திங்கள், 18 மார்ச், 2024

ஆந்திரா: ஜெகன்மோகன் மீண்டும் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா?

 மின்னம்பலம் vivekanandhan  :  ஆந்திராவைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.
அங்கு 175 சட்டமன்றத் தொகுதிகளும், 25 லோக்சபா தொகுதிகளும் உள்ளன.
ஆந்திராவில் இரு பெரும் கட்சிகளான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இரண்டுமே இந்தியா மற்றும் என்.டி.ஏ என்று தேசிய அளவிலான எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்து வந்தன.
அதனால் 2024 பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் ஆந்திரா மாநிலத்தின் நிலை என்பது பெரிய அளவில் விவாதப் பொருளாக இல்லாமல் இருந்து வந்தது.
ஆனால் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே ஆந்திர அரசியலை பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. திடீர் திருப்புமுனையாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளன.


சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் – மோடி ஒரே மேடையில்

2018 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தெலுங்கு தேசம். தென் மாநிலங்கள் எதிலும் பாஜகவினால் பெரிதாக வெற்றி பெற முடியாது என்று பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், ஆந்திராவில் ஏற்பட்டுள்ள இந்த திருப்பம் தென் மாநிலங்களின் முடிவுகளில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு – பவன் கல்யாண் – நரேந்திர மோடி மூவரும் ஒரே மேடையில் அமர்ந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தினை நேற்று நடத்தியிருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை தாக்கிய மோடி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரசும், இந்திய தேசிய காங்கிரசும் வேறு வேறு கட்சிகள் அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்று பேசியுள்ளார். சந்திரபாபு நாயுடு பேசும்போது எங்கள் கொடிகள் தான் வேறு வேறாக இருக்கின்றன. ஆனால் எங்கள் நோக்கம் ஒன்றுதான் என்றும் பேசியிருக்கிறார்.
ஜெகன்மோகன் மீண்டும் வெல்ல வாய்ப்பிருக்கிறதா?

இன்னொரு புறத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியோ சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவை தொகுதிகள் அனைத்திற்கும் தனியாக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார். கடந்த 2019 தேர்தலில் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 151 தொகுதிகளிலும், 25 மக்களவை தொகுதிகளில் 22 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாத பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருப்பதால் மக்களின் அதிருப்தி நிச்சயம் இருக்கும் என்பதால் இந்த எண்ணிக்கைகள் பெருமளவில் குறையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் கலவையான முடிவுகளையே சொல்கின்றன.
சறுக்கிய தெலுங்கு தேசம்

ஒரு காலத்தில் மிகப்பெரிய பலத்துடன் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருந்தது. மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. பல சறுக்கல்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், வழக்குகளோடு கைதையும் சந்தித்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கைகோர்ப்பதன் மூலம் தேசிய அரசியலில் பனது பழைய பலத்தினை மீட்க முடியும் என்று நம்புகிறார்.
காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?

இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியிலிருந்து 2011 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரிந்த பிறகு ஆந்திராவில் காங்கிரஸ் மிகவும் பலவீனமடைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒரு தொகுதியைக் கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.
ஜெகனை எதிர்க்க காங்கிரசில் சேர்ந்த ஷர்மிளா

அதேசமயம் இந்த ஆண்டு துவக்கத்தில் மற்றுமொரு திருப்பம் ஆந்திர அரசியலில் நிகழ்ந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜெகன் மோகன் ரெட்டியின் உடன்பிறந்த தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வெளியேறியிருக்கிறார் ஷர்மிளா. அவர் தற்போது ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜெகன் மோகன் ஊழல் வழக்கில் சிறை வைக்கப்பட்டபோது கட்சியை முன்னின்று நடத்தியது ஷர்மிளாதான். 3100 கி.மீ தூரத்திற்கு ஆந்திராவில் நடைபயணமும் மேற்கொண்டு கட்சிக்கு ஆதரவு திரட்டினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெகனின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான பின்புலமாக இருந்தவராக ஷர்மிளா பார்க்கப்படுகிறார்.

ஒரு காலத்தில் 50% வாக்குகளுடன் ஆந்திராவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது வெறும் 1.3% வாக்குகளையே கொண்டிருக்கிறது. ஆபத்தான நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஷர்மிளாவின் வருகை ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருப்பதாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது.
வாக்குகளைப் பிரிப்பாரா ஷர்மிளா?

இன்னொரு பக்கம் ஷர்மிளா காங்கிரசில் இணைந்ததால், ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீதான அதிருப்தி வாக்குகள் தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணிக்கு மட்டும் செல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் பிரியும் என்பதால் இதை மையப்படுத்தி நாம் வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கும் போட்டு வருகிறாராம் ஜெகன்மோகன் ரெட்டி.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் – பாஜக – காங்கிரஸ் என மும்முனைப் போட்டி ஆந்திராவில் உருவெடுத்திருக்கிறது. 2009 இல் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைந்தார். அதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து பல புதிய திருப்பங்களுடன் ஆந்திர அரசியல் தேசிய அரசியலில் ஒரு முக்கியமான விவாதப் புள்ளியாக மாறியிருக்கிறது.

– விவேகானந்தன்

கருத்துகள் இல்லை: