Karthikeyan Fastura : நான் ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த பதிவு இது. எங்களிடம் வரும் சில இஸ்லாமிய நண்பர்கள் கூறும் கதைகளை வைத்து இதனை எழுதுகின்றேன்.
இஸ்லாமியர்களில் பலர் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கிறார்கள். அதற்கென்று ஒரு பாரம் இருக்கிறதாம்.
ஆகவே பலர் FD, RD எதுவும் போடுவதில்லை. Debt instruments என சொல்லப்படும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை.
பங்குச் சந்தையில் ஈடுபட்டாலும், வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்வதில்லை.
அவர்களிடம் நெருக்கமாக பழகும் சில இந்துக்கள் கோடிக்கணக்கில் இஸ்லாமியர்களிடம் வட்டி இல்லாத கடன் வாங்கி இவர்கள் வட்டிக்கு விட்டு பெருமளவு சம்பாதிக்கிறார்கள்.
இது என்ன அபத்தம்? என்று தோன்றுகிறது அல்லவா.? அளவுக்கு அதிகமாக மதத்தை பின்பற்றுவதால் வரும் வினை. ஒரு யோகி சாகும் தருவாயில் சீடர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருந்த பூனையை கட்டிப் போடச் சொன்னாராம். அந்த யோகி இறந்தவுடன் அடுத்து குருவாக வந்த தலைமை சீடர், வகுப்பு எடுக்கும் போது தூணில் பூனை இல்லாததை பார்த்து எங்கே பூனை என்று கேட்டாராம். அன்று முதல் வகுப்பில் பூனையை கட்டி போடும் வழக்கம் வந்ததாம்.
இப்படித்தான் சாஸ்திரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பன பலவும் இன்றும் வழக்கத்தில் உள்ளன.
இஸ்லாமிய நண்பர்களே, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் பெயரில் கடன் வாங்கவும் கடன் கொடுக்கவும் நடக்கத்தான் செய்கிறது. ஒரு அரசாங்கம் தனது தேவைகளுக்காக, திட்டங்களுக்காக கடன் வாங்கும். அரசாங்கத்தின் மைய வங்கி ரிசர்வ் பேங்க் இதர தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கு கடன் கொடுக்கவும் செய்யும். அதேபோல அரசாங்கமும் பிற அரசுகளுக்கு கடன் கொடுத்து அதற்கான வட்டியை பெறவும் செய்யும். இந்தியா அதன் அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், பர்மா, சில ஆப்பிரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிற்கும் பல காலங்களில் கடன் கொடுத்திருக்கிறது.
நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் வட்டிப் பணம் யாருக்கும் கொடையாக கொடுக்கப்படுவதில்லை. இன்னொருவருக்கு முதலீடாக கொடுக்கப்பட்டு வட்டி வசூலிக்கவே படுகிறது.
இந்த வகை Debt investments நடக்காமல் போனால் ஒரு நாடு மிகப்பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கும். கரன்சி மதிப்பு குறைந்துவிடும். இஸ்லாமிய நாடுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சில நாடுகள் மதத்திற்காக இதனை மறைமுகமாக பங்கேற்குமே ஒழிய பங்கேற்காமல் இருக்க முடியாது.
இறைத்தூதர் முஹம்மது நபி அன்று கூறியது அதிக வட்டியினால் ஒரு குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கலாம். நேரடியாக வட்டிக்கு கொடுக்காமல் இருங்கள். ஆனால் வறட்டுத்தனமாக வங்கிகளில் செய்யப்படும் முதலீட்டிற்கு எல்லாம் வட்டி வேண்டாம் என்று மறுக்காதீர்கள். வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்காதீர்கள்.
ஏமாளியாக, முட்டாளாக இருப்பதும் பாவம் என்று தான் இஸ்லாம் கூறியுள்ளதாக படித்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக