ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கை துண்டிக்கப்பட்ட பேராசிரியர் “டிஸ்மிஸ்”: கல்லூரி நிர்வாகத்திற்கு கேரள மந்திரி எச்சரிக்கை

கேரள மாநிலம் தொடுபுழா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் ஜோசப். இவர் கல்லூரி தேர்வுக்கு இஸ்லாமிய மதம் சம்பந்தமான சர்ச்சைக் குரிய கேள்வியை தயாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் பேராசிரியர் ஜோசப்பின் கையை வெட்டியது.
 
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் பேராசிரியர் ஜோசப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். தனது தவறுகளுக்காக மன்னிப்பு கேட்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மீண்டும் தன்னை பணியில் சேர்த்துக் கொள்ள ஜோசப் விண்ணப்பித்திருந்தார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டது. பேராசிரியர் ஜோசப்பை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் மறுத்ததற்கு கேரள கல்வி மந்திரி எம்.ஏ. பேபி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
 
கல்லூரி பணியில் இருந்து ஜோசப்பை நீக்கும் போது உரிய விதிமுறைகளை கல்லூரி நிர்வாகம் பின்பற்றவில்லை. இது கண்டிக்கத்தக்கது. மீண்டும் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கல்லூரி நிர்வாகம் தனது முடிவை மறு பரிசீலனை செய்யா விட்டால் அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: