ilakkiyainfo.com : “தர்ம நீதிமன்றம்” மற்றும் சட்டத்தின் சமத்துவம்
ஜனாதிபதி அரசாங்கத்தின் புதிய கொள்கை முயற்சி சமூகத்தில் எழுப்பும் கேள்விகள்
-சட்டத்தின் முன் அனைவரும் சமமா?
“ஒரே சட்டம், ஒரே நாடு என்றால், ஏன் ஒரு மதத்திற்காக தனி நீதிமன்றம்?”
-அரசியல் அழுத்தமா? மத அழுத்தமா?
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தி, பௌத்த தேரர்களின் ஒழுக்காற்று பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட “தர்ம நீதிமன்றம்” ஒன்றை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்திருப்பது, நாட்டின் அரசியல், சட்ட மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே, குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும் எதிர்ப்புகளும் எழத் தொடங்கியுள்ளன. காரணம், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து “ஒரே நாடு”, “சம உரிமை”, “இனவாத அரசியலுக்கு முடிவு”, “அனைவருக்கும் சமமான சட்டம்” போன்ற கருத்துக்களை வலியுறுத்தி வந்தது.
ஆனால் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மதகுருமார்களுக்காக தனியான நீதிமுறை அமைப்பை உருவாக்குவது, அரசாங்கத்தின் முன்னைய அரசியல் நிலைப்பாடுகளுடன் முரண்படுவதாக பலரும் கருதுகின்றனர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமா?
ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை கொள்கை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுதான். சாதாரண குடிமகன் முதல் உயர்ந்த பதவியில் இருப்பவர் வரை ஒரே சட்ட அமைப்பிற்குள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே நவீன ஜனநாயக அரசின் அடிப்படை தத்துவமாகும்.
இந்நிலையில், பௌத்த தேரர்களின் ஒழுக்காற்று விவகாரங்களை விசாரிக்க தனியான “தர்ம நீதிமன்றம்” அமைக்கப்படுவது, எதிர்காலத்தில் “இரண்டு விதமான நீதிமுறைகள்” உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் சமூகத்தில் பரவியுள்ளது.
ஒரு சாதாரண குடிமகன் மீது குற்றச்சாட்டு வந்தால் அவர் பொது நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார். ஆனால் மதகுருமார்களுக்கு தனி அமைப்பு வழங்கப்படுவது, அவர்களுக்கு விசேட சட்டப் பாதுகாப்பு அளிப்பதாக பார்க்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் மக்களின் அச்சம்.
கடந்த சில ஆண்டுகளாக மதகுருமார்களைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், நிதி மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இதுவரை வெளிச்சத்துக்கு வந்துள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கலாம் என்பதுதான். சில வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சில வழக்குகள் அரசியல் மற்றும் மத அழுத்தங்களால் முழுமையாக விசாரிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், மதகுருமார்களுக்காக தனி நீதிமன்றம் அமைப்பது, உண்மையான நீதி கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை மேலும் பலவீனப்படுத்தும் அபாயம் இருப்பதாக சமூகத்தில் பேசப்படுகிறது.
மட்டக்களப்பில் பேசப்பட்ட ஒற்றுமை ,பின்னர் வந்த முரண்பாடு.
கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை குறித்து உரையாற்றியிருந்தார். அரச அலுவலகங்களில் மூன்று மொழிகளும் நடைமுறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதற்கு சில நாட்களிலேயே, புத்தமத குருமார்களுக்கான தனி சட்ட மற்றும் ஒழுக்காற்று அமைப்பை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது, அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்கள் குறித்து சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களில் பலர் கேட்கும் கேள்வி மிகவும் எளிமையானது:
“ஒரே சட்டம், ஒரே நாடு என்றால், ஏன் ஒரு மதத்திற்காக தனி நீதிமன்றம்?”
இந்த கேள்விக்கான தெளிவான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் மத அரசியலின் செல்வாக்கு
இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கை எதிர்கொண்டுவரும் கடுமையான நிதி, சமூக மற்றும் நிர்வாக சவால்கள் மத்தியில், அரசாங்க நிர்வாகம் மற்றும் மதத் தலைவர்களின் பங்கு குறித்து புதிய விவாதங்கள் சமூகத்தில் உருவாகத் தொடங்கியுள்ளன.
சமீப காலங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்ததன் பின்னணியில், அரசியல் அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளின் உறவு குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
குறிப்பாக, அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் தருணங்களில் மதத் தலைவர்களின் கருத்துகள் மற்றும் செல்வாக்கு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு தரப்புகள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வருகின்றன.
சிலர், மதத் தலைவர்கள் சமூக ஒற்றுமை, நெறிமுறை மற்றும் மனிதாபிமான மதிப்புகளை வலியுறுத்தும் வகையில் சமூகத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பு, அரசியல் மற்றும் நிர்வாக முடிவுகள் முழுமையாக அரசியலமைப்பு, சட்டம் மற்றும் தொழில்முறை திறன்களின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது.
அரசாங்க நிர்வாகத்தில் மதத் தலைவர்களின் தலையீடு அவசியமா?
பல அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்து என்னவென்றால், நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார வீழ்ச்சி, கடன் சுமை, வேலைவாய்ப்பு நெருக்கடி, முதலீட்டு பற்றாக்குறை, இளைஞர் இடம்பெயர்வு, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் போன்ற பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முழுமையாக தொழில்முறை நிர்வாகத்தையும் அறிவியல் அடிப்படையிலான கொள்கைகளையும் முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதாகும்.
இதன் காரணமாக, அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகள் மத சார்பற்ற மற்றும் திறன் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மதத் தலைவர்கள் அரசியல் மற்றும் அரசாங்க தீர்மானங்களில் நேரடியாக தலையீடு செய்வது குறித்த கேள்வி மீண்டும் அதிகமாக பேசப்படுகிறது. மேலும், அரசாங்க நிகழ்வுகள், பதவியேற்பு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சிகளில் எந்த மதத் தலைவர்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அல்லது நிகழ்வின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டாம் என்ற கருத்தும் சில தரப்புகளில் வலுப்பெற்று வருகிறது.Politics
அரசாங்கம் அனைத்து மதங்களிடமும் சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனில், அதன் நிகழ்வுகள் முழுமையாக அரசியல் மற்றும் அரசியலமைப்பு அடிப்படையிலான குடிமை நிகழ்வுகளாக இருக்க வேண்டும் என்பதே இந்தக் கருத்தின் மையமாகும்.
மதம் மற்றும் அரசியல் – தெளிவான எல்லை தேவை
பலர் வலியுறுத்துவது என்னவென்றால், எந்த ம தினராயினும் — பௌத்த, இந்து, முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதகுருமார்களாயினும் — அவர்கள் தங்களது மத, ஆன்மிக மற்றும் சமூக சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும்; அரசியல் நிர்வாகம் மற்றும் அரசாங்க கொள்கை முடிவுகள் முழுமையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்புகள் மற்றும் சட்டமன்றங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதே.
குறிப்பாக இலங்கை போன்ற பல இன, பல மத நாடுகளில், ஒரு குறிப்பிட்ட மத அமைப்பு அரசாங்க முடிவுகளில் அதிக செல்வாக்கு செலுத்தும் நிலை உருவானால், அது மற்ற சமூகங்களிடையே அச்சத்தையும் சமத்துவமின்மையையும் உருவாக்கும் அபாயம் உள்ளது.
சில சமூக செயற்பாட்டாளர்கள் முன்வைக்கும் யோசனை என்னவென்றால், புதிய சட்டங்களை கொண்டு வராமல் கூட, அரசாங்கம் தனது அனைத்து துறைகளுக்கும் தெளிவான நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கி, மதத் தலைவர்கள் அரசியல் மற்றும் நிர்வாக தீர்மானங்களில் நேரடி தலையீடு செய்யாத வகையில் ஒரு நடைமுறை ஒழுங்கை உருவாக்க முடியும் என்பதாகும்.
அதாவது, கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் போன்ற மத நிறுவனங்கள் தங்களது ஆன்மிக, கலாசார மற்றும் மத பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்; அதேவேளை அரசாங்க நிர்வாகம் பொருளாதாரம், சட்டம், கல்வி, சுகாதாரம், முதலீடு மற்றும் தேசிய அபிவிருத்தி போன்ற துறைகளில் தொழில்முறை மற்றும் ஜனநாயக அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதே இந்த விவாதத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
அரசியல் அழுத்தமா? மத அழுத்தமா?
இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது, பல அரசாங்கங்கள் புத்தமத அமைப்புகளின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. தேர்தல் அரசியலில் சிங்கள பௌத்த வாக்கு வங்கியின் தாக்கம் மிகப் பெரியதாக இருப்பதால், எந்த அரசாங்கமும் புத்தமத அமைப்புகளுடன் நேரடி மோதலை விரும்புவதில்லை.
அதேநேரத்தில், தற்போதைய அரசாங்கம் தன்னை ஒரு முன்னேற்றவாத மற்றும் இனவாத எதிர்ப்பு அரசியல் சக்தியாக மக்களிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. எனவே இத்தகைய நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.Beaches & Islands
எதிர்கால விளைவுகள்
இந்த முயற்சி வெறும் மத ஒழுக்காற்று பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படவில்லை. இது எதிர்காலத்தில் சட்ட சமத்துவம், மனித உரிமைகள், சிறுபான்மை மக்களின் நம்பிக்கை, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் மத அடிப்படையிலான அரசியல் ஆகியவற்றை பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய முன்னுதாரணமாக மாறலாம்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் “நாட்டில் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கிறதா?” என்ற கேள்வி மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.
ஒரு பக்கம் அரசாங்கம் ஊழலை எதிர்க்கிறோம், நீதியை நிலைநாட்டுகிறோம் என்று கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மறுபக்கம் குறிப்பிட்ட குழுக்களுக்கு தனியான சட்ட அமைப்புகளை உருவாக்குவது, அந்த நம்பிக்கையை பாதிக்கக்கூடும்.
ஒரு மத அமைப்பின் உள்ஒழுக்கத்தை பராமரிப்பது அவசியமானதே. ஆனால் அது நாட்டின் பொது நீதித்துறை அமைப்பையும் சட்டத்தின் சமத்துவக் கொள்கையையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை குறித்து தொடர்ந்து பேசும் அரசாங்கம், நடைமுறையிலும் அதே சமத்துவ அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே தற்போது சமூகத்தில் அதிகமாக எழும் கோரிக்கையாக உள்ளது.
இல்லையெனில், “அனைவருக்கும் ஒரே சட்டம்” என்ற ஜனநாயக நம்பிக்கை மெதுவாக பலவீனமடைந்து, அது எதிர்காலத்தில் நாட்டின் சமூக ஒற்றுமைக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ராஜ் சிவநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக