டெங்கு நீ வரவேண்டும். நாடு நல்லாயிருக்க-
இலங்கையர்கள் குப்பையர்கள் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. பெரியாஸ்பத்திரிக்குள் எச்சியைத் துப்பிவிட்டு வெளியே வந்து ஆஸ்பத்திரி குப்பை என சொல்பவர்கள் அல்லவா நாங்கள். பேருந்துகளில் பயணம் செய்தால் போதும் இந்த உண்மை என்னவென்று புரிந்து விடும். இலங்கையில் வாழும் மூவின மக்களில் நான்கில்; ஒரு பங்கினர் தவிர்த்து ஏனையோர் குப்பை போடுவதில் வல்லவர்கள். நாட்டைப் போய்பார்த்தால் இந்த லட்சணம் புரிந்து விடும். எந்த நகரங்களில் பொதுக்குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன. அப்படி வைத்தாலும் குப்பைத் தொட்டியை இரவோடு இரவாக கடத்திக் கொண்டு போய்விடுவார்கள். குப்பைகளோடு குப்பைகளாக மக்கள் இருக்கும் போது அது அவர்களுக்கு விளங்குவதில்லை. வடிகால்கள் கட்டினால் அதைச் சரியாக பராமரிக்க மாட்டார்கள். மழைகாலங்களில் வெள்ளம் போக முடியால் வீடுகளுக்குள் புகந்தவுடன் அரசாங்கத்தை திட்டுவார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எப்படி இருப்பார்கள். மக்கள் எவ்வழியோ அவர்களின் பிரதிநிதிகளும் அவ்வழிதான்.
இந்த மக்களை திருத்த கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்தான் டெங்குவை பரப்பும் நுளம்புகள். இவர்கள் கடவுளின் அவதாரங்கள்;. நாட்டில் பலபேரை தயவு தாட்சயணம் பார்க்காமல் போட்டுத்தள்ள அரசுக்கு விழிப்பு வந்தது சோம்பேறித்தனமான இருந்த அரச ஊழியர்களை தட்டியெழுப்பி டெங்குவை தடுக்க முயற்சி செய்யுமாறு உத்தரவிட்டது. குப்பையாக இருக்காதீர்கள் சுத்தமாக இருங்கள் இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை டெங்கால் டொங்காகி விடும் என பிரச்சாரம் செய்தது. தற்போது பல ஊர்கள் சுத்தமாக இருக்கின்றன.
இது எவ்வளவு நாளைக்கு?. டெங்கு காய்ச்சல் நின்று விட்டால் திரும்பி வேதாளம் முரஙகை மரத்தில்தான். நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வந்த பழக்க வழக்கங்களை ஒரேயடியாக மாற்ற முடியாததுதான். இருப்பினும் சிறிதளவு மாற்றம் வந்தது சந்தோஷம்தான். பல ஊர்கள் தற்போது பளிச்சென்று இருக்கின்றன. பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
அவ்வப்போது டெங்கு வந்து மிரட்டிக்கொண்டே இருக்க வேண்டும். சொல்லித் திருந்தாத மக்களுக்கு மரணபயத்தைக் காட்டினால்தான் ஒழுங்காக இருப்பார்கள். புலிகளும் ஒருவகையில் டெங்குபோல்தான் இருந்தார்கள். அதனால்தான் அவர்களால் மக்களை மேய்க்க முடிந்தது. மக்களும் பயந்து ஒழுங்காக இருந்தார்கள். அது என்னவோ தெரியவில்லை. எமது மக்களைத் திருத்த சர்வதிகாரம்தான் தேவைப்படுகிறது. ஜனநாயகம் எங்கு மதிக்கப்படவில்லையோ அங்கு சர்வதிகாரம் டெங்குபோல உருவெடுக்கிறது. இது இருபத்தோரம் நூற்றாண்டில் ரீவடையின் மிகச் சிறந்த தத்துவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக