tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பாஜக இடையே பல ஆண்டுகளாகக் கூட்டணி இருந்த வந்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் எனப் பல தேர்தல்களைக் கூட்டணி அமைத்தே இரு தரப்பும் சந்தித்தனர்.
Rama Srinivasan says AIADMK will need to pay the price if they dont come to BJP alliance
ஆனால், இந்தக் கூட்டணியில் கடந்தாண்டு பிளவு ஏற்பட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகக் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.அதிமுக நிலைப்பாடு: இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கூட தேர்தல் நெருங்கும் போது இரு தரப்பும் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள் என்றே திமுக உள்ளிட்ட எதிர்த் தரப்பு கூறி வந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இனிமேல் பாஜக உடன் கூட்டணி என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதன் மூலம் லோக்சபா தேர்தலுக்கு அதிமுக தனது தலைமையில் கூட்டணியை அமைக்கும் எனத் தெரிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக தேர்தல் நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது. பிரச்சார பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள பாஜக, தேசியளவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த முறை தமிழகத்தில் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராம சீனிவாசன் சொல்வது என்ன: இதற்கிடையே பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அதிமுக கூட்டணி தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பிரபல வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களை பாஜக உடன் கூட்டணி வைத்துத் தான் அதிமுக தேர்தலைச் சந்தித்தது. ஆனால், இப்போது கூட்டணி இல்லை என்கிறார்கள். பசு தோல் போர்த்திய புலி போல இருந்தால் அதைப் பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். பொதுமக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
தமிழ்நாட்டில் இப்போது இஸ்லாமியர் வாக்குகள் 13%ஆக இருக்கிறது. இஸ்லாமியர்கள் இந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் 13% இஸ்லாமிய வாக்குகளில் !% வாக்குகளைப் பெறுவதே எடப்பாடி பழனிசாமிக்குக் கடினம்..
பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்: கடந்த காலங்களில் பாஜக உடன் கூட்டணி வைத்த அதிமுகவினர்.. இப்போது கூட்டணி இல்லை என்கிறார்கள். பாஜக உடன் கூட்டணிக்கு வராவிட்டால் வரும் காலங்களில் அதிமுக அரசியல் ரீதியாக வருத்தப்பட வேண்டி இருக்கும். இங்கு அனைவரும் பாஜகவைச் சாதாரணமாகக் கருதுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை என்பதை அவர்களே தெரிந்து கொள்வார்கள். அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும்" என்று அவர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ராம சீனிவாசன் கூறியுள்ள இந்த கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர், "நான் தந்த பேட்டி பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது...
எந்த இடத்திலும் நான் அண்ணா திமுகவை குறை சொல்லியதில்லை சில அரசியல் எதார்த்தங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது என்பதாகத்தான் எனது கருத்து இருந்தது... தொடர்ந்து ஊடகங்களில் அண்ணா திமுக கூட்டணி வேண்டும் என்றும் அவர்கள் எங்கள் கொள்கை கூட்டாளிகள் என்றும் பேசி வருபவன் நான். இது போன்ற சர்ச்சைகளுக்கு எனது இந்த பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக