tamil.oneindia.com - Vigneshkumar : கோவை: கோவையில் MYV3Ads என்ற எம்எல்எம் நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் ஒன்றுகூடியது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்த கோவையையும் அதிர வைக்கும் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதாவது கோவையில் இயங்கி வரும் MYV3Ads என்ற ஆன்லைன் நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை விற்று வருகிறது.
Case against MyV3ads owner and its investors for gathering without permission
இதற்காக அவர்கள் தனியாகச் செயலியை உருவாக்கியுள்ளனர். மேலும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். அதில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால் போதும் வருமானம் கொட்டும் என்று கூறி இவர்கள் பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்றுள்ளனர்.விளம்பரங்கள்: 360 ரூபாய் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்ற இந்த நிறுவனம் தினசரி விளம்பரங்களைப் பார்த்தால் பணம் கொடுத்து வந்துள்ளது. மேலும், ஒருவர் மற்றொருவரை இதில் சேர்த்தால் அதற்கும் போனஸ் போன்ற தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பி பல நூறு பேர் இந்தியச் செயலியில் முதலீடு செய்துள்ளனர். இதற்கிடையே இந்த நிறுவனம் மோசடி செய்வதாகப் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீபத்தில் விசாரணைக்காக இந்த நிறுவனத்தின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் நிறுவனத்திற்கு ஆதரவாகப் பல ஆயிரம் பேர் கோவை நீலாம்பூர் L&T பைபாஸ் சாலையில் திரண்டனர். மோசடி புகாருக்கு உள்ளான நிறுவனத்திற்கு ஆதரவாகவே திடீரென இப்படி பொதுமக்கள் திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
வருமானம்: அங்கே திரண்ட பலரும் இந்த நிறுவனத்தில் பல லட்சம் முதலீடு செய்தவர்கள். வந்தவர் பெரும்பாலும், "இதுவரை ஒரு முறை கூட எங்களுக்கு வரும் வருமானம் சொன்ன நாளில் வராமல் போனதே இல்லை. ரூ.6, ரூ. 15 என எவ்வளவு குறைந்த தொகையாக இருந்தாலும் சரியான நேரத்தில் வந்துவிடும்" என்றனர். இன்னும் சிலரோ பல லட்சத்தை இதில் முதலீடு செய்துள்ளதாகவும் தங்கள் குடும்பே இப்போது இதை நம்பிதான் இருப்பதாகவும் தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க திடீரென பொதுமக்கள் கூடியது எப்படி என்பது குழப்பமாகவே இருந்தது.
இந்தச் சூழலில் தான் நிறுவனத்துக்கு ஆதரவாகப் போராட வரவில்லை என்றால் வருமானம் நின்று விடும் என்று சிலர் மிரட்டல் விடுக்கும் வகையில் மெசேஜ் அனுப்பியதாகத் தகவல் வெளியானது. சிலர் நிறுவனம் தொடர்பாகத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும் அனைவரும் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் தவறாமல் வர வேண்டும் என்று கூறி மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும் என்றும் கூறி மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
வழக்குப்பதிவு: அதேநேரம் நிறுவனத்தின் உரிமையாளர் தாங்கள் எந்தவித மோசடியிலும் ஈடுபடவில்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே MYV3Ads என்ற இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியானந்த் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
அனுமதி இல்லாமல் கூட்டம் கூடியது தொடர்பாக விஏஓ ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் எம்.எல்.எம்.நிறுவனத்திற்கு ஆதரவாகக் கூடிய மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக