minnambalam.com - Mathi : முதல்வர் விஜய் அறிவித்த பயிர் கடன் தள்ளுபடியால் பெரும் ஏமாற்றம்- விவசாயிகள் போராட்டம்- தலைமை செயலகம் முற்றுகை- சிபிஐ, சிபிஎம் கண்டனம்!
முதல்வர் விஜய் (Vijay) வெளியிட்ட பயிர் கடன் தள்ளுபடி (Farm Loan) குறித்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
முதல்வர் விஜய் நேற்று விவசாயிகளின் பயிர் கடன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
ரூ.50,000 வரை கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 40,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.
இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.
ரூ.60,001 முதல் 70,000 ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகளுக்கு 15,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.
70,001 முதல் 80,000 ரூபாய் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.
இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் கொந்தளிப்பு
முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்து முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும்; இந்த அறிவிப்பால் எந்த பயனும் இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன. சென்னையில் தலைமை செயலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட முயன்றனர்.
முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிபிஐ செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ கண்டனம் (CPI)
விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம் வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என நேற்று (25.05.2026) அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
“5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்” என வழங்கியுள்ள உறுதி மொழிக்கும் மாறானது.
இதுவரை விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதாகவே வழங்கப்பட்டது. இந்த வழிமுறையை மாற்றி “பண மதிப்பை” அடிப்படையாகக் கொண்டு வகுத்துள்ள புதிய முறையும் ஏற்கதக்கதல்ல.
ஏனெனில், மாவட்டத்திற்கு மாவட்டம், பயிருக்கு பயிர் சாகுபடிச் செலவுகள் மாறுபடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
சிபிஎம் எதிர்ப்பு (CPM)
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “ விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்று (25.05.2026) வெளியிட்டுள்ளார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமான இத்தகைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000/- சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000/- வரை தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு பெற்ற கடன் தொகையில் சிறு தொகை மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் இந்த அறிவிப்பு இல்லை என்பதை விவசாயிகள் சார்பாக சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகித கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக