தருமபுரி தொகுதியில் டாக்டர் செந்தில்குமாருக்குப் பதிலாக மணி என்பவருக்கும் சேலத்தில் எஸ்.ஆர். பார்த்திபனுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியில் கௌதம சிகாமணிக்குப் பதிலாக மலையரசனுக்கும் பொள்ளாச்சியில் கு. சண்முகசுந்தரத்திற்குப் பதிலாக ஈஸ்வரசாமிக்கும் தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்குப் பதிலாக முரசொலி என்பவருக்கும் தென்காசி தனித் தொகுதியில் தனுஷ் எம். குமாருக்குப் பதிலாக ராணி ஸ்ரீ குமாருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கப்பட்டிருந்த கோவை தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த முறை பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சி இந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் இணைந்திருக்கிறது. ஆகவே அந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் அருண் நேரு நிறுத்தப்பட்டிருக்கிறார்.

கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்ட தேனி தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். கடந்த முறை ம.தி.மு.கவின் கணேசமூர்த்தி போட்டியிட்ட ஈரோடு தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். கடந்த முறை காங்கிரசின் விஷ்ணு பிரசாத் போட்டியிட்ட ஆரணி தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் தரணிவேந்தன் போட்டியிடுகிறார்.



திமுக வேட்பாளர் பின்னணி

தி.மு.கவின் புதிய முகங்கள் யார், அவர்கள் பின்னணி என்ன?

ஆ. மணி, தருமபுரி தொகுதி: தருமபுரி தொகுதியில் கடந்த முறை பா.ம.கவின் டாக்டர் அன்புமணி ராமதாஸை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் செந்தில்குமார். ட்விட்டரில் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருந்தாலும், இளைஞரணி நியமனம் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாகவே முரண்பட்டதை கட்சித் தலைமை பெரிதாக ரசிக்கவில்லை. அதனால், அவருக்கு இந்த முறை வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்ற நிலைதான் இருந்தது. எதிர்பார்த்தபடியே ஆ. மணி என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆ. மணி பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை கே. ஆரிமுத்து அண்ணாவின் காலத்தில் இருந்து தி.மு.கவில் இருந்தவர். மணி 1987ஆம் ஆண்டு முதல் தி.மு.க உறுப்பினராக இருந்துவருகிறார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றபோது இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.கவின் ஆ. கோவிந்தசாமியிடம் சுமார் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இப்போது அவருக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார் மணி.

ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி: 9 முறை அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. நீண்ட காலமாக அ.தி.மு.க. வசமே இருந்த அந்தத் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட கு. சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை வேட்பாளரை மாற்ற தி.மு.க. தலைமை முடிவுசெய்ததால், அமைச்சர் சக்ரபாணிக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஈஸ்வரசாமிக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஈஸ்வரசாமி திருப்பூர் மாவட்டம் மைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ல் தி.மு.கவைச் சேர்ந்த இவர் மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர்.

முரசொலி, தஞ்சாவூர்: தி.மு.கவில் தஞ்சாவூர் தொகுதி என்றாலே எஸ்.எஸ். பழனிமாணிக்கம்தான். 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றிபெற்று வருபவர் பழனி மாணிக்கம். 2004ல் இருந்து 2012வரை மத்திய நிதித் துறை இணை அமைச்சராகவும் இருந்தார் பழனி மாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க. தலைமை.

46 வயதாகும் முரசொலி தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நீண்ட கால தி.மு.க. உறுப்பினர். 2014 முதல் 20வரை தி.மு.கவின் பொதுக் குழு உறுப்பினராக இருந்தவர். 2022ல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக பதவிவகித்து வருகிறார்.

ராணி ஸ்ரீ குமார், தென்காசி - தனி: தென்காசி தனித் தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற தனுஷ் எம். குமாருக்குப் பதிலாக இந்த முறை ராணி ஸ்ரீ குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்து, தொகுதியைக் கைப்பற்றினார் தனுஷ் குமார். இருந்தபோதும் இந்த முறை வேட்பாளரை மாற்றியிருக்கிறது தி.மு.க. தலைமை. ராணி ஸ்ரீ குமார் ஒரு மருத்துவர். மயக்க மருந்து நிபுணர். சங்கரன் கோவிலில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். 2002ஆம் ஆண்டில் இருந்து தி.மு.கவில் இருந்து வருகிறார்.

கணபதி பி. ராஜ்குமார், கோயம்புத்தூர்: கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. கடுமையாக வேலைபார்த்து வருவதால், தி.மு.கவே போட்டியிட முடிவுசெய்தது.

கணபதி பி. ராஜ்குமார் ஆரம்பத்தில் அ.தி.மு.கவில்தான் இருந்தார். கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக இருந்த செ.ம. வேலுசாமி, ஒரு சர்ச்சையில் சிக்கி பதவி விலகினார். இதையடுத்து 2014ல் கோயம்புத்தூரின் மேயராக கணபதி பி. ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு மிக நெருக்கமாக இருந்தவர். ஆனால், கணபதி பி. ராஜ்குமார் மேயராக இருந்த காலகட்டத்தில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 2016ல் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அ.தி.மு.கவுக்குள் ஓரம்கட்டப்பட்டார் கணபதி பி. ராஜ்குமார்.

இதனால், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் தி.மு.கவில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கோயம்புத்தூரின் மாநகர் மாவட்ட அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அருண் நேரு, பெரம்பலூர்: 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பா.ஜ.கவுக்கு சென்றுவிட்ட நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது தி.மு.கவே போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியின் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் மகன் இவர்.

அருண் நேரு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். கே.என். நேருவின் தொழில்களைக் கவனித்துவந்த இவர், நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. இருந்தாலும், அவ்வப்போது இவருக்கு வாழ்த்துத் தெரிவித்து திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதி ஐ.ஜே.கேவிற்கு அளிக்கப்பட்டதால், அருண் போட்டியிடவில்லை. தந்தை அமைச்சரான பிறகு பின்னணியில் அவருடைய வேலைகளைக் கவனித்துவந்தவருக்கு இப்போது வாய்ப்பளித்திருக்கிறது கட்சித் தலைமை.



திமுக வேட்பாளர் பின்னணி

கே.இ. பிரகாஷ், ஈரோடு: ஈரோடு தொகுதி கடந்த முறை ம.தி.மு.கவுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், தி.மு.க. இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பிரகாஷ், தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்தவர். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பவர். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

பிரகாஷ் 2012லிருந்தே ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டுவந்தவர். கடந்த ஆண்டு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பு பிரகாசுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி தவிர, அன்பில் மகேஷ், எ.வ. வேலு ஆகியோருக்கும் நெருக்கம் என்பதால் இந்தத் தொகுதி பிரகாஷிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எம்.எஸ். தரணிவேந்தன், ஆரணி: ஆரணி தொகுதியில் கடந்த முறை காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் விஷ்ணுபிரசாத். இந்த முறை இந்தத் தொகுதியை தி.மு.கவே எடுத்துக்கொண்டது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தரணிவேந்தனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவர் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

மலையரசன், கள்ளக்குறிச்சி: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இந்த முறை தி.மு.கவின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் தீவிர விசுவாசி என்பதால் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் மலையரசன். அ.தி.மு.கவும் தே.மு.திகவும் கூட்டணி அமைத்தால், கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.கவுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.கவுக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே, இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவே போட்டியிடலாம். நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ரிஷிவந்தியம், சங்கராபுரம் மட்டுமே தி.மு.க. வசம் உள்ளது அதனால் இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிந்த முகங்கள், புதிய வாய்ப்பு

புதிய முகங்கள் போக, ஏற்கனவே அரசியல் களத்தில் நன்கு அறிமுகமான இருவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் புதிதாக போட்டியிடும் வாய்ப்பை அளித்திருக்கிறது அக்கட்சி. அந்த வாய்ப்பைப் பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், செல்வகணபதி ஆகிய இருவருமே அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவிற்கு வந்தவர்கள்.

தங்க தமிழ்ச் செல்வன், தேனி: 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்த ஒரே இடம் தேனி தொகுதிதான். இந்த முறை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறை தி.மு.கவே போட்டியிடுகிறது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பளித்திருக்கிறது தி.மு.க. தலைமை.

திமுக வேட்பாளர் பின்னணி

தங்கதமிழ்ச் செல்வன், 2001, 2011, 2016 என மூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தேர்வுசெய்யப்பட்டனர். 2001ல் கட்சித் தலைவர் ஜெயலலிதா போட்டியிட ஏதுவாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர். இதையடுத்து அவர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரனின் அ.ம.மு.கவில் இணைந்து செயல்பட்டுவந்தார். இதனால், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் அ.ம.மு.கவின் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்குப் பிறகு, டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தி.மு.கவில் இணைந்தார். 2021ல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச் செல்வன், தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் பின்னணி

செல்வகணபதி, சேலம் தொகுதி: செல்வகணபதி அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு வந்தவர். 1995-96ஆம் ஆண்டுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர். 2008ஆம் ஆண்டில் தி.மு.கவுக்கு வந்த இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், சுடுகாட்டுக் கூரை அமைப்பதில் ஊழல் செய்ததாக இவர் மீது இருந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியிழந்தார். பிறகு அந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் இவர் விடுவிக்கப்பட்டார். இப்போது சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக 1999ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் செல்வகணபதி. தற்போது தி.மு.கவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.