ஞாயிறு, 11 ஜூலை, 2010

ஒக்டோபஸ்ஸின் ஆருடம் பலிக்குமா? ஸ்பெயின் அணிக்கே உலகக் கிண்ணம்:



உலகக் கிண்ண கால்பந்தாட்டத் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய இறுதிப்போட்டியுடன் நிறைவுபெறுகின்றன. இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு இறுதிப் போட்டி ஆரம்பமாகின்றது.
சாதாரணமாகத் தொலைக்காட்சி பார்க்காதவர்களைக் கூட தங்களது வேலைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஒரு மாதகாலமாகத் தொலைக் காட்சிப் பெட்டியின் முன்பாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்.
நரம்புகளை முறுக்கேற்றி கோல்போட்டுத் திரும்பும் வீரனுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பில் பார்வையாளனைத் தள்ளுபவை உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள். இன்றிரவும் அவ்வாறானதொரு உணர்ச்சிகரமான போட்டியை கால்பந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். காரணம், 2008 ஆம் ஆண்டின் ஐரோப்பிய கிண்ணத்தை வென்றதையடுத்து கால்பந்தாட்டத்தில் உலகில் முதல் நிலையிலுள்ள ஸ்பெயின் அணி இம்முறை மிகவும் ஸ்திரமான போட்டியாளர்களாகக் கருதப்படும் நெதர்லாந்து அணியுடன் இன்று மோதுகின்றது.
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது முதற்கொண்டே இந்த அணிதான் கிண்ணத்தை வெல்லும், இன்ன இன்ன அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் எனப் பல ஆரூடங்கள், ஊகங்கள். போட்டிகளின் ஆரம்பம் முதலே இறுதிப்போட்டி பிரேசில் அணிக்கும் ஆர்ஜென்டீன அணிக்கும் இடையில்தான் இடம்பெறும் என்று ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆரூடங்கள் மட்டுமல்ல கால்பந்தாட்ட நிபுணர்களும் அவ்வாறே கருதினார்கள். ஆனால் இக்கணிப்புகள் ஆரூடங்களையெல்லாம் இம்முறை உலகக் கிண்ணக் காலிறுதிப் போட்டிகள் பொய்யாக்கி விட்டன. புகழ்பெற்ற தென்னமெரிக்க அணிகள் காலிறுதிப்போட்டியிலேயே தோற்றுப்போய்விட்டன.
இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை ஸ்பெயின் வெற்றி கொள்ளுமென ஒக்டோபஸ் என்னும் நீர்வாழ் உயிரினம் ஆரூடம் கூறியிருக்கின்றது. ஜெர்மனியின் நூதனசாலையொன்றில் பாதுகாக்கப்படும் எட்டுக் கால்களையுடைய இந்த நீர்வாழ் உயிரினத்தின் எதிர்வுகூறல்கள் உலக கால்பந்தாட்ட ரசிகர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் போல் என்ற இந்த ஒக்டோபஸ்ஸின் எதிர்வுகூறல்கள் பொய்த்ததில்லை.
இந்த ஒக்டோபஸ் வாழும் நீர்த்தொட்டிக்குள் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கு பெறும் இரண்டு நாடுகளினதும் கொடிகள் பொறிக்கப்பட்ட இரண்டு உணவுப் பெட்டிகள் போடப்படுகின்றன. எந்த நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட பெட்டிக்குள் உள்ள உணவை ஒக்டோபஸ் முதலில் ருசி பார்க்கின்றதோ அந்த நாடே உலகக் கிண்ணத்தை வெல்லும் என ஒக்டோபஸ் ஆருடம் சொல்வதாகக் கருதப்படுகின்றது.
முன்னதாக ஜெர்மனியுடனான அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினே ஜெயிக்கும் என்று அது எதிர்வுகூறியிருந்தது. அது உண்மையில் நடக்கவே ஜெர்மனி ரசிகர்கள் கொந்தளித்துப்போனார்கள். ஒக்டோபஸ்ஸைக் கொன்று சாப்பிடப்போவதாக அவர்கள் சூளுரைத்திருக்கின்றார்கள்.
இதற்கிடையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சோதிடர் முனியப்பனின் கிளி மணி இன்றைய இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியே வெல்லும் என்று கூறியிருக்கின்றது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளை அது ஏற்கனவே சரியாக எதிர்வுகூறியிருந்ததாம்.
எதிர்வுகூறல்கள், ஆரூடங்கள் எவ்வாறிருப்பினும் இன்றைய போட்டியில் வெற்றிவாய்ப்பு யாருக்கு இருக்கின்றது?
நெதர்லாந்து அணி 32 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றது. அதற்கு முன்னர் 1978 ஆம் ஆண்டில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அது தகுதிபெற்றுது. ஆனால் இறுதிப்போட்டியில் 3 க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வி கண்டது.
இம்முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது தமது கடந்த இரண்டாண்டுகாலக் கடுமையான பயிற்சிக்குக்கிடைத்த வெற்றியென நெதர்லாந்தின் பயிற்சியாளர் மார்விக் கூறியிருக்கின்றார். அணி வீரர்களின் நம்பிக்கையும் திறமையுமே இந்த வெற்றிக்குக் காரணமெனவும் அவர் கூறியிருக்கின்றார்.
நெதர்லாந்து அணி காலிறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியிலும் அது உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தபோதும், இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற உருகுவேயிடம் நெதர்லாந்து கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் கடந்த 76 ஆண்டுகளாகப் பங்கேற்று வரும் ஸ்பெயின் அணி முதல் முறையாக இம்முறைதான் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியை அது 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு அதிகளவில் இருந்தவையாகக் கருதப்பட்ட பிரேசில் மற்றும் ஆர்ஜென்டீன அணிகள் காலிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவி விட ஜெர்மனியே உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் என எண்ணியவர்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்தது ஸ்பெயினுடனான ஜெர்மனியின் தோல்வி.
வலுவான தற்காப்பு ஆட்டம் ஆக்ரோசமான தாக்குதல் ஆட்டம் என்பனவே ஸ்பெயின் அணியின் பலம். இவையிரண்டையும் செயற்படுத்துவதில் ஒரு அடிப்படையான தத்துவத்தைக் கொண்டே ஸ்பெயின் அணி இம்முறை ஆடி வருகின்றது. அவ்வாறே பந்தினை அது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.
ஆனால் மைதானத்தில் இந்த உத்தியைச் செயற்படுத்த வேறு திறன்களும் தேவைப்படுகின்றன. ஸ்பெயினைத் தவிர வேறு எந்தவொரு அணிக்கும் இந்த உத்தி கைவரவில்லையென்பது நிபுணர்களின் கருத்து.
ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயினின் நடுகள ஆட்டக் காரர்களான ஹெர்னான் டெஸ், இனியெஸ்டா, ரொட்ரிகோ ஆகிய மூவரும்தான் எந்த வழியாக எதிரணி பாதுகாப்பு அரணைத் தகர்ப்பது என்பதை முடிவு செய்தார்கள். அதற்கேற்றபடி முன்கள வீரர்களை தொடர்ச்சியாக நகரச் செய்வதும், எதிரணியினர் ஊகிக்க முடியாத அளவுக்கு திடீர் நடத்துவதும் ஸ்பெயினின் உத்தியாக இருந்தது.
ஸ்பெயினின் இந்த பந்து கடத்தும் திறனை ஜெர்மனி வீரர்களே பார்த்து அதிர்ச்சியாகி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டம் முடிந்த பிறகு ஜெர்மன் பயிற்சியாளரும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
வெறுமனே பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், கடத்திக்கொண்டு போய் கோல் போட முடியாமல் போவதும் வெற்றியைத் தராது. ஸ்பெயின் - ஜெர்மனி ஆட்டத்திலும் இதுதான் நடந்தது. ஸ்பெயின் வீரர்கள் பந்தைக் கடத்திச் சென்று எந்த கோலும் அடிக்கவில்லை. எல்லாம் வீணாகத்தான் போனது. இருந்தாலும் பந்தை ஸ்பெயின் வீரர்கள் கட்டுப்பாட்டில் வைத் திருந்ததால், ஜெர்மன் வீரர்கள் வகுத்த உத்திகளைச் செயல்படுத்த முடியாமல் போனது. ஸ்பெயினின் வெற்றி அதில்தான் அடங்கியிருக்கிறது.
இன்றைய ஆட்டத்திலும் அவ்வாறான உத்திகளை ஸ்பெயின் கையாளுமாயின் உலகக் கிண்ணத்¨த் தம்வசமாக்கிக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: