அரசியல் பேசலாம் ·ஒரு சிம்மாசனம்... இரண்டு ராஜாக்கள்: அனுர - டில்வின் எபிசோட்!
இலங்கை அரசியல் என்பது எப்போதுமே முடிவில்லாத ஒரு 'மெகா சீரியல்' தான். இதில் "கட்சி அதிகாரம் vs அரசாங்க அதிகாரம்" என்ற பழைய சீசன் இப்போது மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இம்முறை கதைக்களத்தில் இருப்பவர்கள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா!
ஜே.ஆர். போட்ட 'மாஸ்டர் பிளான்'
"முடிவு எடுத்தாச்சு. ஒத்துவந்தா இருங்க, இல்லனா கதவு திறந்தே இருக்கு, தாராளமா வெளியேறலாம்!" - இதை ஏதோ கோபத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தன சொல்லவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போது நாடாளுமன்றக் குழுவை கூட்டி மிக 'கூல்' ஆகச் சொன்னார். இதைக் கேட்டதும் எம்.பிக்கள் எல்லாம் காற்றிறங்கிய பலூன்கள் போல கப்சிப் என உட்கார்ந்திருந்தார்கள்.
இந்த தில் ஜே.ஆருக்கு எங்கிருந்து வந்தது? அவர் நாட்டின் அரசியலமைப்பை மட்டும் மாற்றி நிறைவேற்று ஜனாதிபதி ஆகவில்லை; கூடவே UNP கட்சியின் யாப்பையும் மாற்றி, "யார் ஜனாதிபதியோ அவரே கட்சித் தலைவர்" என்ற ரூலையும் கொண்டு வந்தார். காரணம், கட்சியின் 'ரிமோட் கண்ட்ரோல்' தன்னிடம் இல்லாமல் நாட்டை ஓட்ட முடியாது என்பது அந்த அரசியல் நரிக்குத் தெரியும்!
மைத்திரி அடித்த 'ஜோக்'
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட இதை நன்றாகவே உணர்ந்திருந்தார். ஜனாதிபதியான புதுசில் அவர், "நான் UNP-ல சேர்ந்தா, ஆட்டோமேட்டிக்கா நான்தான் கட்சித் தலைவர் ஆகிடுவேன்!" எனச் சிரித்துக்கொண்டே சொன்னார். அது வெறும் ஜோக் அல்ல, இலங்கையின் நிதர்சனமான அரசியல் உண்மை.
சந்திரிகாவும் மகிந்தவும் பட்ட பாடு
சந்திரிகா ஜனாதிபதியானாலும், ஆரம்பத்தில் கட்சித் தலைமை அவரது தாயார் சிறிமாவோவிடமே இருந்தது. அவர் உடல்நலம் குன்றிய பிறகு 2000-ல் தான் சந்திரிகாவுக்கு உத்தியோகபூர்வமாக கட்சியின் அதிகாரம் கிடைத்தது.
2005-ல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான போதும் இதே கதைதான். முதல் நாளிலிருந்தே கட்சியைப் பிடிக்கப் போராடி, சந்திரிகாவை ஓரம் கட்டி, கடுமையான குடைச்சல்கள் கொடுத்து கடைசியில் அவரை லண்டனுக்கே 'பேக்' செய்த பிறகுதான் மகிந்தவுக்கு கட்சி வசமானது.
எருமையும் காளையும் இழுத்த வண்டி!
2015 'நல்லாட்சி' காலத்தில், ஜனாதிபதி அதிகாரம் மைத்திரியிடமும், கட்சியின் கட்டுப்பாடும் அரசாங்கத்தின் ஆளுமையும் ரணிலிடமும் இருந்தது. மைத்திரியால் அமைச்சர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை; ரணிலிடம் நிறைவேற்று அதிகாரம் இல்லை. ஒருவரை ஒருவர் உள்ளடி வேலை செய்து, இறுதியில் அது ஓபன் ஃபைட்டாக மாறியது. இதைப்பார்த்து மகிந்த ராஜபக்ச, "ஒரு எருமையும் காளையும் எதிர் எதிர் திசையில் இழுக்கும் வண்டி மாதிரி இருக்கு" என்று கலாய்த்தார்.
கோட்டாபயவுக்கு வைத்த 'செக்'
காலத்தின் கோலம், மற்றவர்களைக் கலாய்த்த மகிந்தவுக்கே அதே நிலைமை திரும்ப வந்தது. 2019-ல் கோட்டாபய ஜனாதிபதியானார். ஆனால் மொட்டுக் கட்சியின் (SLPP) முழு அதிகாரமும் மகிந்த மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் கையிலேயே இருந்தது. கோட்டாபயவுக்கு அமைச்சரவையை அமைப்பதில் கூட முழுச் சுதந்திரம் இல்லை. பி.பி. ஜயசுந்தர, காமினி சேனரத் போன்றவர்களை நியமித்தது கூட மகிந்த - பசில் தரப்பின் அழுத்தத்தால்தான் எனப் பேசப்பட்டது.
விளைவு? பொருளாதார நெருக்கடி வெடித்ததும், அரசாங்கம் அட்ரஸ் இல்லாமல் முழுமையாகச் சிதறிப் போனது!
இப்போது அனுரவின் முறை?
சரி, பிளாஷ்பேக் போதும், நிகழ்காலத்துக்கு வருவோம். இதே போன்றதொரு அதிகாரப் பனிப்போர் அனுர அரசாங்கத்திலும் மெல்ல மெல்ல உருவாகிறதா என அரசியல் நோக்கர்கள் இப்போது உற்று நோக்குகின்றனர்.
அனுர, நாட்டின் ஜனாதிபதியாகவும் ஜே.வி.பி.யின் தலைவராகவும் இருக்கிறார். நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் அவரே. ஆனால், ஜே.வி.பி.யின் கட்சி கலாச்சாரமே வேறு! அங்கு பாரம்பரியமாக தலைவரை விட கட்சியின் செயலாளருக்குத் தான் (டில்வின் சில்வா) உண்மையான பவர் அதிகம் என்பது எழுதப்படாத விதி. டில்வினின் செல்வாக்கு இன்றும் கட்சிக்குள் அசைக்க முடியாததாகவே பார்க்கப்படுகிறது.
வெடிக்கும் முரண்பாடுகள்:
இதுவரை இருவரும் நேரடியாக மோதிக்கொள்ளவில்லை என்றாலும், சில சம்பவங்கள் 'சம்திங் ராங்' எனச் சொல்லாமல் சொல்கின்றன:
சம்பவம் 1: எதிர்க்கட்சியைச் சேர்ந்த எரான் விக்கிரமரத்னவை, ஜனாதிபதி அனுர திடீரென கிரிக்கெட் வாரியத்தில் நியமித்தார்.
சம்பவம் 2: அமைச்சர் வசந்த சமரசிங்க, "எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தாராளமாக அரசாங்கத்தோடு இணையலாம்" என பகிரங்க அழைப்பு விடுத்தார்.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்: இதற்கு நேர்மாறாக, மே 18, 2026 அன்று ஜே.வி.பி. ஊடகப் பிரிவு ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டது. அதில், "எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைப்பது தேசிய மக்கள் சக்தி அரசின் கொள்கையல்ல. கட்சி தாவினால் எம்.பி பதவியே பறிபோகும் வகையில் சட்டம் வர வேண்டும்" என மிகக் கறாராகக் கூறப்பட்டிருந்தது.
ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள்?
வசந்த சமரசிங்க திறந்த வைத்த கதவை, ஜே.வி.பி. கட்சித் தலைமை 'பொத்தென்று' சாத்தியுள்ளது. இது ஜனாதிபதி அனுரவுக்கும், கட்சி அமைப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டின் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
"ஒரே இராச்சியத்தை இருவர் ஆள முடியாது..." என அன்று மைத்திரி ரணிலைப் பார்த்து முணுமுணுத்ததையும், கோட்டாபய மகிந்தவைப் பார்த்து நினைத்ததையும், இன்று அனுர குமார திசாநாயக்க டில்வின் சில்வாவை நோக்கி அமைதியாகத் தனக்குள் சொல்லிக்கொண்டிருப்பாரோ?
பதில், காலத்தின் கைகளில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக