திங்கள், 29 ஜனவரி, 2024

முட்டி மோதும் சீனியர்கள்... தட்டித் தூக்கும் உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் இவர்கள்தான்!

minnambalam.com -  Aara : வருகிற மக்களவைத் தேர்தலில் திமுகவில் இளைஞரணி சார்பில் சீட் பெறப் போகிறவர்கள் யார் என்ற விவாதம் திமுகவுக்குள் சூடாகிக்  கொண்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டு,  “நீங்கள்தான் இளைஞரணிக்கு இப்போதும் செயலாளர். உங்கள் குழந்தைகள்தான் நாங்கள். இந்த குழந்தைகளுக்கு பொறுப்பு கொடுத்து அழகு பாருங்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணியினருக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று வெளிப்படையான வேண்டுகோள் வைத்தார் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி. மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,   “இளைஞர் அணி தான் எனது தாய் வீடு.  திமுக தலைவராக,  தமிழக முதலமைச்சராக நான் வளர்வதற்கு எனக்கு அடித்தளம் இட்டது இளைஞர் அணி தான்.   இளைஞர் அணியில் இருந்து  பல  சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்  வந்துள்ளனர், அதேபோல நீங்களும் வருவீர்கள். உதயநிதி மட்டுமல்ல உங்கள் எல்லாரையும் எனது மகன்களாகவே பார்க்கிறேன்.   உங்கள் உழைப்பினால்  உங்களை தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”   என்று பதில் அளித்து பேசினார்.

6 பேர், மேடை மற்றும் , ’நாடாளுமன்றத் தேர்தல்- 2024 கழக நிர்வாகிகள் சந்திப்பு’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அப்போது, “மாநாடு  முடிந்து விட்டதால் நமது கடமை முடிந்து விடாது.   அடுத்து மக்களவைத் தேர்தல் வருகிறது.  நாம் ஓயாமல் பணியாற்ற வேண்டும். இளைஞர் அணியினருக்கு இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிய வாய்ப்புகளை நானே பெற்றுக் கொடுப்பேன்”  என்று  உத்தரவாதம் அளித்திருந்தார் உதயநிதி.

இந்த கூட்டத்திற்கு பிறகு  இளைஞர் அணி சார்பில் வருகிற மக்களவைத் தேர்தலில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற ஆலோசனையில்  தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார் உதயநிதி.

இதுபற்றி  திமுக இளைஞரணி வட்டாரங்களை விசாரித்தோம். ”நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் உதயநிதிதான் மையமாக இருக்கிறார்.  கட்சியின் சீனியர்களான நேரு, ஆர்.எஸ்.பாரதி, வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த குழுவில் இருந்தாலும் உதயநிதிதான் முக்கியப் பங்கு வகிக்கிறார். சீனியர்களின் ஆலோசனையோடுதான் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் உரையாடுகிறார் என்றாலும், இந்த குழுவில் உதயநிதியின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இந்த நிலையில் வருகிற எம்பி தேர்தலில்  இளைஞரணி சார்பில் குறைந்தபட்சம் 5 பேராவது எம்பி ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் உதயநிதி.  இதுபற்றிய ஆலோசனைகளை தனது அணியின் முக்கியஸ்தர்களிடம் மேற்கொண்டு வருகிறார்.  அந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இவைதான்…

இளைஞரணியில் மாநில துணைச் செயலாளராக இருப்பவர்களில் சீனியரான ஜோயல் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். தூத்துக்குடியை மையமாக வைத்து மாவட்ட அரசியலில் ஈடுபடவே ஜோயல் விரும்பினாலும், அங்கே அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் என இரு மாசெக்கள் + அமைச்சர்கள்  இப்போது கோலோச்சுகிறார்கள். தூத்துக்குடி எம்பியாக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இருக்கிறார். மீண்டும் அவர் அங்கேதான் போட்டியிடுகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலே ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளர், பின் மாநகராட்சி தேர்தலில் தூத்துக்குடி மேயர் பதவி என ஜோயலுக்காக உதயநிதி முயன்றாலும் அப்போதைய  அரசியல் சூழ்நிலைகளால் முடியவில்லை.  எனவே ஜோயலை திருநெல்வேலி எம்பி தொகுதியில் நிறுத்தினால் என்ன என்ற ஆலோசனை தற்போது நடந்து வருகிறது.

இப்போதைய திருநெல்வேலி எம்பி ஞான திரவியம் கிறிஸ்துவ நாடார். அவரது ஐந்தாண்டு கால  ‘செயல்பாடுகளால்’  மீண்டும் வாய்ப்பு இல்லை என்றே  மாவட்ட கட்சியினர் கூறுகிறார்கள். அந்த இடத்தில் கிறிஸ்துவ நாடாரான ஜோயலை நிறுத்தலாமா என்ற ஆலோசனை நடக்கிறது. அதேநேரம் ஜோயலை தன்னுடனே வைத்துக் கொள்ள நினைக்கும் உதயநிதி, அவரை சென்னையில்  ஒரு தொகுதியில் (அனேகமாக வடசென்னை)  நிறுத்தலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்.

Udayanidhi's MP candidates list


உதயநிதியின் அடுத்த இளைஞரணி வேட்பாளராக மாநில துணைச் செயலாளராக இருக்கும்  ஈரோடு பிரகாஷ் சுட்டிக்காட்டப்படுகிறார்.  கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஈரோடு பிரகாஷ்  மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து பின் மாநில துணைச் செயலாளராக ஆனவர். கடந்த உட்கட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டச் செயலாளர் பதவியை இவருக்கு பெற்றுத் தர உதயநிதி முயற்சி எடுத்தார்.

ஆனால்,  அப்போது முத்துசாமி கடுமையாக முயற்சித்து இதை முறியடித்தார். இப்போது ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக கணேசமூர்த்தி எம்பியாக இருக்கிறார். மீண்டும் இந்த தொகுதியை மதிமுக வலியுறுத்திக் கேட்கவில்லை. எனவே, ஈரோடு தொகுதி திமுகவுக்குத்தான். அதிலும் இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷை அங்கே நிறுத்திட  உதயநிதி முனைப்பு காட்டுகிறார். கொங்கு பகுதியில் கவுண்டர் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை திமுகவுக்கு வரவேண்டுமென்றால் பிரகாஷ் போன்றவர்களை முன்னிறுத்த வேண்டுமென உதயநிதி விரும்புகிறார்.

மாசெவும் அமைச்சருமான முத்துசாமியோ ஈரோட்டில்  பிரகாஷ் நிறுத்தப்பட்டு எம்பி ஆகிவிட்டால் அடுத்து மாவட்டச் செயலாளர் ரேஸிலும் முன்னேறுவார் என்பதால் தொகுதியை  மீண்டும் கூட்டணிக்குத் தள்ளுவதில் மும்முரமாக இருக்கிறார். கூட்டணிக் கட்சியான ஈஸ்வரனின் கொமதேகவுக்கு,  ’நீங்கள் ஈரோட்டைக் கேளுங்கள்’ என்று முத்துசாமி முகாமில் இருந்தே தகவல் போயிருப்பதும் உதயநிதியிடம் கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டது.

Udayanidhi's MP candidates list

இளைஞரணியின் மூன்றாவது வேட்பாளர்  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி  பகுதியைச் சேர்ந்த இளையராஜா. இவரை மாநில துணைச் செயலாளராக நியமித்தபோதே திமுகவில் பலருக்கும் புருவம் உயர்ந்தது. எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த இளையராஜா,  பெரிய பொருளாதார பின்புலம் இல்லாதவர். ஆனாலும்  பத்து வருடம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளராக அவர் ஆற்றிய உழைப்புக்குப் பரிசாக மாநில துணைச் செயலாளராக உயர்த்தினார் உதயநிதி. இப்போது நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்கு இளையராஜாவை வேட்பாளராக ஆக்கலாம் என்ற  தீவிர பரிசீலனையில் இருக்கிறார் உதயநிதி.

இந்த மூன்று பேரைத் தவிர இப்போது எம்.பி.யாக இருக்கும் திருவண்ணாமலை அண்ணாதுரை, தென்காசி தனுஷ்குமார் ஆகிய இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாம் என்ற ஆலோசனையும் குறிஞ்சி இல்லத்தில் நடக்கிறது”  என்கிறார்கள் இளைஞரணி வட்டாரத்தில்.

Udayanidhi's MP candidates list
இளைஞரணியின் வேட்பாளர்களாக இவர்களோடு இன்னும் சிலரும் இணையக் கூடும். அதேநேரம் சீனியர்  அமைச்சர்கள் உதயநிதியின் இந்த வேகத்துக்கு பிரேக் போட முடியுமா என்று தங்கள் மூளையை கசக்கி பிழிந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் தற்போதைய கழக நிலவரம்!

வேந்தன்

கருத்துகள் இல்லை: