செவ்வாய், 14 அக்டோபர், 2025

தயாராகும் விஜய் : பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! நிதியுதவி.. தத்தெடுப்பு! புனிதராக காட்டிக் கொள்ள....

 tamil.oneindia.com  -Rajkumar R  :  சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இதுவரை சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வாய் திறக்காமல் இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுவெளிகளில் பேச ஆரம்பித்திருக்கின்றனர். 
கரூர் சம்பவத்தை தங்கள் அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தத்தெடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் நிலையில் கடந்த மாதம் முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். திருச்சியில் தொடங்கிய சுற்றுப் பயணம் கரூரோடு நின்று விட்டது.



முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல விஜயின் திருச்சி பிரச்சாரமே மிக தாமதமாகவே ஆரம்பித்தது. காலையில் விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டாலும் நண்பகலில் தான் திருச்சிக்கு வந்தார். இதே நிலைதான் கரூரிலும் ஏற்பட்டது.

பிரச்சாரத்திற்கு மிக தாமதமாக விஜய் வந்த நிலையில் பல மணி நேரம் வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் காத்திருந்த மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டது. உடனடியாக காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதோடு தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
கரூர் விபத்து

கரூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அப்போதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். விஜயும் ஒரே ஒரு வீடியோ வெளியிட்டதோடு சரி. இதனால் பொதுமக்கள் தரப்பில் விஜய் மீது மிக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் விஜய்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்ததோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டனர். இதனால் உற்சாகமடைந்திருக்கிறது விஜய் தரப்பு. சமூக வலைதளங்களில் மோதல் ஏற்படும் வகையில் பதிவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவானதாக சொல்லப்பட்ட ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார்.

அதற்கு பிறகு நீதி வெல்லும் என விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதனை சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் பகிர்ந்தனர். மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக தலைமறைவானதாக சொல்லப்பட்ட புஸ்ஸி ஆனந்த் திடீரென விஜய் நீலாங்கரையில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொதுமக்கள் தரப்பில் தங்கள் மீது இருக்கும் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை தொடங்கி இருக்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை வைத்து வீடியோ போட்டு வந்த சில இன்ஃப்ளுன்சர்கள் மீண்டும் விஜய் தரப்பின் புகழ் பாடத் தொடங்கி இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்

விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை தத்தெடுத்துக் கொள்வார் எனக் கூறியிருந்தார் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் ஒருவர். மேலும், தங்களது பல்கலைக்கழகத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும், கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

மேலும் இதே போல பல நிர்வாகிகளும் தங்களது சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவ தயாராக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே நடிகர் விஜய்யும் நேரடியாக கரூர் செல்ல இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க இருக்கிறார். மேலும் அவர்களின் குடும்பத்தினரை தத்தெடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தங்கள் தரப்பை சரிப்படுத்திக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது தமிழக வெற்றி கழகம்.

கருத்துகள் இல்லை: