வியாழன், 1 ஜனவரி, 2026

தோழர் ஓவியா : தமிழ்இளைஞர்கள் - வேலைவாய்ப்பு - சிறார்குற்றங்கள் - தமிழ்நாடுஅரசு

தமிழ்ச் சமூகத்தின் அடையாளம் திருவள்ளுவர்!
May be an image of text that says "VASANTH NEWS வழக்கு பதிவு"

 Ovia Rajamoni  : திருத்தணியில் இரயிலில் வடமாநில இளைஞர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட நிகழ்வு குறித்து,
 இன்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். 
மிகக் கொடுமையான நிகழ்வு மனதை அதிரை வைக்கக்கூடிய துன்பம்.  
இதில் தாக்கப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் என்பது,
 ஒரு தனித்த தற்செயல் நிகழ்வு மட்டுமே என்பதனை முதலில் நாம் அழுத்தமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  உண்மையில் நமது இளைஞர்களின் இன்றைய இந்த நிலை நம்மை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிற்து, 

இருந்த போதிலும் இங்கு இளைஞர்கள் மிகக் கடுமையாக ஒரு சீரழிவுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நான் இதற்கு முன்பே கூட சில பதிவுகளில் சுட்டிக்காட்டி இருந்த நினைவு இருக்கிறது.  

 எனவே இந்த பிரச்சனை ஒரு தொடர் போக்கின் குறிப்பிட்ட  உச்சநிலை வெளிப்பாடுதான் என்பதனை நாம் முதலில் உணர வேண்டும்,  



இந்த இளைஞர் கல்வியறிவில்லாதவர், கஞ்சா பழக்கம் உள்ளவர் என்பதாக பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தில் இன்னொரு அனுபவத்தை இங்கு பகிர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய அலுவலகம் (கம்பெனி செகரட்டரி, சென்னை)  கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு பல்வேறு நேர்முகத் தேர்வுகள் நாங்கள் நடத்தி இருக்கிறோம் .  

நிறைய இளைஞர்களை சந்தித்திருக்கிறோம். 
சில தினங்களுக்கு முன்பாக ஒரு இளைஞர் நேர்முகத் தேர்வுக்கு வந்தார், 
பொறியியல் படித்திருப்பதாகக் (engineering)  கூறினார். 
பொறியியல் படித்துவிட்டு எங்களுடைய அலுவலகத்தில் உங்களுக்கு சரியான வேலை இருக்காது. 

இது உங்களுக்கு பொருத்தம் இல்லாத இடம் என்று நாங்கள் சொல்கிறோம். 
அவர் இல்லை எனக்கு பொறியியல் துறையிலே வாய்ப்பில்லை எனக்கு அதில் இனிமேல் ஈடுபாடும் இல்லை நான் துறை மாறிக்கொள்ள விரும்புகிறேன். எனவே இந்த வேலையை கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லுகிறார். 

சரி பார்க்கலாம் உங்களை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று சொல்லி அனுப்பி விடுகிறோம். 
சில தினங்களில் அவரும் அவருடைய தாயாரும் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படியாவது இந்த வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். 

சரி ஒரு வாரம் அவரை அனுப்புங்கள். இந்த வேலைகளை அவர் கற்றுக் கொள்கிறாரா என்று பார்த்து அதற்குப் பிறகு முடிவெடுக்கிறோம் என்று சொல்லி அவர் வருகிறார். 
ஆனால் அவருடைய வேலை திருப்தியாக இல்லை என்று பார்த்தபின் இல்லை இந்த வேலை உங்களுக்கு சரியாக வராது. 

நீங்க வேற வேலை பாருங்கள் என்று சொன்னவுடன் ஓரிரு நிமிடங்களில் அவருடைய ஒட்டுமொத்த தோற்றமும் மாறிவிடுகிறது. 

அவர் மிரட்டலாக நான் யார் தெரியுமா உனக்கு எல்லாம் அவ்வளவு திமிரா என்று மிகத் தவறாக பேசத் தொடங்குகிறார். 
என்னுடன் அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஊழியர்கள் இதை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைகிறார்கள். உண்மையில் அவர்களால் நம்ப முடியவில்லை 
நான் போலீஸ் ஸ்டேஷன்ல எல்லாம் வேலை பார்த்து இருக்கேன் தெரியுமா என்று சொல்கிறார். 
சரி உன் போலீசை கூட்டிட்டு வா, ஆனா நீ இனிமே இங்க இருந்தேன்னா நான் போலீஸை கூப்பிடுவேன் என்று சொன்ன பிறகு அவர் வெளியேறுகிறார்.  
வாசலில் நின்று கத்தியிருக்கிறார் .   

இந்த சம்பவம் பற்றி நான் அதிகம் கவலை கொள்ளவில்லை. 
அதன் பிறகு அதை பற்றி நான் நினைக்கவும் இல்லை. 
ரயிலில் நடந்த இந்த பிரச்சினையை பார்த்த பிறகு எனக்கு அதை ஏனோ மீண்டும் நினைக்கத் தோன்றுகிறது. 

கல்வி அறிவு இல்லாத கஞ்சா சாப்பிடுகிறவர்கள் என்று இல்லை….. 
இங்கு தங்களுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள முடியாத அனைத்து இளைஞர்களும் இதுபோன்ற மனநிலையை நோக்கி ஏதோ ஒரு விகிதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்பதுதான் நமது கவனிக்க வேண்டிய முதல் அம்சமாகும்.  


இதற்கு அடிப்படையான காரணம் அவர்கள் எவ்விதமான திறனும் அற்றவர்களாக வளரத் தொடங்கி இருக்கிறார்கள்.  
இங்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் அடிப்படை வேலைகளை செய்யத் தயாராக இல்லை  
ஏனெனில் அவர்கள் நிறைய படித்து விட்டார்கள்.  
வெளிநாடு போய் நிறைய பொருளீட்டுகிறார்கள் என்றெல்லாம் பேசுவது மிகவும் தவறான கருத்தாகும்.  

பலர் முன்னேறியிருக்கிறார்கள் என்கின்ற ஒரு பகுதி உண்மையானது, இந்த நாட்டு அடித்தட்டு இளைஞர்களிடம் வளர்ந்து கொண்டிருக்கும் அவலத்தை காண இயலாமல் நம் கண்களை மறைத்து விடக் கூடாது.
இன்று இளைஞர்கள் வேலை செய்யத் திறனும் விருப்பமுமின்றி மாறியிருக்கிறார்கள்.  திசை புலப்படாத கால்கள் தவறாகதான் பயணிக்கும்.  தவறான அரசியல், மாபியா கொள்ளைக் கூட்டத் தலைவனையெல்லாம் கதாநாயகர்களாக மாற்றும் தரங்கெட்ட திரைப்படங்கள்,  தறுதலையான மேடைப் பேச்சுகள்  நாம் காணும் இந்த வன்முறைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.   பெற்றோர் தொடங்கி அரசு வரை அனைவரும் பொறுப்பாளிகள்தான்.
முதலில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி வேலை பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொல்லிப் பழகுங்கள்,  

அரசு முக்கியமாகக் கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து அவர்கள் திறனை மேம்படுத்தி ஏற்ற வேலைகளிக்க சிறப்பு முகாம்கள் வாரியங்கள் ஏற்படுத்த வேண்டும்.
தவறு செய்பவர்கள் காலதாமதமின்றி உடனே தண்டிக்கப்பட வேண்டும்.  2025 ன் கடைசிப் பதிவு இப்படி அமைந்து விட்டதில் மனம் கனக்கிறது.  #தமிழ்இளைஞர்கள்  #வேலையாப்பு  #சிறார்குற்றங்கள் #தமிழ்நாடுஅரசு

கருத்துகள் இல்லை: