zeenews.india.com - S.Karthikeyan : நடிகர் விஜய் தமிழக அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டார்.
தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கும் அவர், தன்னுடைய சினிமா பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டு அரசியல் களத்தில் பயணிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக கூறியிருக்கும் விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தன்னுடைய ஆதரவு இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பில் இருக்கும் தமிழ்நாடு அரசியல் களம் இன்னும் ஒருபடி அதிகமாக சூடுபிடித்துள்ளது.
கட்சியின் கொடி, கொள்கை, சின்னம் உள்ளிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அடிப்படை மற்றும் ஆரம்ப பூர்வாங்க பணிகள் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொன்றாக நடக்கும் என்றும், நேரடியாக மக்களை சந்தித்து தன்னுடைய முழுநேர அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். தன்னுடைய அரசியல் பயணம் எதை நோக்கி இருக்கும் என்ற கேள்விக்கும், கட்சியினரை அரசியல் மயப்படுத்துவது குறித்தும் தன்னுடைய அறிக்கையில் விஜய் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதில், மக்ககளை பிளவுபடுத்தும் சாதி மத பேதங்களுக்கு எதிராகவும், ஊழல் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவதே என்னுடைய அரசியல் பயணத்தின் இலக்கு என்று கூறியிருக்கிறார். இந்த பயணத்தில் பயணிக்கக்கூடிய தன்னுடைய கட்சியினரை அரசியல் மயபடுத்துவதற்கு குறிப்பிட்ட காலம் தேவை என்பதால், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் வருவதற்கு 2 ஆண்டுகள் இடைவெளி இருப்பதால் இந்த இடைவெளியை தனக்கு சாதமாக்கிக் கொள்ள விஜய் உத்தேசித்துள்ளார். இன்னும் ஒரு படம் பாக்கியிருப்பதால் அந்த பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டு முழுநேர அரசியலில் தன்னுடைய பயணத்தை தொடங்க இருக்கிறார்.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகர் யார்?, அவருக்கு இந்த அரசியல் ஆலோசனைகளை கொடுப்பது யார்? என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலருடன் விஜய் சந்தித்து பேசியிருந்தார். பிரசாந்த் கிஷோர் கூட விஜய்யை சந்தித்தது குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதுகுறித்து விஜய் எங்கும் பேசவும் இல்லை, வெளிகாட்டிக்கொள்ளவும் இல்லை. விஜய் இதனை ரகசியமாகவே வைத்திருக்கிறார். நேற்றுகூட அவர் கட்சி அறிவித்ததை உற்றுநோக்கிய பலரும் அவருக்கு பின்னால் இருக்கும் அந்த அரசியல் புள்ளி யார்? வியூக வகுப்பாளர் யார்? என்பதை தேட தொடங்கினர். ஆனால் இது இன்னும் ரகசியமாகவே இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக