மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு பக்கத்து ஊரில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயர் கொண்ட எம்.ஜி.ஆர் அடிப்படையில் ஒரு மலையாளி. இவரது தந்தை மருதூர் கோபால மேனனுக்கு சொந்தர ஊர் பாலக்காடு மாவட்டம் நெல்லப்பிள்ளி கிராமம் ஆகும். பின்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தார். அங்கு கண்டி மாவட்ட மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். அங்குதான் எம்.ஜி.ஆர். பிறந்தார்.
பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் குடும்பத்தோடு கேரளாவுக்குத் திரும்பினார். சொந்த ஊரான நெல்லப்பிள்ளியில் குடியேறாமல் அருகில் உள்ள வடவன்னூர் கிராமத்தில்உள்ள தனது மூதாதையர் இல்லத்தில் குடியேறினார்.
கோபால மேனனின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி சத்யபாமா தனது இரு மகன்களான எம்.ஜி. சக்கரபாணி மற்றும் எம்.ஜி.ஆரோடு கும்பகோணத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு இடம் பெயர்ந்தார்.
தற்போது வடவன்னூரில் கோபால மேனனின் மூதாதையர் வீட்டுக்கு அருகில் எம்.ஜி.ஆருக்குக் கிராமப் பஞ்சாயத்து சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை மத்திய அமைச்சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நாளை திறந்து வைக்கிறார்.
இந்த நினைவிடத்தில், ஒரு சமுதாயக் கூடமும் அடங்கியிருக்கிறது.
எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோது வடவன்னூர் கிராமத்திற்கு பலமுறை வந்து சென்றுள்ளாராம். தமிழக முதல்வரான பிறகும் கூட பலமுறை அவர் வந்து போயுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
நினைவிடம் குறித்து வடவன்னூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஸ்ரீஜா கூறுகையில், ஒரு மாநாட்டுக் கூடம் மற்றும் கல்யாண மண்டபத்துடன் கூடியதாக அமைத்துள்ளோம். ரூ. 52 லட்சம் செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்யாண மண்டபத்தில் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் கல்யாணம் நடத்த வாடகைக்கு விடப்படும். ஏழை மக்களுக்கு எம்.ஜி.ஆர். பெருமளவில் உதவியுள்ளார் என்பதால் இந்தத் திட்டம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக