வெள்ளி, 2 ஜனவரி, 2026

திமுக அரசை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு 'கிளாஸ்' எடுத்த ப.சிதம்பரம்

Chidambaram Praveen

 மின்னம்பலம் -Mathi  : இந்தியாவிலேயே அதிக கடன்களை வாங்கிய மாநிலம் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுதான் என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக கடன் வாங்குகிறது; உத்தரப்பிரதேசத்தைவிட தமிழ்நாடு அதிக கடன் வாங்குகிறது என பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. பிரவீன் சக்கரவர்த்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது

அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா வரை எல்லா வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது

இந்தியாவின் மொத்தக் கடனும் எல்லா மாநிலங்களின் மொத்தக் கடன்களும் ஆண்டுதோறும் கூடுகின்றன. இது இயல்பு

மொத்தக் கடன் என்பது சரியான அளவை அல்ல

மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு (சதவீதம்) என்பதே பொருத்தமான அளவை. தமிழ்நாட்டில் இந்த அளவை 2021-22 முதல் 2025-26 வரை ஸ்திரமாக (ஒரே நிலையில்) இருந்து வருகிறது

நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு 2025-26 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் (Niti Aayog) விதித்த வரம்பான 3% என்ற நிலையைத் தமிழ்நாடு எட்டும் என்று இந்த ஆண்டின் மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. இது பாராட்டக்கூடியது

நிதி மேலாண்மை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையது, ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: