bbc.com -விஜயானந்த் ஆறுமுகம் : 'வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
"அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை" என்கிறார், திருத்தணி காவல்நிலைய ஆய்வாளர் மதியரசன்.
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள், ஆயுதங்களால் தாக்கி ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கைதான சிறுவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது.
ஒரு சிறுவனுக்கு சிறார் நீதிக்குழுமம் பிணை வழங்கியுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே டிசம்பர் 27 ஆம் தேதியன்று இளைஞர் ஒருவர் ரத்த காயத்துடன் விழுந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைக்கு கலரிங் அடித்த சில சிறுவர்கள் தன்னை ஆயுதங்களால் தாக்கியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்கிறது காவல்துறை.
அதேநாளில் ரயிலில் பயணிக்கும் இளைஞர் ஒருவரை அரிவாளால் சில சிறுவர்கள் மிரட்டுவது போன்ற ரீல் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் தென்பட்ட நபரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒடிசா இளைஞரும் ஒன்று எனத் தெரியவந்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் முகவரியில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வந்தனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
மறுநாள் (டிசம்பர் 28) திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் வசிக்கும் ஒரு சிறுவனை கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின்படி மேலும் மூன்று பேரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறை கூறுவது என்ன?
தாக்குதலுக்கு ஆளான சூரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன் நான்கு சிறார்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 30 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "வடஇந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒடிசா இளைஞர் அளித்துள்ள புகாரில், 'எங்களை முறைத்துப் பார்க்கிறாயா?' எனக் கேட்டு அடித்துள்ளதாகக் கூறியுள்ளார்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு பட்டா கத்தியை சிறுவர்கள் வைத்திருந்தனர். சிலருடன் முன்விரோதம் உள்ளதால் வைத்திருந்ததாகக் கூறினர். இவர்கள் மீது சிறிய புகார் தவிர வேறு புகார்கள் எதுவும் வரவில்லை. அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகளும் இரண்டு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனக் கூறினார்.
வழக்கில் பிடிபட்ட நான்கு சிறார்களும் சிறார் நீதிக்குழுமம் முன்பு டிசம்பர் 28 அன்று ஆஜர்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ள காவல்துறை, 'அதில் மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சிறாருக்கு சிறார் நீதிக்குழுமத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளது.
சிறுவர்கள் போதையில் இருந்தார்களா?
இந்தநிலையில், போதை காரணமாக இதுபோன்ற சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 'தாக்குதல் தொடர்பான காணொளி காட்சியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது' எனக் கூறியுள்ளார்.
'கைதான சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தையும் அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்' எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"நான்கு பேரும் போதையில் இருந்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். அவர்களைத் தாமதமாக கைது செய்தோம். அதனால் அவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை" என்கிறார் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன்.
இதே தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "அவர்கள் போதையில் இருந்தார்களா என்பது குறித்து தற்போதைய நிலையில் கூற முடியாது. அது விசாரணையில் உள்ளது" எனக் கூறினார்.
திருத்தணி, ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்
ஒடிசா இளைஞரின் பின்னணி என்ன?
சிறுவர்களால் தாக்கப்பட்ட இளைஞர் குறித்துக் கேட்டபோது, "அவர் எங்கும் வேலை பார்க்கவில்லை. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்" என்கிறார் மதியரசன்.
"இளைஞருக்கு தங்குவதற்கு வீடு என எதுவும் இல்லை. இரவு நேரங்களில் புறநகர் ரயில்கள் கடைசி நிறுத்தத்தில் நிறுத்தப்படும். அதில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ரயில் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்" எனவும் காவல் ஆய்வாளர் மதியரசன் தெரிவித்தார்.
"இந்த வழக்கில் கைதான நான்கு பேரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"கைதான சிறார்கள் யாரும் படிப்பதற்கு செல்லவில்லை. வெறுமனே ஊர் சுற்றி வந்துள்ளனர். பெற்றோரின் கண்காணிப்பு என்பதே இல்லாத நிலையில் வளர்கின்றனர்" என்கிறார் மதியரசன் .
"அடிதடி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தன்னை கதாநாயகனைப் போல பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சிறுவர்கள் இறங்குகின்றனர். இது பெரியவர்களிடம் இருந்து தான் அவர்களுக்கு வருகிறது" என்கிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு.
இதே கருத்தை முன்வைக்கும் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் மலையப்பன், "கதாநாயகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் சில சிறுவர்கள் மனதில் இருக்கும். அதை உள்வாங்கிக் கொண்டு இதுபோன்று ரீல்ஸ் வெளியிடுவதாகவே பார்க்க வேண்டும்" என்கிறார்.
"சினிமாவில் கதாநாயகனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்களோ, அதை அப்படியே பெரும்பாலான சிறுவர்களும் கடைபிடிக்கின்றனர். இதை சமூகத்தின் குறையாகவே பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார், மருத்துவர் மலையப்பன்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'ஒடிசா இளைஞர் எங்கே?'
இதற்கிடையில், இந்த தாக்குதலை கண்டித்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
பிற மாநில நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகள், பணியாற்றும் இடங்களில் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
'தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒடிசா இளைஞர் தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவின.
இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "மருத்துவரிடம் கூறிவிட்டு சொந்த மாநிலம் சென்றுவிட்டார். அதனை கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அரசுத் தரப்பில் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன" எனக் கூறினார்.
'சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் சாந்தாராமனிடம் பிபிசி தமிழ் பேசியது.
" ஒடிசா இளைஞருக்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்" என்கிறார் அவர்.
தொடர்ந்து பேசிய மருத்துவர் சாந்தாராமன், "திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவருடைய காயத்துக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அதைப் பிரிப்பதற்கு கூட முதலில் அவர் எங்களை அனுமதிக்கவில்லை" என்கிறார்.
"ஒருகட்டத்தில், அவரது காயங்களை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு மீண்டும் கட்டு போட்டுவிட்டனர். அவர் பிடிவாதமாக இருந்ததால் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினோம். 'அவரும் சிகிச்சை பெறுவதற்கு விருப்பமில்லை' என எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்" என மருத்துவர் சாந்தாராமன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக