பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சமீபத்தில் தேசிய அளவில் "பாரத் பந்த்' நடத்தின. தமிழகத்தில், அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழக அரசு, பந்த் பிசுபிசுத்தது என்று கூறி உள்ள நிலையில், எதிர்கட்சிகள் இந்த பந்த் முழு வெற்றியை தந்துள்ளது என்று கருதுகின்றன.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆளும் தி.மு.க.,விற்கு நிச்சயம் சங்கடத்தை கொடுக்கும். எனவே, இந்த நேரத்தில் பந்த் நடத்தி, எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படுத்தினால் மக்களிடையே தனது கட்சிக்கு செல்வாக்கு கூடும்; ஒரு வலுவான எதிர்கட்சி கூட்டணியை ஏற்படுத்தி விடலாம் என்று கணக்கு போட்டே அ.தி.மு.க., இந்த பந்த்தில் கலந்து கொண்டது. மேலும், மற்ற கட்சிகளும் இந்த பந்த்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க., அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தே.மு.தி.க.,- பா.ம.க., ஆகிய கட்சிகள் இந்த பந்த்தில் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம், ஒரு வலுவான கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என்று பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்த அ.தி.மு.க.,விற்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளிடையே இன்னும் ஒற்றுமை ஏற்படவில்லை என்பதையே இந்த பந்த் சுட்டிக் காட்டுகிறது. இந்நிலையில், தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் பந்தில் கலந்து கொள்ளாததன் காரணமாக, இவை எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எந்த மாதிரியான ஒரு முடிவை எடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பா.ம.க.,வை பொருத்தவரையில், தி.மு.க.,வுடன் இணைந்து வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க நினைக்கிறது. "உடனடி லாபம்' என்ற தனது கொள்கைப்படி பார்த்தால், பந்தில் பங்கேற்பதில் உடனடி பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என பா.ம.க., கருதியது; இதனால், பங்கேற்காமல் ஒதுங்கியது.
தே.மு.தி.க.,வை பொருத்த வரையில், வரும் தேர்தலில் எத்தனை இடங்களை அ.தி.மு.க., அளிக்கும் என்பதில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தால், சலன நிலையில் காணப்படுகிறது. காங்கிரசோடு கை கோர்க்கலாம் என்ற கனவும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் பந்தில் பங்கேற்பதால், எதிர்கால கணக்குகள் மாறிவிடும் என்ற நோக்கில் தே.மு.தி.க.,வும் மவுனம் சாதித்துள்ளது. இந்த இரு கட்சிகளும் ஆதரவு தராததாலோ என்னவோ, பந்த் தினத்தன்று அ.தி.மு.க., அடக்கி வாசித்தது. தமிழகத்தில் பந்த் தினத்தன்று, பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே போராட்ட களத்தில் குதித்தன.
இக்கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்து கைதாயினர். ஆனால், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகள் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததே தவிர, முழுமையாக களத்தில் இறங்க முன்வரவில்லை. பந்த் போராட்டத்திற்கு, அகில இந்திய அளவில் பா.ஜ., முன்னிலை வகிக்கும் போது, தமிழகத்தில் அக்கட்சியுடன் இணைந்து அ.தி.மு.க., போராட்டத்தை நடத்தினால், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்து விட்டது என்ற விமர்சனத்துக்கு வழிவகுக்கும் என்று அ.தி.மு.க., கருதியது.
அ.தி.மு.க.,வை பொருத்தவரையில், கூட்டணிக் கதவை திறந்து வைத்திருக்கிறது. காங்கிரஸ், தே.மு.தி.க., போன்ற கட்சிகளுடன் கைகோர்க்கவும், அ.தி.மு.க., தயாராகவுள்ளது. எனவே, பா.ஜ.,வுடன் இணைந்து, போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை. அ.தி. மு.க.,வின் இரண்டாம் கட்டத்தலைவர்களும் மறியல் போராட்டங்களில் பங்கேற்க முன்வரவில்லை. அ.தி.மு.க., - ம.தி.மு.க., வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க ஆளுங்கட்சி திட்டமிட்டிருந்தது. இதை உணர்ந்ததால், அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் இறங்கவில்லை என்ற காரணமும் கூறப்படுகிறது. மொத்தத்தில், பந்த்தில் பங்கேற்ற, பங்கேற்காத அரசியல் கட்சிகள், பொதுமக்களின் பாதிப்பை பற்றி கவலைப்பட்டதோ, இல்லையோ, தங்களது எதிர்காலத்தை பற்றி ரொம்பவும் கவலைப்பட்டது "பந்த்' தினத்தன்று வெளிப்படையாக தெரிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக