tamil.oneindia.com - Halley Karthik :; வாஷிங்டன்: 68 வயது முதியவருக்கு இருக்கும் விந்து அளவில் பாதிகூட இளைஞர்களுக்கு இல்லை என்று அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை செயலர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் தொகை குறைவு, அதற்கான காரணம் விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் குறைவுதான் என்று தொடர்ந்து கென்னடி குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கூறியிருக்கும் இந்த விஷயம் அமெரிக்க மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"நமது கருவுறுதல் விகிதங்கள் மிக வேகமாக குறைந்து வருகின்றன. இன்றைய இளம் பருவத்தினருக்கு, 68 வயதுடைய ஒருவரை விட குறைந்த டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவு உள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது. இது ஒரு அச்சுறுத்தும் பிரச்சனை" என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரது கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், சில ஆய்வறிக்கைகள் ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில், ஆண்களின் ஒட்டுமொத்த விந்தணு எண்ணிக்கை தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது குறைவாக உள்ளது என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், இந்த போக்கிற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று மற்றவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அது முழுமையான கருவுறுதல் நெருக்கடிக்கு வழிவகுக்காது என்பதை பலரும் ஒப்புக்கொள்கின்றனர்.
கிளீவ்லேண்ட் கிளினிக்கின் இனப்பெருக்க சிறுநீராய்வு நிபுணர் டாக்டர் ஸ்காட் லண்டி கூறுகையில், "இது எங்கள் துறையில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம். விந்தணு குறைவதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுக்கும் ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரைக்கும், எண்களில் எந்த மாற்றமும் இல்லை, கவலைப்படத் தேவையில்லை என்று கூறும் மற்றொரு ஆய்வுக் கட்டுரை உள்ளது" என்றார்.
இதேபோன்ற கருத்துக்கள் பல நலவாழ்வுத் தளங்கள், தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள இளம் ஆண்களால் பரப்பப்பட்டுள்ளன. வீரியம் குறைவது குறித்து கவலை கொண்ட இளம் ஆண்கள் தங்கள் விந்தணுக்களை உறைவித்தல், பாலியல் உறவைத் தவிர்த்தல் அல்லது டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சைக்கு உட்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஆய்வின்படி, டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் "செமன் ரிடென்ஷன்" என்பதே மிகவும் பரவலாக பேசப்பட்ட தலைப்பாக இருக்கிறது. "செமன் ரிடென்ஷன்" என்றால் விந்து வெளியேற்றுவதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதாகும். இப்படி கட்டுப்படுத்துவதன் மூலம் கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் அது நிஜமல்ல. இப்படியாக அமெரிக்கா முழுவதும் விந்தணு குறைவு தொடர்பான பேச்சுக்கள்தான் அதிகம் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக