திங்கள், 19 செப்டம்பர், 2011

கலர் "டிவி' காத்திருந்த 10 லட்சம் பேரை அரசு ஏமாற்றியுள்ளது.

"தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைப்பதற்கு ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, போலீசாரும் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும். வினையை இன்றைக்கு விதைப்பவர்கள், ஒருநாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களை பொய் வழக்கில் எப்படி சிக்க வைப்பது என்பதை மட்டுமே ஆளும் அ.தி.மு.க.,வினர் சிந்தித்து வருகின்றனர். ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, தி.மு.க.,வினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்து வருகின்றனர்.ஒரு வழக்கில் கோர்ட் ஜாமின் வழங்கினால், வேறு ஏதாவது ஒரு வழக்கை அவர்கள் மீது தொடர்ந்து, சிறையில் வைப்பதற்கான முயற்சியில் போலீசாரின் துணையோடு ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வினையை இன்றைக்கு விதைப்பவர்கள், ஒரு நாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பது மட்டும் உண்மை. போலீசாருக்கும் சேர்த்து தான் இதைச் சொல்கிறேன்.

மேலும், ஏட்டிக்கு போட்டி என்ற அளவில் அ.தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவசத் திட்டங்களுக்கு போட்டியாக அ.தி.மு.க., அரசு சில திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியுள்ளது.தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்திய இலவச அரிசி திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம், காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சற்று விரிவாக்கி, நிதியுதவியை அதிகரித்து, புதிய திட்டங்கள் போல் அ.தி.மு.க., அரசு அறிவித்துள்ளது.

அதே சமயம், இலவச கலர், "டிவி' திட்டத்தை தொடரப் போவதில்லை என அறிவித்து, கலர் "டிவி'க்காக காத்திருந்த 10 லட்சம் பேரை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. அதற்கு பதிலாக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, ஆடு, மாடுகள் என இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இந்த இலவசங்களை எப்படி வழங்குகின்றனர் என்பதை தமிழக மக்கள் போகப் போக புரிந்து கொள்வர்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: