வியாழன், 16 அக்டோபர், 2025

மதுரை மேயர் இந்திராணி கைது? ரூ. 200 கோடி வரி விதிப்பு மோசடி - புதிய மேயர் யார்?

 மின்னம்பலம் -  Mathi : மதுரையை அதிரவைத்த ரூ.200 கோடி வரி விதிப்பு மோசடி விவகாரத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்த இந்திராணி கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 
மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் நாளை தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் ரூ.200 கோடி மோசடி நடந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து இதன் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பை ஏற்படுத்தினர் என்பது அதிமுக கவுன்சிலர் ரவி தொடர்ந்த வழக்கு. உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையர் தொடங்கி வருவாய் உதவியாளர் வரை ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த முறைகேடு விவகாரத்தில் சிக்கியதால் மதுரை மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழு தலைவர்களை ராஜினாமா செய்யவும் திமுக தலைமை உத்தரவிட்டது. மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே ரூ.200 கோடி சொத்து வரி முறைகேட்டுக்கு மேயர் இந்திராணிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தின. இதனால் நேற்று இரவு திடீரென மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் இந்திராணியை போலீசார் கைது செய்யக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே மதுரை மாநகராட்சியின் புதிய மேயரை தேர்வு செய்ய நாளை (அக்டோபர் 17) மாநகராட்சியின் அவசர கூட்டம் கூடுகிறது. மதுரை மேயர் பதவிக்கு 7 பெண் கவுன்சிலர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை: