மின்னம்பலம் -vivekanandhan : மூளையில் ஆபத்தான ரத்தக் கசிவு..அப்பல்லோவில் நடந்த அறுவை சிகிச்சை..குணமாகி வரும் ஜாக்கி வாசுதேவ்
ஜாக்கி வாசுதேவிற்கு மூளையில் மிக ஆபத்தான ரத்தக் கசிவு இருந்து வந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாகவும் ஈஷா மையம் தெரிவித்துள்ளது. ஜாக்கி வாசுதேவ்வின் உடல்நிலை குறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு: ஜாக்கி வாசுதேவ்விற்கு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலி இருந்து வந்தது. வலியின் வீரியம் அதிகமாக இருந்தபோதும் அவர் தனது வழக்கமான பணிகளை தொடர்ந்து கொண்டிருந்ததுடன், மார்ச் 8 ஆம் தேதியன்று மகா சிவராத்திரி நிகழ்ச்சியையும் நடத்தினார். மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றபோது வலி மிகவும் அதிகமானது.
இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் வினித் சூரியின் ஆலோசனைப்படி, அன்று மாலை 4:30 மணியளவில் சத்குருவிற்கு MRI ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது மூளையில் பெரிய அளவில் ரத்தக் கசிவு இருந்தது தெரிய வந்தது. 3 முதல் 4 வாரங்களுக்கு ரத்தக் கசிவு இருந்ததும், கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் மற்றுமொரு புதிய ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
அப்போது அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் ஜாக்கி வாசுதேவ் , ”நான் கடந்த 40 ஆண்டுகளில் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட்டதில்லை” என்று சொல்லி அந்த அறிவுறுத்தலை மறுத்துவிட்டார். பின்னர் வீரியம் மிக்க வலி நிவாரணிகளின் உதவியுடன் அவர் ஏற்கனவே திட்டமிருந்த மார்ச் 15 ஆம் தேதியின் நிகழ்விலும், அடுத்த நாள் மார்ச் 16 ஆம் தேதி இந்தியா டுடேவின் கருத்தரங்கிலும் கலந்து கொண்டார்.
மார்ச் 17, 2024 அன்று அவரது நரம்பு மண்டலத்தின் நிலை மோசமானது. அவரது இடது கால் தனது பலத்தை இழந்ததுடன், தொடர் வாந்தி மற்றும் தலைவலியால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவமனையில் சேர்ந்த சத்குரு, மருத்துவரிடம் ”இப்போது நீங்கள் உங்கள் செயல்முறையை செய்ய வேண்டிய நேரம்” என்று தெரிவித்தார். அதற்குப் பிறகு அவருக்கு CT ஸ்கேன் எடுக்கப்பட்டபோது, மூளையில் வீக்கம் அதிகமாகி, மூளையின் ஒரு பக்கம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாக மாறிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரது தலையில் இருந்த ரத்தக்கசிவை நீக்குவதற்காக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் வினித் சூரி, பிரனவ் குமார், சுதீர் தியாகி மற்றும் எஸ் சாட்டர்ஜி ஆகியோரின் மேலாண்மையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சத்குருவிற்கு வைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டர் நீக்கப்பட்டிருக்கிறது.
ஜாக்கி வாசுதேவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவரது மூளை, உடல், மற்றும் மற்ற முக்கியமான ரத்த அளவுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. எதிர்பார்த்ததை விட வேகமாகவே அவர் குணமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ள மருத்துவர் சூரி, ”நாங்கள் கொடுத்த மருத்துவ சிகிச்சைகளை எல்லாம் தாண்டி சத்குரு தன்னைத்தானே குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
மருத்துவர் சூரி சத்குருவின் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ள விளக்கம்:
தான் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமாகி வருவதை ஜாக்கி வாசுதேவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக