தமிழ்நாட்டில் பூந்தமல்லியில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதி ரமணன் 24 தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக, அவரது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.
ரமணன் தற்போது பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை அகதிகளில், போராளி இயக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருபவர்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, சென்னையை ஒட்டிய பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாதுகாப்புடன் கூடிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு முகாம்களிலும் மொத்தம் 30 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இப்படி அடைக்கப்பட்டிருப்பவர்கள் தங்களை விடுவிக்ககோரி கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தங்களை இந்த முகாம்களிலிருந்து விடுவித்து தங்களின் குடும்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிவருகின்றனர்.
ஆனால் இவர்களின் கோரிக்கையை எதிர்க்கும் தமிழக காவல் துறையினர், இவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படவேண்டியவர்கள் என்றும், இவர்களை இந்த உயர்பாதுகாப்பு முகாம்களை விட்டு வெளியில் விடமுடியாது என்றும் வாதாடி வருகிறார்கள்.
இந்த பின்னணியில், இலங்கைக்கு ஆயுதங்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டுவரும் ரமணன் செவ்வாய்க்கிழமை காலை 24 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக அவரது வழக்கறிஞர் கூறுகின்றார்.
தம்மை பூந்தமல்லி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கக்கோரி ரமணன் விடுத்த முந்தைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட தீவிர மனஉளைச்சல் காரணமாகவே அவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
ரமணன் உட்பட சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் 30 இலங்கை தமிழ் அகதிகளை விடுவிக்க வேண்டிய அவசர அவசியத்தை ரமணனின் தற்கொலை முயற்சி வலியுறுத்துவதாகவும் ராஜீவ் காந்தி கூறினார்.
தமிழக முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக