செவ்வாய், 30 டிசம்பர், 2025

வட இந்திய இளைஞரை வாளால் கொடூரமாக வெட்டிய தமிழக இளைஞர்கள்

 tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: "தமிழ்நாட்டில் இந்த புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
திருத்தணியில் வடமாநில இளைஞரை சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்த அவர் மின்சார ரயிலில் திருத்தணி நோக்கிச் சென்றுள்ளார்.  
அப்போது 17 வயதிற்குட்பட்ட 4 சிறார்கள் சுராஜை கத்தியை காட்டி மிரட்டுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். 
இதை சுராஜ் தடுத்த நிலையில் அந்தச் சிறார்கள் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.



அவர்களிடம் இருந்து தப்பித்த சுராஜ் திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றார். மீண்டும் அவரை விடாமல் துரத்திய சிறார்கள் மறைவான இடத்திற்கு சுராஜை அழைத்து சென்று அரிவாளால் தாக்கியுள்ளனர். இதை 4 பேரில் ஒரு சிறுவன் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 4 பேரும் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் மத்தியில் பரவியுள்ள போதை மற்றும் ஆயுத வெறிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

திருத்தணியில் வடமாநில இளைஞரை சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். "தமிழ்நாட்டில் இந்த புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


மேலும் மற்றொரு பதிவில் கார்த்தி சிதம்பரம், "தமிழக காவல்துறை தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநிலம் தழுவிய அளவில் உடனடியாக முழு வீச்சில் செயல்பட்டு, தீவிர பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் வாரத்திற்கு மூன்று முறை ரிப்போர்ட் செய்ய வைக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

கருத்துகள் இல்லை: