செவ்வாய், 8 நவம்பர், 2016

ஸ்டாலினின் நம்பிக்கையில்லா தீர்மானம்! 12 குழுக்களையும் அமைக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்?


மின்னம்பலம்.காம் :பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதுபற்றி ஆளுநரிடம் பேசப் போவதாக தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்த திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது “முதல்வர் எதிர்த்துவந்த மத்திய அரசின் திட்டங்களை தற்போது அதிமுக ஏற்றது ஏன் என்று அதிமுக அரசுக்கு கேள்வி எழுப்பிய அவர், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது பற்றி ஆளுநரிடம் பேசுவேன் என்று தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இரண்டாவதுமுறையாக சந்திக்கச் சென்ற ஸ்டாலின், இரண்டு கடிதங்களை அவரிடம் கொடுக்கச் சென்றார். ஆனால் அவர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் அவருடைய செயலாளரிடமும் தலைமைச் செயலாளரிடமும் பேரவைச் செயலாளரிடமும் கடிதங்களை வழங்கி வந்தார். காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அழைப்புவிடுத்த அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான விவரங்களை வழங்கியதோடு, தமிழக சட்டப்பேரவையில் அமைக்க வேண்டிய மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, நிறுவனங்கள் குழு, பேரவை உரிமைக் குழு உள்ளிட்ட 12 குழுக்களை அமைக்க வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதத்தையும் வழங்கி வந்திருந்தார். அன்று பன்னீரை சந்திக்கமுடியாத ஸ்டாலின் வெளியில் வந்து “அலுவல் ஆய்வுக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நானும் சட்டமன்ற துணைத்தலைவர் துரைமுருகனும் அவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது இக்குழுக்களை விரைவில் அமைப்பதாக சபாநாயகர் உறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை அமைக்கப்படவில்லை. சட்டப்பேரவை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டுள்ள உறுதிமொழியாகிய இந்த குழு அமைக்கும் பணியை சபாநாயகருக்கு நினைவூட்டும்வகையில் இன்று ஒரு கடிதம் வழங்கியுள்ளோம். மேலும் இதுகுறித்து ஆளுநரிடமும் நாங்கள் எடுத்துச்சொல்ல இருக்கிறோம். இதற்கு மேலும் பேரவைக் குழு அமைக்கப்படவில்லை என்றால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்று, கடந்த 27ஆம் தேதி ஊடகங்களிடம் சொல்லியிருந்த நிலையில், குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் முயல்வேடம் அணிந்த முதலைகள் – என்ற தலைப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளநிலையில், இன்று பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக ஆளுநரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட கோரினார் ஸ்டாலின், அதுபோல, சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் கூட்டச் சொன்னார். பின்னர், சாலை கட்டமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரினார். ஆனால் எதையும் அரசு கண்டுகொள்ளாதநிலையில் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஆளுநரைச் சந்திக்கவிருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், இதற்காகவாவது அரசிடமிருந்து ஏதாவது பதில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: