செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தர்கா இடிப்பு: கோட்டாபய தன்னிலை விளக்கம்!


இலங்கையின் அநுராதபுரத்தில் இம்மாதத்தில் முன்னதாக புத்த பிக்குகள் சிலரால் இடிக்கப்பட்ட முஸ்லிம் தர்கா தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக வெளியாகியிருந்த செய்திகளுக்கு தற்போது கோட்டாபய விளக்கமளித்துள்ளார்.
செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்ததுபோல இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் உத்தரவிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தர்கா இடிப்பு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரைச் சந்தித்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளில் சிலர், இந்த தர்கா மீண்டும் கட்டித்தரப்படும் என்று கோட்டாபய உத்திரவாதம் வழங்கியுள்ளார் என்ற புரிதலுடன் வெளிவந்திருந்தனர்.

கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே ஒழிய, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தரப்படுவதற்கு தன்னால் ஏற்பாடு செய்ய முடியாது என்று கோட்டாபய பிபிசியிடம் விளக்கமளித்துள்ளார்.
மீள் கட்டுமானம் பற்றி பேசவேண்டுமானால் முஸ்லிம் மற்றும் பௌத்த பிரதிநிதிகள் மதவிவகார அமைச்சிடம் அவ்விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பிக்குகள் செயலை விமர்சித்தார்


தர்கா இடிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், இப்படியான செயலுக்கு யாரும் ஒப்புதல் அளித்திருக்கவில்லை என்றும், சட்டத்தை யாரும் அவரவர் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது என்றும் சமூகங்கள் இடையிலான நல்லுறவை யாரும் கெடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இந்த தர்கா நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.

ஆனால் பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார். இந்த தர்காவை இடித்துவிட வேண்டும் என மத விவகார அமைச்சகத்தில் தாங்கள் முறையிட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அதனை தாங்களாக இடித்துவிட்டதாகவும் அந்த பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

தர்கா இடிப்புக்கு அவ்வட்டாரத்தின் முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் ஓட்டுகள் அதிகமாக உள்ள கொழும்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்த மாத ஆரம்பத்தில் வரிசையாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: