொடுத்தபடியே 8, 800 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதையும் அவர்களில் சுமார் 500 முதல் 800 பேர் வரையிலுமே நிஜமான இறப்பு, இடப்பெயர்ச்சி காரணமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற 8 ஆயிரம் பேரும் திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதிர்ச்சி தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் தலைநகரில் காங்கிரஸ் அமைச்சரின் தொகுதியிலேயே இவ்வளவு நீக்கம் நடந்திருக்கிறது என்றால் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் கர்நாடக காங்கிரஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
இப்போது அவசர அவசரமாக 20 ஆயிரம் பேரை ஈடுபடுத்தி திட்டமிட்டு நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க ஆரம்பித்துள்ளார்கள். இன்னும் சில நாட்கள்தான் உள்ளன. அவர்களால் அவசரமாக செயல்பட முடிந்தாலும் 15 லட்சம் பேரில் சுமார் மூன்றரை லட்சம் பேர் வரைதான் சேர்க்க முடியும்.
தமிழகமும் உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இந்தியா முழுதும் முஸ்லிம் வாக்காளர்கள் 4 கோடி வரை குறைந்திருப்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த தேர்தலில் நிஜமான ஜனநாயக முடிவுகள் கிடைக்கும்’’ என்று எச்சரித்தார் தாவூத் மியாகான்.
அதிர்ச்சி தரத் தக்க அபாயமான எச்சரிக்கை.
ஆரா

கருத்துகள் இல்லை: