நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி
திமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்
நடைப்பெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா
நக்கீரன் இணையதளத்திடம் நீட் தேர்வே கூடாது என்பதை வலியுறுத்தி பேசினார்.
”சிபிஎஸ்சி பள்ளிகளில், மேட்டுக்குடியினர் படிக்கக் கூடிய பள்ளிகளில்
அவர்கள் வசதிக்காக உருவாக்கிய நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து
செய்ய வேண்டும். இந்தியாவுக்கு எதற்கு இரண்டு கல்வி அமைச்சர்.
மாநிலத்திற்கு ஒரு கல்வி அமைச்சர். மையத்திற்கு ஒரு கல்வி அமைச்சர். இந்த
நாட்டினுடைய சட்டம் உருவாக்கிய காலத்தில் மத்தியில் கல்வி அமைச்சர் இல்லை.
இப்போது அவர்கள் அந்த துறையை உருவாக்கி வைத்துக்கொண்டு ஒரு நாடு, ஒரு
வரி என்று சொல்வதுபோல அவர்கள் ஒரு நாடு, ஒரு கல்வி, ஒரு மதம், ஒரு
நாகரீகம், ஒரு பண்பாடு அது மோடி பண்பாடு, இந்துத்துவா பண்பாடு என்கிற
அடிப்படையில் இந்த நாட்டை நடத்திக்கொண்டு செல்கிறார்கள்.
சாதாரண அரசு பள்ளிகளிலும், மற்ற பள்ளிகளிலும் படிக்கிற மற்ற
மாணவர்கள், சிபிஎஸ்சியில் படிக்கும் மாணவர்களோடு போட்டியிட தேவையில்லை.
மத்திய அரசு தனியாக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கவோ, கல்விக் கூடங்களை
நடத்தவோ தேவையில்லை. மத்திய அரசுக்கு நேரம் எங்கே இருக்கிறது. மத்திய
அரசுக்கு என தனியாக மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள்.
ஒரு இன்ஞ் நிலமாவது மோடி அரசுக்கு இருக்கிறதா. எல்லாம் மாநில அரசின்
நிலம். ஆகவே மாநில அரசுக்குத்தான் கல்வித்துறை இருக்க வேண்டும். மாநில
அரசின் நலன்களை மத்திய அரசு பிடிங்கிக் கொண்டு , நம்முடைய உரிமைகளையெல்லாம்
பிடிங்கிக்கொண்டு, அவர்கள் இப்போது ஒவ்வொன்றாக நமது மீது திணித்து
வருகிறார்கள். ஆகவே இந்தக் கல்விக்கொள்கையில் அவர்கள் குறுக்கிட்டிருப்பது
மாநில உரிமைகளில் முற்றிலும் குறுக்கிட்டதாகும்.
இந்த கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். சிபிஎஸ்சியை விட உயர்வான
தேர்வுகளை நமது மாணவர்கள் எழுதக் கூடிய காலம் வரும். அதற்கான நிலைகளை நாம்
உருவாக்க வேண்டும். அது வேறு. ஆனால் ஓராண்டு, ஈராண்டுக்கு பிச்சையெடுத்து
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று அன்றைக்கு மட்டும் தயாராக மாணவர்களை
அதில் திணிப்பதில் நியாயமில்லை.
திராவிட இயக்கம் என்றைக்கும பிற்பட்டோருக்கான இயக்கம். திராவிட
இயக்கம் கிராமத்தினதிற்கும், சாதாரண மக்களுக்கான இயக்கம். ஆகவே அந்த
இயக்கம் இருக்கிற வரையிலும் இவைகளை இவர்கள் செய்துவிட முடியாது. நம்முடைய
கெடுபிடிகளால்தான் எடப்பாடி அங்கே போய் மடியேந்தி நிற்கிறார். நம்முடைய
உரிமைகளுக்காக நீங்கள் போராட வேண்டும். மடியேந்தி நிற்கக் கூடாது. எடப்பாடி
அரசு ஒரு பேடி அரசாக செயல்படுகிறது. மோடி அரசுக்கு வாய்த்திருக்கிற ஒரு
பேடி அரசு.
தன் உணர்வோடு, மனத் தெம்போடு தமிழக மக்களின், மாணவர்களின் கல்வியை
காக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் பொறியியல்
கல்லூரிக்கும் நீட் தேர்வினை கொண்டுவரப்போகிறார்கள். எல்லா கல்வி
நிலையங்களிலும் நீட் தேர்வு வந்துவிடுமானால் நமக்கு கல்வி அமைச்சரே
தேவையில்லை என்ற நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.
மொல்லமாரிகள் போலீசுக்கு பயப்படுவதுபோல நமது மாநிலத்தில் உள்ள
அமைச்சர்கள் எல்லாம் டெல்லியில் உள்ள மோடி அரசுக்கு பயப்படுகிறார்கள். ஆகவே
இவர்களால் எந்த ஒன்றையும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காப்பாற்ற
முடியாது. அது காவிரி நீர் சிக்கலானாலும் சரி, நீட் தேர்வானாலும் சரி எந்த
ஒன்றிலும் அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது.
ஜெயலலிதாவின் அரசு செய்த தவறுகளில் இருந்து சிலவற்றில் இருந்து விடுபட
மோடி நினைத்துத்தான் நாம் உருவாக்கிய துறைமுகத்திற்கும், மதுரவாயலுக்கும்
இடையேயான சாலையை திறந்து விட வேண்டும் என்ற நிலை வந்தவுடன் கலைஞருடைய
நிலையை ஏற்றுக்கொண்டு அந்த பறக்கும் சாலையை உருவாக்கி வருகிறார்.
மெட்ரோ ரயில் கலைஞர் கொண்டு வந்த திட்டம். அதனை எதிர்த்து மோனோ ரயில்
கொண்டு வந்தார் ஜெயலலிதா. ஆனால் எடப்பாடி அந்த மோனா ரயிலை கைவிட்டுவிட்டு,
மெட்ரோ ரயிலை விரிவு செய்து பெருங்களத்தூர் என அந்தப்பக்கம் நீடிக்க
வேண்டும் என்று நினைக்கிறார் என்றால் பல சமயங்களில் ஜெயலலிதாவின் பெயரால்
கலைஞரின் ஆட்சியை சிலவற்றில் எடப்பாடி நடத்துகிறார். மற்றவற்றில்
முதுகெலும்பு இல்லாதவர்களாக நடந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய நலன்
முற்றிலுமாக அடகு வைக்கப்பட்டுவிட்டது. இவர்கள் தங்களை அடகு
வைத்துக்கொள்ளட்டும். அதைப்பற்றி பேச்சில்லை. ஆனால் 7 கோடி மக்களின்
நலன்களையும் அடகு வைக்கிறார்கள். இது வெகுகாலத்திற்கு ஓடாது.
நீட் தேர்வுக்கு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் ஏற்றினார்கள். அதனை
குடியரசுத் தலைவருக்கு அனுப்பவும் இல்லை. அனுப்பினாலும் இவர்களை
மதிக்கமாட்டார்கள். 7 கோடி மக்கள் ஒன்றாக நிற்கக்கூடிய நிலை ஏற்படுமானால்
ஒரு மாநிலத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு நடத்த முடியாது.
நமக்கு எதுவெல்லாம் தனிக் கொள்கைகளோ, அந்த கொள்கைகளுக்காக திமுகவோடு
இணைந்து நின்று போராட எடப்பாடியார் தயாரானால் இவற்றையெல்லாம் சாதிக்க
முடியும். ஆனால் இவருடைய நோக்கம், ஓடுகிற காலம் வரை இந்த வண்டிய
ஓட்டிவிட்டு இறங்க வேண்டும் என்பதுதான். ஆகவே அவரால் இது முடியாது.
எடப்பாடிய பழனிசாமி தொகுதிக்குள் மு.க.ஸ்டாலின் நுழைந்துவிட்டார்
என்றதுடன், ஏதோ தனது ஆட்சிக்குள் நுழைந்துவிட்டார் என்பது போல அவருக்கு ஒரு
பதட்டம் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் செய்ய வேண்டிய வேலை. உங்கள் கையில்
இருக்கிறது பொதுப்பணித்துறை. நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்யாத
காரணத்தினால்தான், திமுகவினர் அதனை ஒரு மாதிரியாக எடுத்துக்காட்டுவதற்காக
ஏரிகளை, குளங்களை தூர்வார தொடங்கினார்கள். இது எதிர்க்கட்சியினரின் வேலை
இல்லை. ஆனால் இதனை செய்துகாட்டி உங்களுக்கு உணர்த்துவதற்காக இதனை
செய்தார்கள்.
பாஜக தலைவி சொல்கிறார், பாவ விமோசனம் பெறுவதற்கு ஸ்டாலின் ஏரிகளை,
கோயில் குளங்களை தூர்வாருகிறார் என்று. அரசு ஏரிகள், குளங்களை அவர்கள்
அனுமதி கொடுக்க மறுக்கிற காரணத்தினால், நாம் செய்கிற வேலைகள் கோயில்
குளத்திற்கு வசதியாக இருக்கிற காரணத்தினால் எங்களுக்கு செய்து கொடுங்கள்
என்று வருகிறார்கள். அதனாலேயே கிடைக்கக் கூடிய இடம் எதுவாக இருந்தாலும்
நீர் ஊறட்டும், பெருகட்டும் என்று சொல்லி இந்த வேலையை செய்கிறோம். உடனே
இதற்கு பாவ விமோசனம் என்று சொல்கிறார்கள்.
அரசு நிலங்களை திறந்துவிட்டால் அங்கேயும் தூர்வாரி சுத்தம் செய்வோம்.
அரசாங்கம் பொதுமக்களிடம் வரி வாங்குகிறது. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை
நீங்கள் உணர வேண்டும் என்பதற்காக நாங்கள் செய்துதருகிறோம், முழுமையாக
நாங்களே செய்வோம். ஒப்படை அரசாங்கத்தை எங்களிடம்”.
-வே.ராஜவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக