சரணடையும் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் வாழ்க்கை, அவரது சுயவிபரங்கள் மற்றும் அவரது தேர்தல் பிரசாரம் பற்றி கேள்வி கேட்பதே எனது நோக்கமாக இருந்தது. எனினும் எனது கடைசி கேள்வி வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியதாக இருந்தது.
அப்போது கோட்டா, பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் புலி சந்தேக நபர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய வரும்போது அவர்களை கொல்லு மாறு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் கூறினார். அதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வாறு பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவிடம் கூறிய சம்பவத்தை தலைப்புச் செய்தியாக போடுவதற்கு தீர்மானித்தேன் என்று சாட்சியமளித்த போது பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.
பிரதி சட்டமா அதிபர் ஜெனரல் வசந்த நவரட்ன பண்டாரவினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போது இவ்வழக்கின் முதலாவது சாட்சியான பிரெட்ரிகா ஜான்ஸ், தான் லசந்த விக்ரமதுங்கவின் மரணத்தையடுத்து 2009 மார்ச் 1ம் திகதி முதல் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.
தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியா, சுத்தவாளியா என்று கேட்கப்பட்ட போது சரத் பொன்சேகா தான் சுத்தவாளி என்று அவர் கூறினார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி. வீரவெவ, எம்.எஸ்.ரக்ன் ஆகியோர் முன்னிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது. 1991ல் தான் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் சேவையாற்றியதாகவும் 1995 இலேயே தான் சண்டே லீடர் பத்திரிகையில் சேர்ந்ததாகவும் சாட்சி பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார். லசந்த விக்ரமதுங்கவின் அழைப்பின் பேரிலேயே தான் சண்டே லீடரில் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க சண்டே லீடர் பத்திரிகையின் முகாமைத்துவம் தீர்மானித்ததையடுத்து தான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் பேட்டி எடுத்ததாக அவர் கூறினார்.
பேட்டிக்கு டிசம்பர் 9ம் திகதி சரத் பொன்சேகா நேரம் ஒதுக்கியதாகவும், ஆனால் பின்னர் டிசம்பர் 8ம் திகதி மாலை 6.30 மணிக்கு தன்னை பேட்டி எடுக்க வருமாறு கேட்டுக் கொண்டதாக சாட்சியமளித்த பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.
பேட்டியின் போது சரத் பொன்சேகாவின் பல படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேறு சந்தேக நபர்கள் எவருடனும் இன்றி சரத் பொன்சேகாவை தனியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது.
சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லதுவாஹெட்டி கேட்டுக் கொண்டதையடுத்து இவ்வாறு அவர் தனியாக அழைத்துவரப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை பிற்பகல் 1.30 க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக